அரங்கேற்றம்: திவ்யா உமாபதி
அட்லாண்டாவில் பிறந்து, வளர்ந்த செல்வி. திவ்யா உமாபதியின் நடன அரங்கேற்றம் சென்னை பாரதீய வித்யாபவன் அரங்கத்தில் ஜூன் மாதம் 11ம் தேதியன்று நடைபெற்றது. திவ்யா, 10 வருடங்களுக்கும் மேலாகத் திருமதி. சவிதா விஸ்வநாதனிடம் (நிருத்திய சங்கல்பா நடனப் பள்ளி) நடனம் பயின்று வருகிறார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாகக் கௌளைராகக் காளியின் கவுத்துவம் அமைந்தது. அடுத்ததாகப் பொன்னையா பிள்ளை அவர்களின் ஆரபிராக ஜதீஸ்வரம். மிக நீண்ட கோர்வைகளைக் கொண்ட இந்த நடனத்தை அநாயாசமாக ஆடினார் திவ்யா. பிறகு திரு. மூலைவீடு ரங்கஸ்வாமி நட்டுவனார் எழுதி, திருமதி. ருக்மிணிதேவி வடிவமைத்த 'சலமேல' என்ற நாட்டைக்குறிஞ்சி ராக வர்ணத்திற்கு ஆடினார்.

இடைவேளைக்குப்பின் திரு. ஸ்ரீதர் ஆராவமுதன், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பிஹேவியர் மொமெண்டம் இந்தியா ஃபௌண்டேஷன் ஆற்றிவரும் பணிகள்பற்றிப் பேசினார். திவ்யா பின்னர் சுப்பிரமணிய பாரதியின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்ற ராகமாலிகைக்கு நடனம் ஆடினார். அடுத்துப் பாபநாசம் சிவனின் "ஆனந்த நடமிடும் பாதம்" என்ற கீர்த்தனத்திற்குத் தாண்டவமாடினார். இறுதியாகத் லால்குடி ஜெயராமனின் தில்லானாவுக்கு விறுவிறுப்பாக ஆடினார்.

இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் திருமதி. அகிலா. குரு திருமதி. சவிதா நட்டுவாங்கம் செய்தார். வாய்ப்பாட்டு: திருமதி. ஜோதிஷ்மதி ஷ்ரீஜித்; மிருதங்கம்: திரு. ஷ்ரீஜித்; குழல்: திரு. சசிதரன்; வயலின்: திரு. கலையரசன்; ஒளியமைப்பு: திரு. வெங்கடேஷ் கிருஷ்ணா. திவ்யா 10 வருடங்களுக்கு மேலாகத் தமிழும் பயின்று வருகிறார்.

லக்ஷ்மி சங்கர்,
அட்லாண்டா

© TamilOnline.com