ஆ. கார்மேகக் கோனார்
டாக்டர் உ.வே. சாமிநாதையர்முன் தான் கொண்டுவந்திருந்த விண்ணப்பப் படிவங்களை வைத்தார் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் சம்ப்ரோ (W.M.Zumbro). "ஐயா, இவை தமிழ்ப் பேராசிரியர் பணிக்காக வந்திருக்கும் விண்ணப்பங்கள். இதிலிருந்து தகுதியான ஒருவரை நீங்கள்தான் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும். நிதானமாக நாளைக்குக்கூட உங்கள் முடிவைச் சொல்லலாம்" என்று சொல்லிவிட்டுத் தன் இருக்கையிலிருந்து எழுந்தார்.

"சரிதான். இதற்கு ஏன் நாளைக்கு? இப்போதே பார்த்துவிட்டால் போகிறது!" சொல்லிவிட்டு விண்ணப்பங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கத் துவங்கினார் ஐயர். சிறிதுநேர பரிசீலனைக்குப் பின் தலைநிமிர்ந்தார் உ.வே.சா. "இதோ, இவர் உங்கள் கல்லூரிக்கு மிகப் பொருத்தமானவராக இருப்பார். கல்லூரி மட்டுமல்ல; தமிழும் இவரால் நிச்சயம் நல்லபலனை அடையும்" என்றபடி ஒன்றை எடுத்து சம்புரோவிடம் கொடுத்தார். அதில் ஆ. கார்மேகக் கோனார் என்று விண்ணப்பதாரரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு உ.வே.சா.வால் அடையாளம் காணப்பட்ட கார்மேகக் கோனார், 1889ம் ஆண்டில், இராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியருகே உள்ள அகத்தார் இருப்பு கிராமத்தில் ஆயர்பாடிக் கோனார்-இருளாயி தம்பதியினருக்குப் பிறந்தார். பள்ளிக்கல்விக்குப் பின் இவரது தமிழார்வத்தைக் கண்ட தந்தை, அக்காலத்தில் மதுரைமாநகரில் புகழ் பெற்றிருந்த தமிழ்ச்சங்கத்தை அணுகினார். அங்கு செந்தமிழ்க் கல்லூரி இயங்கிவந்தது. அதன் முதல்வர் நாராயண ஐயங்கார். மாணவர்களின் தமிழார்வம், திறமை போன்றவற்றை முழுமையாகச் சோதித்தபின்பே கல்லூரியில் சேர்த்துக்கொள்வது அவரது வழக்கம். அதன்படிச் சோதித்துவிட்டு கார்மேகத்துக்குக் கல்லூரியில் இடமளித்தார். அதுவே கார்மேகத்தின் வாழ்வில் திருப்புமுனை ஆனது. பிரவேச, பால, பண்டித வகுப்புகளில் தேர்ச்சிபெற்றார். படிக்கும் காலத்திலேயே பல ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும் அமெரிக்கன் கல்லூரி வாசல் இவருக்காகத் திறந்தது. 1914ம் ஆண்டில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 25. தாம் பணியாற்றிய 37 ஆண்டுகளும் கல்லூரியின் மேன்மைக்காகவும், மாணவர் உயர்வுக்காகவும், தமிழின் வளர்ச்சிக்காகவும் உழைத்தார். சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்ற பேராசிரியராகத் திகழ்ந்தார். பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என். சங்கரய்யா, நிலச்சீர்திருத்தப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், தமிழ்நாடு பொதுநூலகத் துறை இயக்குநராக இருந்த வே. தில்லைநாயகம் போன்றோர் இவரிடம் பயின்றவர்கள்.

