அரசியலில் விஜயகாந்த்
செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் மூலம் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் நடிகர் விஜயகாந்த். அவர் வருவாரா? வரமாட்டாரா? என்று பல தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினிகாந்த், ஆன்மீகப் பாதையில் காலடி எடுத்து வைத்துவிட, சற்றும் எதிர்பாராத நேரத்தில் விஜயகாந்த் அரசியல் பாதையில் தன் காலடியை எடுத்து வைக்கிறார்.

விஜயகாந்தின் அரசியல் பிரவேச அறிக்கையும், அதைத் தொடர்ந்து வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் விதத்தில் தன்னுடைய ரசிகர் மன்றங்களை முடுக்கிவிட்ட செயலும் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜயகாந்த் தன்னுடைய ரசிகர்களின் மனதையும் பொதுமக்களின் மனதையும் நாடிபிடித்துப் பார்த்துள்ளார்.

'விஜயகாந்த்தின் அரசியல் வரவு யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?' என்று பட்டிமன்றமே பத்திரிகைகளில் நடந்து வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடப் போவதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜயகாந்த் கூறி வருகிறார்.

கட்சியின் பெயர், கொள்கை இவற்றை இன்னும் விஜயகாந்த் அறிவிக்கவில்லை. தற்போது மாநாட்டுப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய காந்த் தனது கட்சிக்கு யார் வேண்டு மானாலும் வரலாம். மக்களின் பிரச்சனை களைத் தீர்ப்பதுதான் எனது கட்சியின் முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார். செப்டம்பர் 14-ம் தேதி மாநாட்டுக்குப் பின்பு விஜயகாந்த் முழுநேர அரசியல்வாதியாகிறார்.

களம் காணத் தயாராகிவிட்டார் விஜயகாந்த்! இவரின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன இரண்டு கழகங்களும்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com