அதிர்ச்சித் தீர்ப்பும் அவசரச் சட்டமும்
சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு அரசியல் வட்டாரத்திலும் மாணவர்கள் வட்டத்திலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

முன்னதாகத் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, மாணவர்கள் சேர்க்கை முறை, கட்டணம் வசூலிப்பு, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பும், இஸ்லாமிக் அகாடமி வழக்கில் வழங்கிய தீர்ப்பும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வித் துறைகளில் திருப்பங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக நிர்வாக ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கும், கட்டணங்களை சுயநிதிக் கல்லூரிகள் நிர்ணயிப்பதற்கும் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

விளக்கங்கள் கேட்டும், பிரச்சனைகளை வலியுறுத்தும் வகையிலும் உச்சநீதி மன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வழக்குகள் தொடுத்தனர். இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.சி. லகோட்டி, நீதிபதிகள் ஒய்.கே. சபர்வால், டி.எம். தர்மாதிகாரி, அருண்குமார், ஜி.பி. மாத்தூர், தருண் சாட்டர்ஜி, பி.கே. பால சுப்ரமணியம் ஆகியோர் விசாரணையின் முடிவில் சிறுபான்மை அல்லது சிறுபான்மை அல்லாத தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றும்படியோ, மொத்த இடங்களில் அரசு ஒதுக்கீடு என்று எடுத்துக் கொள்வதற்கோ ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கேட்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள்-குறிப்பாக, தமிழக அரசியல் கட்சிகள்-இத்தீர்ப்பிற்கு ஆட்சேபம் தெரிவித்தன. ஆனால் தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல் உடனடியாக இது குறித்து நாடாளுமன்றத்தில் ஓர் அவசரச் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை தில்லியில் நேரடியாகச் சந்தித்து மனு ஒன்றையும் அளித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா சுயநிதித் தொழில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அரசு இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியது மட்டுமல்லாமல் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகக் கல்லூரிகளின் நிர்வாகத்தையும் சொத்துகளையும் அரசே ஏற்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக ஏற்றத் தாழ்வுகளைச் சரிசெய்யும் விதத்தில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு எதிரானதாக உள்ள இத்தீர்ப்பு, இனி உயர் கல்வி சமூகத்தில் பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான் மற்றவர்களுக்கு இல்லை என்கிற நிலையை உருவாக்கும் என்று பலர் கருதுகின்றனர்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், மற்ற பிற்பட்ட வகுப்பினருக்கு உயர்கல்வி சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டு முறையில் எல்லாத் தரப்பு மக்களும் உயர்கல்வி கற்க வழி செய்யப்பட்டது. தற்போது உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு எதிரான தாக உள்ளது.

இந்தியா முழுவதும் கட்சி வேறுபாடின்றி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பதிலளித்துப் பேசிய மத்தியப் பணியாளர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் சுரேஷ் பச்செளரி, ''உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் சமூகநீதி பாதிக்கப்படாமல் தடுக்க, சட்டம் கொண்டு வருவது குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இட ஒதுக்கீடு தொடரும் வகையில் சட்டத் திருத்தம் அல்லது மசோதா கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடி வந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர் களைக் கூட்டி விவாதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னதாக, அனைத்துக் கட்சி தலைவர் களுடனும் விரிவான ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

எல்லா மருத்துவ/பொறியியல் கல்லூரிச் சேர்க்கைகளுக்கும் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் இதில் கல்லூரி நிர்வாகங்கள் அநியாய இலாபம் ஈட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் இதே தீர்ப்பு கூறியிருந்தாலும், இட ஒதுக்கீடு பற்றிய பிரச்னை எடுத்த விஸ்வரூபத்தில் இவை அமுங்கிவிட்டன.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com