FeTNA: தமிழ் தொழில்முனைவோர் மாநாடு
ஜூலை 2, 2016 அன்று நியூ ஜெர்சியின் ட்ரென்டனில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் பேரவையின் (FeTNA) 29ம் ஆண்டுவிழாவின் இணை அமர்வாகத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு (TEFCon) நடைபெற்றது. இதில் பல்வேறு துறையைச் சார்ந்த 30 சிறப்பு அழைப்பாளர்கள் அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவிலிருந்தும் வந்து பங்கேற்றனர். மாநாட்டுத் தலைவர் திரு ராம் நாகப்பன் (CIO, Pershing, BNYMellon Co.) இம்மாநாட்டின் நோக்கமாக 'Link, Learn, Lead' எனக் குறிப்பிட்டதை ஒத்தே இதன் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

விஜய் TV சூப்பர் சிங்கர் புகழ் ஹரிப்பிரியா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, பேரவைத் தலைவர் திரு. நாஞ்சில் பீட்டர், பேரவை இயக்கக் குழுத் தலைவர் முனைவர் பி.சுந்தரம், தலைவி திருமதி. உஷா கிருஷ்ணகுமார் ஆகியோர் மாநாட்டைத் துவங்கி வைத்தனர்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னணி நிறுவனங்களான TCS-ன் CEO திரு N. சந்திரசேகரும், மற்றும் CTS-ன் EVP திரு R. சந்திராவும் காணொளி வாயிலாக தொழில்நுட்பத் துறையில் தமிழர்களின் பங்களிப்பைப் பற்றியும், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்குத் தொழில்முனைவு எவ்வளவு முக்கியம் என்பதுபற்றியும் பேசினர்.

பிரபல நடிகரும் தொழிலதிபருமான திரு. அரவிந்த்சுவாமி முக்கிய உரையாற்றினார். வசதியிருந்தும் தன் தந்தை தன்னைக் கஷ்டங்கள் அறியுமாறு வளர்த்ததும், சுயமாக சம்பாதிக்கத் தூண்டியதும்தான் தமது தொழில் முயற்சிக்கு முதல்படி என்று கூறினார். தன் குடும்பத் தொழிற்சாலையிலேயே ஒரு அப்ரென்டிஸாக வேலைசெய்தது போன்ற அனுபவங்களே தனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது என்றார். தொடர்ந்து, தொழிலதிபர் Dr. வீரப்பன் சுப்பிரமணியன், (Founder and CEO, Novel Labs), ஒரு மாணவனாகத் தொடங்கி, தொடர் தொழிலதிபராகிய தனது வெற்றிப்பயணம் பற்றிப் பேச அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் கொடுத்த அறிவுரை "சிக்கனமாய் இருங்கள், பொறுப்புடன் இருங்கள், தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள்!" என்பதுதான்.

இளந்தொண்டூழியர்கள் நிஷா வெங்கடேஷ், மஹிகா விவேக் இருவரும் "தொழில்சூழலில், இடர்களைத் தாண்டிப் பெண்களின் சமபங்களிப்பு ஏன் அவசியம்" என்பதைப் பற்றிப் பேசினர்.

முதன்முறையாக நடத்தப்பட்ட "Women in Business" அமர்வை அரவிந்த் சுவாமி மட்டுறுத்தினார். இதில் ஜான்ஸி கந்தசாமி (VP, GE Nuclear), விஜயலட்சுமி நாச்சியார் (CEO, Ethicus), பெரியகருப்பன் (Founder, Foodology), சுபாஷினி வணங்காமுடி (Founder, Satori Studios), வீணா குமாரவேல் (Founder, Naturals Salon) ஆகியோர் பங்கேற்றனர். எதார்த்தமான ஆனால் அழுத்தமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்தார் Ampere Electric நிர்வாகி ஹேமலதா அண்ணாமலை.

ப்ளேஸ் கண்ணன் பணத்தை எப்படி நல்வழியில் செலவுசெய்வது என்பதுகுறித்துச் சொன்னார். லைப் ஹெல்ப் சென்டர் என்னும் NGO மூலம் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு மருத்துவவசதி, வீட்டுவசதி போன்றவற்றை இவர் செய்துவருகிறார்.

மருத்துவத்துறையில் மின்னியல் தேவைகள் குறித்த அமர்வை ஒருங்கிணைத்து நடத்தினார் சிவா நடராஜா (GM, IMS Health). இதில் பிரமிளா ஸ்ரீனிவாசன் (CEO, CharmEHR), மஹேஷ் நாராயணன் (CEO, PepVax), சஞ்சய் முரளி (Neural Therapeutics), வீரப்பன் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மாநாடு 'ப்ராடக்ட் லான்ச்' என்னும் வாய்ப்பை அளித்தது. இதில் யோசி ப்ரதர்ஸ் 'Yosi' App ஐ வெளியிட்டார்கள். புதுமை புகுத்துதல் பற்றி உரையாட வந்தனர் சுஜா சந்திரசேகரனும் (CIO, கிம்பெர்லிக்ளார்க்), ஈஷ் சுந்தரமும் (CIO, ஜெட்ப்ளூ ஏர்வேஸ்).

அடுத்த அமர்வான "IT சேவைகள்: வாங்கும், விற்கும் தரப்பு இடையூறுகள்", மேஜர் கிருஷ்ணா சாரி தலைமையில் நடைபெற்றது.

பத்ரி ராம்கி (CEO, Informatic Technologies), பாலா பாலசுப்ரமணியன் (CEO, கார்யா டெக்னாலஜிஸ்) ஆகியோர் விற்கும் தரப்பில் எப்படி பிரச்சனைகளைச் சமாளித்தனர் என்பதைக் குறித்துப் பேசினர். வாங்குவோர் தரப்பில் பிரேம் அபூர்வசாமி (National Labor Relations Board), பிரசன்னா கோபாலகிருஷ்ணன் (CIO, Boston Private) பேசினர்.

மாநாட்டின் சிறப்பம்சான Pitchfest-ல் 10 தொடக்க நிறுவனங்கள் தங்கள் தொழில் யோசனையை, நடுவர்குழு, முதலீட்டாளர் மற்றும் வழிகாட்டுவோர் முன்னிலையில் வழங்கினார்கள். இதை மட்டுப்படுத்தினார் கார்த்திக் சுந்தரம் (Purple patch Services). நிகழ்ச்சியின் நிறைவில் தொழில் சாதனையாளர் மற்றும் புரவலர்களுக்கு விருதுவழங்கிக் கெளரவித்தார்கள். குறிப்பாக 'Dosa Man' திருக்குமரன். இவர் 15 வருடங்களாக நியூ யார்க் நகரில் தோசை மற்றும் வீகன் லஞ்ச் வியாபாரம் செய்கிறார். இவரது தரமான, தனித்தன்மை வாய்ந்த உணவிற்கு உலகெங்கும் விசிறிகள் உள்ளனர்.

பலதரப்பினரையும் ஒன்றிணைத்த இந்த மாநாடு ஒருமித்த வரவேற்பைப் பெற்றது.

சாந்தி முத்தையா,
நியூ ஜெர்சி.

© TamilOnline.com