நா.முத்துக்குமார்
கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர். தனது பாடல்களுக்காக இரண்டுமுறை தேசிய விருது வென்றவர். காஞ்சிபுரத்தின் கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் பிறந்த முத்துக்குமார், போராடித் திரையுலகில் முன்னுக்கு வந்தவர். தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் வாசித்த நூல்களும், பேசிய மேடைகளும் இவரது இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன. இயற்பியலில் இளங்கலைப் பட்டம் முடித்தவர், தமிழார்வத்தால் தமிழில் முதுகலைப் பட்டமும், தமிழ்த் திரைப்பாடல்கள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டமும் பெற்றார். திரைப்படம் இயக்கும் ஆர்வத்தால் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் சில ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இயக்குநர் சீமானின் 'வீரநடை' படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், வெயில், காதல், கல்லூரி, சைவம், தங்க மீன்கள், பாபநாசம் என பல வெற்றிப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றார். பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, ஆனா... ஆவன்னா..., என்னை சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன் போன்றவை இவரது முக்கியமான கட்டுரை நூல்களாகும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவருக்கு தீபலட்சுமி என்ற மனைவியும் ஆதவன் (9), யோகலட்சுமி (8 மாதம்) என்ற குழந்தைகளும் உள்ளனர்.

தென்றலுக்கு முத்துக்குமார் வழங்கிய நேர்காணலை இங்கே காணலாம்

© TamilOnline.com