தமிழ்த் திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் (75) சென்னையில் காலமானார். மார்ச் 22, 1941 அன்று திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த இவர், இளவயதிலிருந்தே கவி எழுதும் ஆற்றல் பெற்றவராக இருந்தார். வாய்ப்புத்தேடி சென்னை வந்த இவர், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். கவிஞர் நடத்திய 'தென்றல்' இதழுக்கு உதவியாசிரியராக இருந்தார். 'அருணன்' என்ற பெயரில் பல கட்டுரைகளையும், சிறுகதைகளையும் அதில் எழுதியிருக்கிறார். 'நானும் மனிதன்தான்' என்ற படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு வந்தது என்றாலும். 'சாரதா' படத்தில் இவர் எழுதிய 'மணமகளே மருமகளே வா வா' என்ற பாடலே இவரது கவித்திறமையை உலகுக்குக் காட்டியது. தொடர்ந்து பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். கதை விவாதங்களில் கலந்துகொண்டார். தானே ஒரு படத்தைத் தயாரிக்கலாம் என்று தோன்ற 'அன்னக்கிளி'யைத் தயாரித்தார். அது திரையுலகின் திருப்புமுனையானது. அப்படத்தில் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். பஞ்சு அருணாசலத்தின் பாடல்களும், இளையராஜாவின் இசையும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துப் புகழைச் சேர்த்தன. தொடர்ந்து 'விழியிலே மலர்ந்தது', 'ராஜா என்பார் மந்திரி என்பார்', 'காதலின் தீபம் ஒன்று', 'கண்மணியே காதல் என்பது..' எனப் பல ஹிட் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பல திரைப்படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெற்றியைக் குவித்தார். ரஜினி, கமல் ஆகியோரின் கமர்ஷியல் பட வெற்றிக்குப் பஞ்சு அருணாசலத்தின் கதை, வசனம் மிகமுக்கியப் பங்காற்றின. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த முரட்டுக்காளை, போக்கிரிராஜா, சகலகலா வல்லவன், பாயும்புலி, தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம், ராஜா சின்ன ரோஜா போன்ற பல படங்களின் கதை, திரைக்கதை, வசனம் இவர் எழுதியதுதான். ஆறிலிருந்து அறுபதுவரை, கல்யாணராமன், எங்கேயோ கேட்ட குரல், மைக்கேல் மதனகாமராஜன் என நாற்பதுக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்திருக்கிறார். நாடகமே உலகம், மணமகளே வா, புதுப்பாட்டு, கலிகாலம், தம்பி பொண்டாட்டி போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார்.
|