மறதியைத் தரும் அல்சைமர்
"பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்றதேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்…"

என்ற வள்ளலார் பாடலின் வரிகள் நிஜமாகும் நோய் ஒன்று உண்டென்றால் அது அல்சைமர்தான்.

வயது முதிர, முதிர, வராமல் இருக்கவேண்டும் என்று அனைவரும் வேண்டும் நோய் அல்சைமர். மூளையில் ஏற்படும் சில மாற்றங்கள்மூலம் நம் எண்ணங்கள் மாறுகின்றன. இந்த நோயில் நாம் அன்றாடம் செய்யும் சராசரி விஷயங்களைக்கூடச் செய்யமுடியாமல் போகிறது. மனம் அல்லது மூளையின் செயல்பாடு குறைவதை மனக்குறுக்கம் (Dementia) என்று சொல்வர். இது பல காரணங்களால் ஏற்படலாம். இதில் ஒன்று அல்சைமர் வியாதி.

வயதாக ஆக, ஒரே நேரத்தில் பல காரியங்களைச் செய்கிற சக்தி (multitasking ability) குறைந்துவிடும். செய்யவேண்டிய காரியங்களைப் பட்டியல் போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். சின்னச்சின்ன விஷயங்கள் மறந்துபோகலாம். பல நீண்டகால நினைவுகள் மறக்காமல் இருப்பதும், அண்மைக்கால நினைவுகள் மறந்துபோவதும் இயற்கை. இதை ‘short term memory loss’ என்று அழைப்பர். காலப்போக்கில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் இந்த மறதி தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு ஆகிவிபடும் அல்சைமர் மறதிக்கும், வேறுவகை மனக்குறுக்க மறதிக்கும் உள்ள காரணங்களையும், வேறுபாடுகளையும் அறியவேண்டுவது அவசியம்.

மறதியின் வகைகள்:

Mild Cognitive Impairment (MCI)
இது வயதாவதால் ஏற்படும் ஞாபகசக்திக் குறைபாடு. சிறிய விஷயங்கள் மறந்துபோகும்; அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். எழுதி வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இதிலடங்கும். இவர்களுக்குத் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படாது. தங்கள் வேலைகளைத் தாமே செய்துகொள்வார்கள். சில கடினமான செயல்களைச் செய்யமுடியாமல் போகலாம். இது உயர்ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச்சத்து, நீரிழிவு, இதயநோய் முதலியவை இருப்பவருக்கு அதிகம் வரலாம். ஒரு சிலருக்கு எண்பது வயதுக்குப் பின்னர் தாக்கலாம். இன்னும் சிலருக்கு எழுபதுகளில் வரலாம். இவர்களால் தங்கள் வேலைகளைத் தாமே செய்துகொள்ள முடியும். அவ்வப்போது பட்டியலிட்டு பிறர் உதவியை நாடவேண்டியும் வரலாம்.

மனக்குறுக்கம் (dementia)
இது பல காரணங்களால் ஏற்படலாம்.
அல்சைமர் dementia
Vascular Dementia
LEWY Body Dementia
Fronto Temporal Dementia

ஒரு சிலருக்கு அல்சைமருடன் மற்றக் காரணங்களும் சேர்ந்திருக்கலாம். உயர்ரத்த அழுத்தம், அல்லது கொழுப்பினால் ஏற்படும் மாற்றங்கள் ரத்த நாளங்களை பாதிப்பதால் Vascular Dementia ஏற்படலாம். இது மிகமெதுவாகத் தீவிரமாகும் தன்மை உடையது.

LEWY BODY Dementia என்பது மிகவேகமாக முற்றி, ஒருவரின் செயல்பாட்டைத் தாக்கும். இந்தவகை அதிகமாகக் காணப்படுவதில்லை. மூளையில் பாதிப்பு, பக்கவாதம் அல்லது வேறு சில காரணங்களால் ஏற்படும்போது மறதியும் வரலாம். இதில் குறிப்பாக மூளையின் Fronto Temporal பகுதி பாதிக்கப்பட்டால் நினைவாற்றல் குறையும். இவர்களுக்கு நோயின் மூலகாரணம் எதுவோ அதைத் தீர்ப்பதே சரியான தீர்வாகும்.

இவை மட்டுமல்லாது அல்சைமரால் ஏற்படும் மறதியும் அதிகமாகக் காணப்படுகிறது. இது 1906ம் ஆண்டில் அல்சைமர் என்ற அறிவியல் நிபுணரால் கண்டுபிடிக்கப்பட்டது. மூளையில் சில பகுதிகளில் கொழுப்பு அடைப்பினாலும், அமைலாய்டு என்று சொல்லப்படும் ரசாயனப்பொருள் அடைப்பினாலும் நினைவாற்றல் குறையும் என்று அவர் கண்டுபிடித்தார். இது அறுபது வயதிலேயே ஏற்படலாம். நாளாக ஆக அதிகமாகலாம். செயல்பாடு மெல்ல மெல்லக் குறையும். தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும். அன்றாட நடவடிக்கைகளைச் செய்யமுடியாமல் பிறரைச் சார்ந்து இருக்கவேண்டி வரலாம். காலைக்கடன் கழிப்பது முதல், உணவு உண்பதுவரை உதவி தேவைப்படலாம்; சிலருக்குக் கோபம் அதிகரிக்கலாம்; விஷயத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் தன்மை குறையலாம். இருக்குமிடம், தெரிந்த நபர்கள், பெயர்கள் மறந்துபோகலாம். நெருங்கிய குடும்பத்தினரையே இனங்காணும் சக்தி குறையலாம். இல்லாதவை இருப்பதுபோலவும், நடக்காதவை நடப்பது போலவும் தோன்றலாம். சந்தேகம், பயம் போன்றவை அதிகரிக்கலாம். இவை தனக்கு ஏற்பட்டுள்ள வியாதி என்பதை இவர் உணர்வதில்லை அதனால் இவர்களைப் பராமரிப்பது குடும்பத்தினருக்கு மிகவும் கடினம்.

