"நாளதுவரையில் வெளியான நாவல்களுள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்று கேட்டால் 'கமலாம்பாள் சரித்திரம்' என்று கூசாமல் சொல்லிவிடலாம். கமலாம்பாள் சரித்திரத்தின் வழியேதான் தமிழ் நாவல் சுடர் விட்டுக்கொண்டு போகிறது" இது எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி அவர்களின் கருத்து. "கமலாம்பாள் சரித்திரம் என்ற ஒரே நாவலின் மூலம் சென்ற நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர் என்ற புகழ் ஒருமுகமாகக் கிடைக்கப்பெற்ற நாவலாசிரியர் பி.ஆர். ராஜமய்யர். இந்த நாவலின் முதல் பதிப்பு அவர் காலத்திலேயே வெளிவந்திருக்கிறது. கமலாம்பாள் நாவலுக்குப் பிறகு அதோடு ஒப்பிடக்கூடிய தமிழ் நாவல் இன்னும் வரவில்லை," இது சி.சு.செல்லப்பா அவர்களின் பாராட்டு. "பி.ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரத்தை நீ படிக்கவேண்டும். இந்நாவல் தனிச்சிறப்பு வாய்ந்தது," தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிப் புகழ்ந்துரைக்கிறார் தீரர் சத்தியமூர்த்தி. மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை, பி.எஸ். ராமையா உள்ளிட்ட பலராலும் தினமணி, சுதேசமித்திரன், சித்தாந்த தீபிகை, மெட்ராஸ் மெயில், இந்தியன் சோஷியல் ரிஃபார்மர் உள்ளிட்ட அக்கால இதழ்களாலும் பாராட்டப்பட்ட நாவல் கமலாம்பாள் சரித்திரம். 'அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்' என்ற தலைப்பில் விவேக சிந்தாமணி மாத இதழில் 1893ம் ஆண்டுமுதல் மூன்றாண்டுகள் தொடராக எழுதப்பட்ட இந்த நாவல், பின்னர் 'ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்' என்ற தலைப்பில் 1896ல் நூலாக வெளியானது.
தமிழில் வெளியான முதல் தொடர்கதை; தமிழில் முதன்முதலில் பெண்ணை மையப்பாத்திரமாக வைத்து, பெண்பெயரில் தலைப்புச் சூட்டி எழுதப்பட்ட முதல் நாவல்; ஆங்கில நடையின் தாக்கமின்றி எழுதப்பட்ட யதார்த்தமான முதல் தமிழ் நாவல்; தமிழில் தத்துவம்பற்றிப் பேசிய முதல் நாவல்; இரு தலைப்புகள் கொண்ட முதல் நாவல் என்பது உட்படப் பல்வேறு சிறப்புகளை உடையது இந்நாவல். இதனை எழுதிய பி.ஆர். ராஜம் ஐயர், 1872ம் ஆண்டில் வத்தலகுண்டில் பிறந்தார். சாதாரண விவசாயக் குடும்பம். தந்தைக்கு இருந்த கொஞ்ச நிலபுலன்களை வைத்துக் குடும்பம் நடந்தது. திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், உள்ளூர் பள்ளியிலும் கல்வி கற்றார். அக்காலத்து உயர்படிப்பாகிய F.A.வை மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் சேர்ந்து பயின்றார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் B.A. படித்தார். தமிழ் இலக்கியத்தில் தேர்ந்திருந்த ஐயர், கிறிஸ்தவர் பாண்டித்ய சாலைப் பத்திரிகையில் கணித வித்வான் பூண்டி அரங்கநாத முதலியார் அவர்களால் இயற்றப்பட்ட கச்சிக்கலம்பகத்தின் பாடல்களுக்கு விளக்கவுரை ஒன்றை எழுதினார். அதுவே அச்சில் வந்த இவரது முதல் படைப்பாகும். அக்கட்டுரை மூலம் ராஜம் ஐயரின் தமிழ்த்திறனும், புலமையும் அறிஞர்களுக்குத் தெரியவந்தன.
