நூறாண்டு கண்ட என்.எஸ். ராமச்சந்திரன்
அட்லாண்டாவாழ் திரு. என்.எஸ். ராமச்சந்திரன் அவர்களது நூறாவது பிறந்தநாள் விழா அவரது மகன்கள் நடத்தும் ஐஸிக்மா நிறுவன வளாகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது. அவர் தனது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழ்மக்கள் அனைவருக்கும் ஒரு பிதாமகர்.

இந்த வயதிலும் அசாத்தியமான உடல், மனோபலம் கொண்டு ஒரு சித்தரைப்போல் இருக்கிறார். புதுப்புது தொழில்நுட்பங்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார். ஐஃபோன், ஐபேட், ஃபேஸ்புக் இவையெல்லாம் இவருக்குத் தண்ணீர்பட்ட பாடு.

வயதானவர்களைக் கண்டாலே எல்லோரும் ஓடுவார்கள். இவர் ஒரு விதிவிலக்கு. "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று நாம் கேட்டால், "அது கிடக்கட்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள்?" என்பார். நம் வீட்டு நாயைப்பற்றிக்கூட மறக்காமல் விசாரிப்பார். அவரைவிட ஒரு தலைமுறை இளையவளான எனக்குப் பாதி விஷயங்கள் மறந்துவிடும்பொழுது இவருக்குமட்டும் எப்படி இப்பொழுதும் ஒரு ரேசர் பிளேடு மெமரி என்று தோன்றும்.

விருந்துபசாரத்திலும் இவரை யாரும் விஞ்சிவிட முடியாது. காபி, தேநீர் வேண்டாமென்றால் இளநீராவது குடியுங்கள் என்று தாமே சமையலறையிலிருந்து கொண்டுவருவார். வீட்டிற்குக் கிளம்பும்பொழுது எதையாவது கட்டிக்கொடுப்பார். மாடிக்கும் கீழுக்குமாக விரைந்து புத்தகங்கள் எடுத்துவந்து படிக்கத்தருவார். கார்வரை நடந்துவந்து வழியனுப்புவார்.

1917ஆம் வருடம் புதுக்கோட்டையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை ரெவெனியூ இன்ஸ்பெக்டர். தாய் குடும்பத்தலைவி. ஸ்வீடிஷ் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற இவருக்கு விவிலியமும், விவிலியக் கதைகளும் நன்கு பரிச்சயம். மகாராஜா கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார். ஒரு நல்ல சாரணர். ஜிம்னேஸ்டிக்ஸ், கால்பந்து, கிரிக்கெட் எதையும் விட்டுவைக்கவில்லை. நடிப்பு, பாடல் எல்லாம் கைவந்த கலைகள். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் இளங்கலைப்பட்டமும், சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் தொழிற்பயிற்சியும் பெற்றார்.

மானாமதுரை ஓவிசி உயர்நிலைப்பள்ளியில் விஞ்ஞான ஆசிரியராகச் சேர்ந்து பின்னர் தலைமை ஆசிரியர் பதவிக்கு உயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேல் அங்கேயே பணிபுரிந்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சகோதரர் திரு. விசுவநாத அய்யர் இவருக்குமுன் தலைமை ஆசிரியராக இருந்தார். அவரிடம் பணியாற்றியதைப் பெரும்பேறாக நினைக்கிறார். பள்ளியைப் பார்வையிட வந்த ராஜாஜி அவர்கள், "அருமையான பள்ளி" என்று வருகையாளர் புத்தகத்தில் எழுதியது இன்றும் தம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது என்கிறார்.

பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் "ஹியூரிஸ்டிக்ஸ்/ டிஸ்கவரி டெக்னிக்" (Heuristics/ Discovery Technique) என்னும் உத்தியை விஞ்ஞான போதனையில் புகுத்தியவர். ராமச்சந்திரன் ஓர் இந்திய ஆர்ம்ஸ்ட்ராங் ஆக இருந்தார்.

மாணவர்கள் விஞ்ஞான உண்மைகளைக் குருட்டு மனனம் செய்து எழுதக்கூடாது, யோசிக்கவேண்டும், பரிசோதிக்க வேண்டும் என்று நினைத்தார். அவர்கள் அறிவியல் மனப்பான்மை உடையவர்களாக (Scientific Attitude) இருக்கவேண்டுமென்று அரும்பாடு பட்டார். அவருடைய மாணவர்களுள் பலர் பெரும்பதவிகளில் இருப்பது இதற்கொரு சான்று. இது தவிரக் கணிதமும், ஆங்கிலமும் இவர் பயிற்றுவித்தார். பள்ளி ஆசிரியர்கள் பூப்பந்துக் குழுவில் விளையாடிப் பரிசுகள் பெற்றவர். ‘கலாவதி’ என்னும் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துப் பலமுறை மேடையேறிப் பணம் சேர்த்து நூலகம் ஒன்று கட்ட உதவியவர். ஓய்வுபெற்ற பின்னர் பொதுத்தொண்டில் ஈடுபட்டார். பென்ஷனர்கள் சங்கத்தை மானாமதுரையில் 1980களில் நிறுவிச் செயல்பட்டார்.

1936ல் ஸ்வர்ணலட்சுமி அம்மாளைக் கைப்பிடித்த இவருக்கு 9 மகன்கள், 18 பேரக்குழந்தைகள், இரண்டு கொள்ளுப்பேரன்கள், ஒரு கொள்ளுப்பேத்தி. இவரது மனைவியும் நல்ல எழுத்தாளர், சமையல், சித்திரக்கலை, சித்திரத்தையல் போன்றவற்றில் வல்லவர்.

ராமச்சந்திரன் தமது பிறந்தநாள் நிகழ்ச்சியின் முடிவில் மிகச்சிறப்பாக உரையாற்றி அனைவரையும் சிரிக்க, சிந்திக்க வைத்தார். 17ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க கன்னிகாஸ்த்ரீ ஒருவர் வயதானவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று கூறியது இன்றைக்கும் எப்படிப் பொருத்தமாக உள்ளது என்று கூறினார். ஆத்திகத்தில் அதிக நம்பிக்கை இல்லாத இவர் ‘அன்பே சிவம்’ என்ற குறிக்கோள் கொண்டவர். மகாபாரதம், விவிலியம் ஆகியவை மனிதன் 120 வயதுவரை வாழமுடியும் என்று கூறுகின்றன. இவர் அதற்குமேலும் வாழ்ந்து நம்மை வழி நடத்த வேண்டும்.

லக்ஷ்மி சங்கர்,
நார்கிராஸ், ஜார்ஜியா

© TamilOnline.com