மூத்தோர் இசை நிகழ்ச்சி
ஜூலை 24, 2016 அன்று ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் பங்கேற்ற இசைநிகழ்ச்சி ஒன்று அன்பர் இல்லத்தில் நடைபெற்றது. பாடியவர்களில் இருவர் ஐ.ஐ.டியில் படித்தவர்கள். இருவர் மருத்துவர்கள். ஒருவர் ஐ.ஐ.டி.யில் படித்தவரின் மனைவி. ஒருவர் கணிதப் பேராசிரியர். இவர்களை ஒருங்கிணைத்த குரு திருமதி. கல்யாணி சதானந்தத்தின் மகன் புகைப்படக்காரராகவும் இயங்கினார். இவர், ஐ.ஐ.டி. முடித்துவிட்டு நியூரோசர்ஜன் ஆகப் பணிபுரிகிறார். இந்நிகழ்ச்சியில் பாடியவர்கள் ராதா ரமேஷ், கீதா ஸ்வாமிநாதன் (எம்.பி.ஏ., சி.ஏ.), ஜயந்தி, சுகுமார் (ஐ.ஐ.டி), அனு, ஜயராம், சரஸா நாராயணசுவாமி, ராஜி அனந்தா, டாக்டர் கிருத்திகா ஸ்ரீதர், டாக்டர் கலா கிருஷ்ணா (கணிதப் பேராசிரியர்), கீதா கண்ணன் ஆகியோர்.

முதலாவதாக 'சாயீஸம் விநாயகா' என்கிற ஹம்ஸத்வனி ராகக் கீர்த்தனையை குரு. கல்யாணி சதானந்தமே பாடி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்த 'கஜவதனா' என்கிற ஸ்ரீரஞ்சனி க்ருதியைத் தொடர்ந்தது 'வேங்கட்ரமணா' என்கிற கல்யாணி ராகத்தில் பாபநாசம் சிவனின் பாடல். பின்னர் 'ஸ்ரீவிஸ்வநாதம்' என்கிற 14 ராகங்களைக் கொண்ட தீக்ஷிதர் பாடலை அபாரமாக நிறுத்தி அனுபவித்துப் பாடினர். கல்லிடைக்குறிச்சி சுந்தரமய்யரின் 'மாமதுர மீனாட்சி' என்கிற பாகேஸ்ரீ ராகப்பாடல் பாடப்பெற்றது. ஜயதேவரின் அஷ்டபதியான நாதஹரேயை ராகமாலிகையாகப் பாடினர். அடுத்து 'இஷ்வாகுகுல வம்ஸ' என்ற க்ருதியைப் பாடினர். 'பவநாத்மஜா' என்கிற தீக்ஷிதரின் சலநாட்டை கீர்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பக்கவாத்தியங்கள் எதுவுமில்லாமல் ஆத்மார்த்தமாக அனுபவித்துப் பாடினர். கேட்கவும் ஆனந்தமாக இருந்தது.

இந்திரா பார்த்தசாரதி,
கலிஃபோர்னியா

© TamilOnline.com