அரங்கேற்றம்: அன்னபூர்ணா ராம்மோகன்
ஆகஸ்ட் 14, 2016 அன்று ஃபுட்ஹில்ஸ் கல்லூரி ஸ்மித்விக் கலையரங்கில் செல்வி. அன்னபூர்ணா ராம்மோகனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் மைத்ரி நாட்யாலயாவின் குரு திருமதி ஷிர்ணிகாந்திடம் ஐந்து ஆண்டுகளாக நடனம் பயின்று வருகிறார். புஷ்பாஞ்சலி, சூர்யாஷ்டகம், தேவி ஸ்திதி, சாருகேசி வர்ணம் இவற்றிற்குப் பாராட்டுக்கள் குவிந்தன. ஸ்ரீகிருஷ்ண பக்தையின் மனதைச் சித்திரிக்கும் வகையில் அமைந்த இந்த வர்ணத்திற்கு அன்னபூர்ணா அருமையாக நடனமாடினார்.

இடைவேளைக்குப் பிறகு மஹாராஜா ஸ்வாதித் திருநாளின் சிவஸ்துதிக்கு அன்னபூர்ணா ஜதிகளுடன் ஆடியது பார்வையாளர்களைக் கவர்ந்தது. பிறகு துளசிதாஸரின் "துமக்குச்சலத்" ராமரைப்பற்றிய பாடலுக்கு அன்னபூர்ணாவின் ஆடலும் குருவின் நடன அமைப்பும் சிறப்பாக இருந்தன. பாலமுரளிகிருஷ்ணாவின் 'கிருஷ்ணா தில்லானா' மற்றும் மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

வாசுதேவன் ஐயங்கார் (வாய்ப்பாட்டு), தஞ்சாவூர் கேசவன் (மிருதங்கம்), வினய் ராவ் (புல்லாங்குழல்), நயன்தாரா நரசிம்மன் (வயலின்) மற்றும் குரு ஷிர்ணி காந்தின் நட்டுவாங்கம் ஆகியவை நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.

ராஜேஷ்குமார்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com