அபிநயா: பரதநாட்டிய அரங்கேற்றங்கள்
சான் ஹோசேயில் உள்ள அபிநயா டான்ஸ் கம்பெனி நாட்டியப்பள்ளி மாணவர்களின் கோடைக்கால அரங்கேற்றங்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு ஜுலை31ம் தேதி தொடங்கி இந்த அரங்கேற்றங்கள் நடைபெற்றன.

வர்ஷா ராகவன்
ஜுலை 31, 2016 அன்று செல்வி. வர்ஷா ராகவனின் அரங்கேற்றம் சான்ட க்ளாராவில் உள்ள மிஷன் சிட்டி பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் அரங்கில் நடைபெற்றது. காமாட்சி அம்மனின் அழகை வர்ணித்த அபிநயம் வெகு அழகு. "பாவயாமி ரகுராமம்" பாடலுக்கு ராமாயணத்தின் பல காட்சிகளை தத்ரூபமாக 45 நிமிடங்களில் வழங்கியது பாராட்டத்தக்கது. "ஷங்கர ஸ்ரீகிரி" சிவதாண்டவம் வர்ஷாவின் நடனப்பயிற்சியை எடுத்துக்காட்டியது. நிறைவாக பாலமுரளி கிருஷ்ணாவின் கதனகுதூகலத் தில்லானா குதூகலம் தந்தது.



தனுஜா கொப்பூர்
ஆகஸ்ட் 14, 2016 அன்று செல்வி. தனுஜா கொப்பூரின் அரங்கேற்றம் உட்சைடு மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடந்தேறியது. பரதநாட்டிய கலை மொழிக்கு அப்பாற்பட்டது என உணர்த்தும் வகையில் மராத்தியில் நர்த்தனகணபதியை வந்தனம் செய்தமுறை அபாரம். நுணுக்கமான அசைவுகளைக் கொண்ட ஜதீஸ்வரம் கண்ணுக்கு விருந்து. சிவபெருமானை இறுக்கித் தழுவிய மார்கண்டேயன் யமனுடன் போராடியது நெஞ்சை உருக்கியது. தில்லானாவில் நிகழ்ச்சியை முடிக்குமுன் மராத்தி பஜன் சபரியின் அளவுகடந்த அன்பை வெளிக்காட்டி, தனுஜாவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டியது.



அபிநயா ஸ்ரீகாந்த்
ஆகஸ்ட் 21, 2016 அன்று செல்வி. அபிநயா ஸ்ரீகாந்தின் அரங்கேற்றம் சான்ட க்ளாரா மிஷன் சிட்டி பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் அரங்கில் நடந்தது. மல்லாரியுடன் தொடங்கி, குரு வணக்கத்துடன் ஆரம்பித்தவுடனே தன் நடனத்திறனால் மனதைக் கவர்ந்தார் அபிநயா. அவரின் 45 நிமிட ஏழுமலையானின் நடன வர்ணனை பார்வையாளர்களை திருப்பதிக்கே கொண்டுசென்றுவிட்டது. "ஆடஹோடல்லே" பாடலுக்கு அன்னை யசோதையிடம் ஸ்ரீகிருஷ்ணனின் கண்ணீர்மல்கிய கெஞ்சல்கள், குறும்பு விளையாட்டுகள், பார்த்தோர் கண்களில் ஈரங்கசியச் செய்தது. ரேவதிராகத் தில்லானா நிறைவு அடையும்போது, அடாடா நிகழ்ச்சி நிறைவுற்றதே என்று ஏங்குமளவுக்கு நடனம் இருந்தது.

இந்த அரங்கேற்றங்களுக்குக் குரலிசை கொடுத்த மேகா ரங்கநாதன் மற்றும் ஆஷா ரமேஷ், பக்கவாத்தியக் கலைஞர்கள் ரிஷிகேஷ் சாரி, அமித் ரங்கநாதன், சஷிதர் மதுகுலா, ஸ்ருதி சாரதி, நாராயணன், மற்றும் சாந்தி நாராயணன், நட்டுவாங்கம் அமைத்த மைதிலி குமார் , ரசிகா குமார்-சிவ்பூரி, மாளவிகா குமார்-வாலியா அபாரம்.

அரங்கேறிய மூவருக்கும் "நிருத்தியமணி" என்ற விருதினைப் பெருமிதத்துடன் வழங்கினார் ஆசிரியை மைதிலி குமார்.

வரப்போகும் நிகழ்வுகள்:
செப்டம்பர் 18: அஞ்சலி சந்தோஷின் அரங்கேற்றம்
நவம்பர் 4, 5: "வானர லீலா"

ரம்யா சுப்ரமணியன் & பார்வதி ராமச்சந்திரன்,
விரிகுடாப்பகுதி, கலிஃபோர்னியா

© TamilOnline.com