அட்லாண்டா: ஸ்வேதா ரவிசங்கரின் 'நாட்டியமும் நற்றமிழும்'
ஆகஸ்ட் 20, 2016 அன்று ஸ்வேதா ரவிசங்கர் தனது நாடுதழுவிய நடனப் பயணத்தின் அங்கமாக, அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழாவில் 'நாட்டியமும் நற்றமிழும்' என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார்.

முதலாவதாக தனது குருக்களுக்கு வந்தனம் செய்துவிட்டு "கற்பக விநாயகனே" என்ற பாடலுக்கு அருமையாக நடனமாடினார். பின்பு அருணகிரிநாதரின் கந்தர் அலங்கார விருத்தத்தை தொடர்ந்து மதுரை ரா. முரளீதரன் இயற்றிய "முருகன் கவுத்துவம்" பாடலுக்கு அற்புதமாக நடனமாடி பலத்த கைத்தட்டல் பெற்றார். அடுத்து மகாகவி பாரதியார் சிவசக்தியைப் பற்றி எழுதிய "தகத்தகத்தக என்று ஆடோமோ... சிவசக்தி சக்தி சக்தி என்று பாடோமோ" என்ற பாடலுக்கு தத்ரூபமாக ஆடினார். நிறைவாக, மாண்டு ராகத் தில்லானாவிற்கு நேர்த்தியாக நடனமாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

"சந்தம்நிறைந்த, கட்டுக்கோப்பான, பொருள் நிறைந்த பாடலில் நாட்டியம் தவழும்" என்பதாக 'நாட்டியமும் நற்றமிழும்' தலைப்பின் மையக்கருத்தைத் தமது நடனத்தில் நிரூபித்தார். தொகுப்பாளர் ஜெயஸ்ரீ அம்பர்கார் ஸ்வேதாவின் நடனத்தை பற்றி "சாட்சாத் நடராஜப் பெருமானே அரங்கத்தில் வந்து ஆடியதுபோல் இருந்தது" என்று கூறினார்.

சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு. ஜமாலுதீன் ஸ்வேதாவுக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினார். சங்கத் தலைவர் திரு. பிரகாஷ், ஸ்வேதாவின் நாடுதழுவிய நடனப் பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

நடனப் பயணத்தின் அடுத்த கட்டமாக, செப்டம்பர் 10ம் தேதி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு டென்னசி மாகாணம் நாஷ்வில் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கணேசர் கோவில் அரங்கத்தில் 'கணபதி குணநிதி' என்ற தலைப்பில் பரதநாட்டியம் வழங்கவுள்ளார்.

ஸ்வேதா ரவிசங்கர் பதினாறு வருடங்களாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் எண்பத்தி ஐந்துக்கும் மேலான தனி பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகளை வழங்கி விருதுகளை வென்றுள்ளார். இவர் ஒரு அற்புத நட்டுவாங்க கலைஞரும் ஆவார். மேலும் விபரங்களுக்கு: www.swetaravisankar.com

ஸ்ரீதேவி நடராஜன்,
அட்லாண்டா

© TamilOnline.com