அக்கால கட்டத்தில் இவருக்குத் திருமணமானது. குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. கல்லூரி நூலகத்தில் இவர் படித்திருந்த ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வேர்ட்ஸ்வெர்த், டென்னிசன் போன்றோரின் படைப்புகள் இவரது கவிதை ஆர்வத்தைத் தூண்டின. கம்பன் பாடல்கள் இவரை மிகவும் கவர்ந்தன. வரலாறுபற்றி உலகமே வியக்கும்படியான ஒருநூல் எழுத வேண்டும் என்பதும், அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று, அவற்றின் முன்னேற்றத்தை அறிந்து, அதை நம் பாரதநாட்டிற்கும் பயனுடையதாய் இருக்கும்படி மாற்றங்களைச் செய்யவேண்டும் என்பதும் இவரது விருப்பமாக இருந்தது.
பி.ஏ. முடித்ததும், சட்டம் பயில்வதற்காக சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இறுதித்தேர்வில் வெற்றிபெற இயலவில்லை. அந்தத் தோல்வி இவரை நிலைகுலையச் செய்தது. ஏற்கனவே அதிக சங்கோஜம் கொண்டவராகவும், தனிமை உணர்ச்சி கொண்டவராகவும் இருந்த ஐயர், மேலும் தன்னுள் ஒடுங்கினார். விரக்தி அடைந்த நிலையில் இருந்த இவருக்குத் தாயுமானவரின் நூல்தொகுப்பு கிடைத்தது. அது இவரது உள்ளத்தில் புதியதோர் எழுச்சியைத் தோற்றுவித்தது. எது நிலையானது, எது நிலையற்றது, வாழ்வதற்கு என்ன தேவை என்பதையெல்லாம் ஆழச்சிந்தித்து உணர்ந்தார். கைவல்ய நவநீதம், தத்துவராய சுவாமிகளின் பாடல்கள் போன்றவை இவரது உள்ளத்தை ஞானமார்க்கத்தில் செலுத்தின. விவேக சிந்தாமணி மாத இதழில் 'கமலாம்பாள் சரித்திர'த்தை எழுதும் வாய்ப்பு வந்தது. "இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஓர் அமைதியற்ற ஆன்மா, பல கஷ்டங்களை அனுபவித்து, இறுதியில் நிர்மலமான ஓர் இன்ப நிலையை அடைந்ததை விவரிப்பதே இந்த கிரந்தத்தின் முக்கிய நோக்கம்" என்பதைக் கருதுகோளாகக் கொண்டு அந்த நாவலை அவர் எழுதியிருந்தார். பல்வேறு பழமொழிகளை, குட்டிக் கதைகளை, வேத, வேதாந்தக் கருத்துக்களை மிக எளிய நடையில் மனதில் பதியும்படி அந்த நாவலில் அவர் சொல்லியிருந்தார். சமூகம், பெண் நலம், குடும்பப் பிரச்சனைகள், நகைச்சுவை, ஆன்மிகம், தத்துவம் போன்ற பலவற்றை உள்ளடக்கமாகக் கொண்டிருந்த அந்தத் தொடர்நாவலுக்கு அக்கால வாசர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. பாடநூல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாவல், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாகவும் வைக்கப்பட்டது.
