செப்டம்பர் 2016: வாசகர் கடிதம்
தென்றல் இதழ் மிகச் சிறப்பாக இருக்கிறது. மின்னிதழின் பக்கங்களில் படிக்கப் படிக்கச் சுவை அதிகம். ஆகஸ்டு மாத இதழில் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் நேர்காணலில் ஆன்மீகச் செய்திகள் அதிமதுரமாய் நுகர்ந்தேன். அற்புதம். இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இதுபோன்ற நேர்காணல் ஐயாவிடம் யாரும் இதுவரை காணவில்லை.

கா.ந. கல்யாணசுந்தரம்,
மேடவாக்கம், சென்னை

*****


ஜூன் இதழ் பக்கம் 40ல் கணிதப் புதிர்களில் 1) "19லிருந்து ஒன்றைக் கழித்தால் இருபது வருகிறது. எப்படி? மற்றும் 2) 3-ஐ ஐந்து முறை பயன்படுத்தி மொத்தம் கூடுதல் 31 வரச் செய்ய இயலுமா?" - இந்த இரண்டு புதிர்களும் உண்மையிலேயே மூளைக்கு மிகச்சரியான வேலையைத் தந்தன. ஜூலை தென்றலில் 'நட்பில் உயர்ந்த துரியோதனன்' என்ற கட்டுரையில் ஹரிகிருஷ்ணன் துரியோதனன் கர்ணனை எந்தச் சூழ்நிலையில் கண்டெடுத்து உயர்ந்த நண்பனாக்கிக் கொண்டான் என்பதை ஆழ்ந்த ஆராய்ச்சியோடு எழுதியிருக்கிறார். அத்தோடு மூளைக்கு நல்ல விருந்தையும் 'தென்றல்' தருகிறது.

முனை. சுப்ரமணியன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

*****


தென்றல் ஆகஸ்ட் மாத இதழைச் 'சாதனையாளர்' இதழ் என்று கூறலாம். உத்தமசோழன் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் செல்வராஜ், தமிழின் பிரபல இதழ்கள் பலவற்றிலும் எழுதி முத்திரை பதித்தவர். எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியராக 11 ஆண்டுகளாக 'கிழக்குவாசல்' இதழை வெளியிட்டுவரும் சாதனையாளர். இவர் எழுதிய 'முதல் கல்' கதையின் நாயகன் மருதனும், தனது முயற்சியால் வெற்றிபெற்ற சாதனையாளன்தான். அதுபோல இளம் சாதனையாளர்கள் அனீஷ் கிருஷ்ணன் - கரண் மேதா இருவரது சாதனையும் போற்றத்தகுந்தது. உபன்யாசகர் உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களும் ஒரு சாதனையாளர்தான். உலகமுழுவதும் பயணம் செய்து வைணவ வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பிவரும் இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 'லக்ஷ்மணன் கோடு' சிறுகதையில் வரும் தந்தை கதாபாத்திரமான ரங்கராஜன் எனக்கு ஒரு சாதனையாளராகத் தெரிகிறார். அவரது சிந்தனைகள் மூலம் மனைவியை ஆற்றுப்படுத்துவதும், உலக அறிவும், எதிர்பார்ப்பில்லாத மனோபாவமும் சிறப்பாகக் கதையில் வெளிப்பட்டிருக்கிறது.

ஆர்.கிருஷ்ணன்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

*****


ஆகஸ்ட் இதழில் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உரையாடல் அருமை. இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் காலையில் இவர் உபன்யாசத்தைக் கேட்டுவிட்டுத்தான் நாளைத் தொடங்குகிறார்கள் என்று சொன்னால் மிகையல்ல. அனீஷ் கிருஷ்ணன், கரண் மேத்தாவின் சாதனையும் பிரமாதம்.

கே. ராகவன்,
பெங்களூரு, இந்தியா

© TamilOnline.com