எல்லாம் பிரம்மம்
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள்.

அவரது சிஷ்யர்கள் தினந்தோறும் குருவை நமஸ்கரிப்பது வழக்கம். அவர்களில் ஒருவன் மேற்கண்ட உபதேசத்தைக் கேட்டபின் அப்படிச் செய்வதை நிறுத்திவிட்டான். குருவைப் பார்த்தும் அவன் தன் இருக்கையைவிட்டு எழுந்து நிற்கக்கூட இல்லை. இந்த வினோதமான நடத்தையைப் பார்த்த குரு, "ஏன் அப்படிச் செய்கிறாய்" என்று கேட்டார். "நீங்கள்தான் நேற்று எல்லாமே பிரம்மம் என்று கூறினீர்களே, அதனால் நம் இருவருக்குள் எந்த வித்தியாசமும் இல்லை, அதனால்தான்" என்று அவன் விடை கூறினான்.

தான் சொன்னது ஒரு வளைதடியைப் போலத் தன்னிடமே திரும்பி வந்ததைக் குரு புரிந்துகொண்டார். சிஷ்யனுக்கு ஒரு பாடம்புகட்ட எண்ணினார். அவர் ஒரு பலகையில் "குரு பிரம்மா" என்று இரண்டு வார்த்தைகளாக எழுதினார். அதேபோலவே "சிஷ்யன் பிரம்மா", "சர்வம் பிரம்மா" என்றும் எழுதிப் போட்டார்.

இந்த மூன்றையும் பார்த்தால், அவற்றில் பிரம்மா என்பது பொதுவாக இருந்தாலும், 'குரு, சிஷ்யன், சர்வம்' என்பவை தனித்தனியாகத்தான் இருக்கின்றன. மூன்று சொற்களும் ஒன்றாகும்போதுதான் எல்லாம் ஒன்றே என்று நீ சொல்லமுடியும். இந்த ஏகத்துவத்தை அனுபவத்தில் பெறும்வரை, சிஷ்யன் சிஷ்யனாகவும், குரு குருவாகவுமே இருப்பார். அந்த வேறுபாடு இருக்கும்வரை சிஷ்யன் குருவுக்கு மதிப்புக் கொடுத்துதான் ஆகவேண்டும். அடிப்படை ஒன்றுதான், ஆனால் அந்த அடிப்படை வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.

இந்த விளக்கத்தைக் கேட்ட சிஷ்யன் தனது தவறை உணர்ந்தான். அதற்குப் பிறகு குருவிடம் மரியாதையோடு நடக்கத் தொடங்கினான்.

ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com