தமிழின் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரம்' 1879ல் வெளிவந்தது. அதன்பிறகுதான் (1893) இந்த நாவல் வெளிவந்தது என்றாலும், பாத்திரப் படைப்பிலும், கதை சொல்லும் நேர்த்தியிலும், உருவகத்திலும், நாவல் அமைப்பிலும் இதுவே முதல் நாவலாக வைத்து மதிக்கத் தகுந்தது. அசன்பே சரித்திரம் இதற்கு முன்பே வெளியான இரண்டாவது நாவலாகப் பிற்காலத்தில் அறியப்பட்டாலும், படைப்பு மற்றும் உள்ளடகத்தில் கமலாம்பாள் சரித்திரமே தமிழின் இரண்டாவது நாவலாகக் கருதப்படுகிறது. "எந்த தெய்வத்தைத் தொழுது இச்சிறு கிரந்தமானது இயற்றப்பட்டதோ, எந்த சுயம்பிரகாசமான திவ்யதேஜோ ரூபத்தின் பொருட்டு இக்கதையானது நிஷ்காமியமாக அர்ப்பிக்கப்படுகிறதோ, அந்த திவ்விய, மங்கள, குணாதீத, பரிபூரண சச்சிதானந்த ஸ்வரூபத்தை நாமனைவரும் முயற்சித்து அடைவோமாக, அடைந்து அவருடைய குழந்தைகளான மன்குலபாக்கியமாம், பாலர்க்குதவி செய்ய அடியார்க்கடியனாயிருந்து உழைப்போமாக! ததாஸ்து" என்று தனது நாவலை முடித்திருக்கிறார் ராஜம் ஐயர். 1944லேயே ஆறு பதிப்புகள் கண்ட அந்நாவல், பிற்காலத்தில் மேலும் பல பதிப்புகள் கண்டது. மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பலர் ராஜம் ஐயரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல், கம்பராமாயணத்தை அடிப்படையாக வைத்து, கம்பனின் கவிச்சிறப்பையும், சீதையின் பெருமையையும் ஜானகி, நடராஜன் என்ற இருவர் வியந்து உரையாடுவதுபோல் 'சீதை' என்ற தொடரையும் விவேக சிந்தாமணி இதழில் ராஜம் ஐயர் எழுதியிருக்கிறார். (அது நூலாக வெளியிடப்படவில்லை.) பிரம்மவாதின் என்ற ஆங்கிலத் திங்களிதழில் 'Man his littleness and greatness' என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். அக்கட்டுரை அவரது ஆன்மிக அனுபவத்தின் சாரமாகும். உள்ளார்ந்த ஆன்மிகத் தேடலே அவரது எழுத்துக்களாகப் பரிணமித்தன எனலாம். அக்காலகட்டத்தில் சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் என்ற மகானின் அறிமுகம் கிடைத்தது. அவரையே தனது குருவாகக் கொண்டார். அவர்மூலம் குரு உபதேசம் பெற்று, தனது ஆன்மிக, தியான, யோக மார்க்க முறைகளைப் பயின்று வந்தார். இந்நிலையில் நண்பர்கள் மூலம் சென்னைக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தரின் அறிமுகம் கிடைத்தது. விவேகானந்தரது ஆசியுடன் துவக்கப்பட்ட 'பிரபுத்தபாரதா' ஆங்கில இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதில் அவர் இயற்பெயரிலும், புனைபெயர்களிலும் பல்வேறு தத்துவ, வேதாந்த, புராண, சமய விசாரணைக் கட்டுரைகளை எழுதினார். அவை, பின்னாளில் 'வேதாந்த ஸஞ்சாரம்' (ஆங்கிலத்தில் Rambles in Vedanta) என்ற தலைப்பில் 900 பக்கங்கள் கொண்ட நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியானது.
ஆன்மிக வேட்கையின் காரணமாக இவர் தனது உடலைச் சரிவரப் பராமரிக்கவில்லை. அதனால் குடல்சிக்கல் நோய் உண்டானது. இரைப்பை பாதிக்கப்பட்டது. இவர் பணியாற்றிய பிரபுத்தபாரதா இதழும், அதற்குப் பின்புலமாக இருந்த செல்வந்தர்களும் பண உதவி செய்து, சிகிச்சை அளித்து இவரை மீட்டனர். என்றாலும், அது நீண்டநாள் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே நோய் உடலுள் பல்வாறாகப் பெருகி, சிறுநீரகப் பழுது உட்படப் பல நோய்களாகப் பரிணமித்தது. சிகிச்சை பலனளிக்காமல், மே 13, 1898ல் 26ம் வயதில் காலமானார் ராஜம் ஐயர். தனது பெயர் கடல்கடந்து பரவவேண்டும் என்ற ஆசை ராஜம் ஐயருக்கு இருந்தது. அது பிற்காலத்தில் க.நா. சுப்ரமண்யத்தால் சாத்தியமாயிற்று. அவர் கமலாம்பாள் சரித்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேற்குலகம் அறியக் காரணமானார். எழுத்துலகில் நுழைந்து, ஐந்தே ஆண்டுகளுக்குள் காலம் முழுவதும் பேசப்படக் கூடிய சாதனைப் படைப்பைத் தந்த பி.ஆர். ராஜம் ஐயர், தமிழ் படைப்பிலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளராகப் போற்றப்பட வேண்டியவர்.
அரவிந்த் |