அரங்கேற்றம்: ஆகாஷ் மணி ராமன்.
ஆகஸ்ட் 14, 2016 அன்று மாலை ஆகாஷ் மணி ராமனின் மிருதங்க அரங்கேற்றம், கலபாசஸ் அகூரா ஹில்ஸில் நடைபெற்றது. மிருதங்கமேதை உமையாள்புரம் சிவராமன் அவர்களின் பிரதான சிஷ்யரான ஈரோடு நாகராஜனின் மாணவராவார் ஆகாஷ்.

சமீபத்தில் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார் பெற்றிருக்கும் இளைஞர் குன்னக்குடி பாலமுரளிக்ருஷ்ணா கச்சேரியில், வி.வி.எஸ். முராரி வயலின், ஸ்ரீநிவாஸன் மோர்சிங் வாசிக்க இவர்களுடன் ஆகாஷின் அரங்கேற்றம் நடைபெற்றது. கல்யாணி வர்ணம் ஆரம்பமே திஸ்ரகதியில் களைகட்டியது. வாதாபி கணபதிம் பஜேவும் தொடர்ந்த தேவதேவ கலயாமிதேவும் அவற்றின் சர்வலகு ஸ்வரங்களும் செம்மங்குடி வழியில் பாலமுரளி குறிப்பிடத்தக்க மாணவர் என்பதற்குக் கட்டியம் கூறின. பஹுதாரியில் அச்சுத தாசரின் சதானந்த தாண்டவத்தை அடுத்து வந்த சிம்மேந்திர மத்யமத்தை அந்த ராகத்துக்கேயுண்டான நளினத்தையும் வேகத்தையும் முரளியும் முராரியும் மழைக்கால மாலைநேரத் தேநீர்போலச் சுவையும் சூடும் பறக்கப் பரிமாறினர். 'நின்னே நம்மிதி' என்ற கிருதிக்கு வழங்கப்பட்ட கார்வைக் கணக்குகள் அபாரம். அதை ஆகாஷும் புரிந்து வாசித்துப் போஷித்தது அருமை.

யதுகுல காம்போஜியில் அருணாச்சலக் கவிராயரின் 'யாரென்று ராகவனை எண்ணி' தென்றலாய் உள்ளத்தை வருடியது; ஆதி ருத்ரன் என்று கம்பீரமாய்ச் சரணம் ஆரம்பிக்கையில் டி.என். சேஷகோபாலன் நினைவுக்கு வந்தார். 'மனிதகுலத்தின் நாயகனே உன்னையன்றி யாருளர் எனக்கு' எனத் தியாகராஜர் அடாணாவில் உருகியது 'அனுபம குணாம்புதி'யில் பூரணமாக வெளிப்பட்டது. நவரசங்களில் அடாணா வீரத்தை உரைக்கும் ராகமென்று அபிப்பிராயமிருந்தாலும், அதில்தான் 'ஏல நீ தயராது' என்று தியாகைய்யரும் 'நீ இரங்காயெனில் புகலேது' என்று பாபநாசம் சிவனும் உருகியிருக்கிறார்கள்.

அன்றைய தினத்தின் பிரதான ராகமாக முழங்கியது மோஹனம். என்னைக் காப்பாற்ற நடந்து வந்தாயா ராமா என்று உருகும் தியாகராஜரின் உருக்கத்தைச் சொல்லும்போதும் ராமனின் ராஜநடையின் மிடுக்கைக் காட்டும்போதும் வனஜநயனா என்று வர்ணிக்கும் வரிகள் எத்தனை அழகு! பிருகாக்கள் பொழிந்தன. நிரவலைத் தொடர்ந்து விஸ்தாரமாய் கீழ்க்கால மத்யமகால ஸ்வரங்கள் குறைப்பு கோர்வையுடன் ஜ்வலித்தன. மிருதங்கமும் மோர்சிங்கும் இணைந்த தனி ஆவர்த்தனத்தில் நடைகளின் நாதமும் சுகமும் கோர்வைகளில் லயவேலைப்பாடுகளும் திஸ்ரமும் கண்டமும் கதிபேதங்களாயும் ஒளிர்ந்தன. மிஸ்ர குறைப்பு மிகவும் சிறப்பு. அதற்கு மகுடமாக உமையாள்புரம் சிவராமன் பாணி என்ற முத்திரையை எடுத்துக்காட்டும் விதமாய் ஃபரன்களும் மோரா கோர்வை மேல் காலம் சேர்த்து எத்தனை விறுவிறுப்பு! ரசிகர்களை இருக்கை நுனிக்குக் கொண்டுவந்த தனியாவர்த்தனம் அது. பிற உருப்படிகளாக 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ', திருப்புகழ், கமாஸ்ராகத் தில்லானாவைத் தொடர்ந்து மங்களத்துடன் கச்சேரி இனிதே நிறைவடைந்தது.

அரங்கேற்றம் எப்படி ஒரு மாணவனைக் கலைஞனாக்கும் முதல் படியில் இருத்துகிறது என்று மஹாபெரியவரை நினைவுகூர்ந்து ஈரோடு நாகராஜன் பேசினார். கச்சேரியை குரு உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்குச் சமர்ப்பித்தார். முக்கிய விருந்தினரான சான் டியகோ சி.எம். வெங்கடாசலம் இந்தியக் கலைகளில் குழந்தைகளின் ஈடுபாடு பெருகிவருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

ஆகாஷின் பெற்றோர் திரு, ரமேஷ் ராமன் – ராதா ராமன் தம்பதியர் நன்றி கூற, விழா நிறைவடைந்தது.

திருமதி. இந்திரா பார்த்தசாரதி,
கலபாசஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com