மாணவர்கள் உயர்வில் அக்கறை கொண்டிருந்த கோனாரவர்கள் எளிதாகத் தமிழ் பயிலுமாறு பல பாடநூல்களை எழுதி வெளியிட்டார். அவை அமெரிக்கன் கல்லூரியில் மட்டுமில்லாமல் பல பல்கலைக்கழகங்களிலும் பாடநூல்கள் ஆகின. இவர் எழுதிய 'நல்லிசைப் புலவர்கள்' மிகவும் புகழ்பெற்றது. இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருவாங்கூர் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இண்டர்மீடியட் தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இதுதவிர, 'அறிவு நூல் திரட்டு' (இரண்டு தொகுதிகள்), 'ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்', 'இதிகாசக் கதாவாசகம்' (இரண்டு தொகுதிகள்), 'கார்மேகக் கோனார் கட்டுரைகள்', 'கார்மேகக் கோனார் கவிதைகள்', 'கண்ணகி தேவி', 'காப்பியக் கதைகள்', 'செந்தமிழ் இலக்கியத் திரட்டு' போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் ஆராய்ச்சி, மூவருலா ஆராய்ச்சி போன்ற ஆராய்ச்சி நூல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன. இவை தவிர்த்து நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் 'பாலபோத இலக்கணம்', இலக்கணத்தை எளியமுறையில் மாணவர்களுக்கு போதிப்பதற்காக எழுதப் பெற்றதாகும். இவரது 'தமிழ்ச்சங்க வரலாறு' என்னும் கட்டுரை நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல்வேறு இலக்கியச் சான்றுகள் கொண்டு அக்காலத்தில் தமிழை ஆராயச் சங்கம் இருந்தது என்ற உண்மையை நிலைநாட்டி, பிற்காலத்தில் சங்கம் எவ்வாறு வளர்ந்தது என்பதையும் அவர் அதில் விரிவாக விளக்கியிருந்தார்.

சிறந்த சொற்பொழிவாளராகவும் கார்மேகக் கோனார் திகழ்ந்தார். சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்றவற்றில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மெச்சத்தக்கவை. இவர் 'சிறப்புரை வித்தகர்' என்று தமிழறிஞர்களால் பாராட்டப்பெற்றார். மதுரை திருவள்ளுவர் கழகத்தில், 1955ல் நடந்த ஐங்குறுநூறு மாநாட்டுக்குத் தலைமையேற்று ஆற்றிய சொற்பொழிவுகள் அறிஞர் பலரால் மிகவும் பாராட்டப்பட்டன. அவை பின்னர் 'ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவுகள்' என்ற தலைப்பில் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டது.

பேராசிரியர் என்றும், ஆசான் என்றும் போற்றப்பட்ட கார்மேகக் கோனாருக்கு மதுரை திருவள்ளுவர் கழகம் நடத்திய பாராட்டு விழாவில் 'செந்நாப்புலவர்' என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழால் தான் சிறப்புற்றதுபோல சக தமிழறிஞர்களின் திறன் கண்டறிந்து அவர்களையும் கோனார் போற்றினார். தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரின் தமிழ்ப்பணியைப் பாராட்டி அவருக்கு, 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்னும் பட்டமளித்துக் கௌரவித்தார்.

தென்னருயிர் போல் வளர்த்த செந்தமிழ்த்தா யேயுனது
பொன்னடியை யாம்வணங்கிப் புகழ்ந்துநனி வாழ்த்துதுமே

உலகிலுள்ள மொழிகளுள்ளே உயர்தனிச்செம் மொழியாக
இலகிமிகச் சீர்படைத்த இருந்தமிழ்த்தாய் வாழ்த்துதுமே

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே மொழிகளுள்ளே
முன்றோன்றியும் மூவா மொழியரசி! வாழ்த்துதுமே

பல்மொழிகள் தமையீன்றும் பகரும்இளம் பருவநலம்
அல்காத தமிழ்க்கன்னி அன்னையுன்னை வாழ்த்துதுமே!


என்று இவரால் எழுதப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து அக்காலத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.

ஆசிரியராக அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தவர், தமிழ் மொழித்துறைத் தலைவராக உயர்ந்து, 1951ல் ஓய்வு பெற்றார். அதன் பின்னரும் கலாசாலை மாணவர்களுக்காக இனிமையும் எளிமையுமிக்க நடையில் பல நூல்களை எழுதினார். வாழ்நாளின் இறுதிவரை தமிழின் உயர்வுபற்றியே சிந்தித்து வாழ்ந்த இவர், 1957ம் ஆண்டில், 68ம் வயதில் காலமானார். இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதுரையில் ஒரு சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. குக்கிராமத்தில் பிறந்து, சுயமுயற்சியாலும், ஆர்வத்தாலும், உழைப்பாலும் முன்னுக்கு வந்து தமிழுக்குத் தொண்டாற்றிய கார்மேகக் கோனார், தமிழர்கள் என்றும் நினைந்து போற்றத்தகுந்த முன்னோடி ஆவார்.

பா.சு. ரமணன்

© TamilOnline.com