அல்சைமரின் 3 நிலைகள்:

ஆரம்பநிலை
இந்த நிலையில் ஒருவர் தனியாக இருக்கமுடியும். தகுந்த எச்சரிக்கைகளுடன், ஒருசில மருந்துகளுடன் இவரால் பிறரைச் சாராமல் வாழமுடியும். ஆனால் அவ்வப்போது குடும்பத்தினரின் உதவியும், பட்டியலிடும் பழக்கமும் தேவைப்படும்.

இடைநிலை
இந்த நிலையை அடைந்தவருக்கு உதவி அதிகம் தேவை. அன்றாடச் செயல்களை செய்ய, குளிக்க, உண்ண, விபத்துக்களில்லாமல் வாழ்க்கையை நடத்த செவிலியர் அல்லது உதவியாளர் தேவை. இவரை வீட்டில் தனியாக விடுவது சரியல்ல. ஒரு சிலருக்கு இருக்குமிடம் தெரியாமல் போகும். அதனால் தனியாக வெளியே போவது அபாயகரமாக முடியலாம். இவர்கள் சட்டைப்பையில் எப்போதும் வீட்டு விலாசமும், தொலைபேசி எண்ணும் வைத்திருக்க வேண்டும்.

இறுதிநிலையில் தவிப்போருக்கு 24 மணிநேரமும் உதவி தேவை. இவரைப் பராமரிப்பது கடினம். தகுந்த உதவிகளுடன் இவர்களைக் கண்காணிக்க வேண்டும்.

தீர்வுகள்
Aricept, Namenda, Excelon போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படும். இவற்றைச் சீக்கிரமே உபயோகித்தால் நோய் முற்றுவதைத் தவிர்க்கலாம். அதுவரை ஏற்பட்ட மாற்றங்களைச் சரிசெய்ய முடியாமல் போனாலும் நோயின் தீவிரத்தைக் குறைக்க மருந்துகள் உதவும். இவற்றைத் தவிர கோபம் அல்லது தூக்கமின்மை போன்றவற்றைக் குறைக்கவும் மருந்துகள் தேவைப்படலாம். மற்ற நோய்களுக்கான மருந்துகளைச் சரிவர எடுக்கவும் இவர்களுக்கு உதவி தேவைப்படும். முதன்மை மருத்துவர் அல்லது, வயது முதிர்ந்தவர்களைக் கண்காணிக்கும் Geriatrician அல்லது Neurologist மூலம் சிகிச்சை வழங்கவேண்டும்.

பரிசோதனைகள்
ரத்தப் பரிசோதனை, தைராய்ட், அனீமியா பரிசோதனை, பி12 அளவு போன்றவற்றைப் செய்யவேண்டும். Mini Mental Exam என்று சொல்லப்படும் 30 கேள்விப் பரிசோதனை செய்யப்படும். இதைத்தவிர வேறு சில கேள்விகளும் கேட்கப்படலாம். மூளை CT scan அல்லது MRI செய்யப்படலாம். பலவேளைகளில் குடும்பத்தினர் கூறும் தகவல்கள் நோயிருப்பதை உறுதிப்படுத்தும். புதியதாக மரபணுக்களில் Apo E என்ற புரதம் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை யாருக்கு அல்சைமர் வரக்கூடும் என்று சுட்டிக்காட்ட வல்லது. ஆனால் இதனால்நோய் வருவதற்கான சாத்தியக்கூறை முற்றிலும் தெளிவாகச் சொல்ல இயல்வதில்லை.

தவிர்ப்பு முறைகள்
அல்சைமர் தவிர்ப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்தபடி உள்ளன. குறிப்பாக மற்ற நோய்களைச் சரிவரப் பார்த்துக்கொள்வதும், உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றிற்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதும் அவசியம். தினசரி உடற்யிற்சி தேவை. புதிர்கள், விடுகதைகள், புதிய மொழி கற்றல், கணக்குப் போடுவது போன்றவற்றின் மூலம் மூளைக்கு வேலை கொடுத்தவண்ணம் இருப்பது நல்லது. மன உளைச்சல் இருப்பவர்கள் அதற்குச் சிகிச்சை பெறவேண்டும். உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சத்துள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள் உண்ணவேண்டும். இதையும் மீறி மறதிநோய் வந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்த்துத் தேவையான பரிசோதனைகள் செய்து, சிகிச்சை பெறவேண்டும்.

(செப்டம்பர் 21ம் தேதி உலக அல்சைமர் நோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது.)

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com