மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காண்டீவம் என்ற அக்னி
"தர்ம புத்தியுள்ளவனும், இந்திரியங்களை அடக்கியவனும் அரசனுமான அந்த யுதிஷ்டிரன், என்னைக் குந்தியினுடைய முதலில் உண்டான புத்திரனாக அறிவானானால், ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். ஓ மதுஸூதனரே! பகைவரை அடக்குபவரே! நான் பெரிதும் செழித்ததுமான அந்த ராஜ்யத்தை அடைந்தாலும் துர்யோதனுக்கே கொடுப்பேன். எவனுக்கு ஹ்ருஷீகேசர் நாதரோ, எவனுக்கு அர்ஜுனன் போர்வீரனோ, தர்மாத்மாவான அந்த யுதிஷ்டிரனே நிலைபெற்ற அரசனாக இருக்க வேண்டும்," (உத்யோக பர்வம், பகவத்யாந பர்வம், அத்: 141) என்று கர்ணன் சொல்வதைப் பார்த்தோம். 'ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளமாட்டான்' என்றால் 'அதை என்னிடத்தில் தந்துவிடுவான்' என்று பொருள்படுகிறது. அடுத்ததாக 'நான் அதை துரியோதனிடத்தில் கொடுப்பேன்' என்று சொல்லி அவ்வாறு நேராமல் இருப்பதற்காக, நமக்குள்ளே நடந்த இந்த உரையாடலை நீங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணனைக் கர்ணன் கேட்டுக்கொள்கிறான். அப்படியானால் இந்த இடத்தில் கர்ணன் இரண்டு அனுமானங்களை முன்வைக்கிறான் என்று தோன்றுகிறது. 'பீஷ்மர் வீழும் வரைக்கும் நான் போரில் கலந்துகொள்ளமாட்டேன்' என்று சொல்லும்போது எப்படி 'பீஷ்மர் கட்டாயமாக ஒருகட்டத்தில் போரில் மரணமடைவார்' என்ற அனுமானம் கலந்திருப்பதுபோல கர்ணனுடைய மேற்படி பேச்சில் இந்த அனுமானங்கள் உட்கிடக்கையாகக் கலந்தே இருப்பதாய்ப் படுகிறது. போரில் துரியோதனன் தோல்வியடைவான் என்பது அவற்றில் ஒன்று; போருக்குப் பிறகு தானும் துரியோதனனும் உயிரோடு இருக்கப் போகிறோம் என்பது மற்றொன்று. "ஓ வார்ஷ்ணேயரே! அப்படியே மிக்க குரூரமானவைகளும் மயிர்சிலிர்த்தலைச் செய்பவைகளும் துர்யோதனிடம் தோல்வியையும் யுதிஷ்டிரரிடம் வெற்றியையும் சொல்லுகின்றவைகள்போலப் பலவிதமாய் இருப்பைவகளுமான உற்பாதங்களும் காணப்படுகின்றன." (பகவத்யாந பர்வம், அத்: 143; பக்: 474) துர்யோதனனுடைய தோல்வியைக் கர்ணன் எதிர்பார்த்தான் என்பதே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதைவிடப் பெரிய அதிர்ச்சி நமக்குக் காத்திருக்கிறது.

'தர்மபுத்திரனே வென்றாலும், நான் மூத்தவன் என்பது தெரியவந்தால் ஆட்சியை என்னிடத்தில் தந்துவிடுவான். நானோ அதை துரியோதனனுக்குத்தான் கொடுக்கப்போகிறேன். ஆகவே இந்த உண்மையை அவனறிய வேண்டாம்' என்று கர்ணன் சொல்லும்போது இவர்கள் இருவரும் போருக்குப் பின்னர் உயிரோடுதான் இருக்கப் போகிறார்கள் என்று அவன் நினைப்பதுபோலத் தோன்றினாலும், மிக நீண்ட இந்த உரையின் இறுதிப்பகுதியில் தான் கண்ட ஒரு கனவைப் பற்றிச் சொல்கிறான். அந்தக் கனவில் கண்டதன் பலன் என்னவென்றால், "ஓ ஹ்ருஷீகேசரே! எனக்குத் தெரியும். எங்கே தர்மம் இருக்கின்றதோ அங்கே ஜயம்... நீங்களெல்லோரும் யுத்தத்தில் துர்யோதனன் முதலான அரசர்களைக் கொல்லப் போகிறீர்கள். அதில் எனக்கு சந்தேகமில்லை" (மேற்படி, பக்: 477). கர்ணன் கண்ட கனவில் துரியோதனைச் சேர்ந்த அனைவரும் சிவந்த ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்; அஸ்வத்தாமா, கிருபர், கிருதவர்மன் ஆகிய மூவர் மட்டுமே வெள்ளாடைகளை அணிந்திருக்கிறார்கள். (யுத்தத்தின் முடிவில் கௌரவர் பக்கத்தில் பிழைத்தவர்கள் இந்த மூவர் மட்டுமே.) பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் எல்லோரும் ஒட்டகம் பூட்டிய தேரில் ஏறிக்கொண்டு தென்திசையை நோக்கிச் செல்கின்றனர். "மகாரதர்களான பீஷ்மரும் துரோணரும் என்னோடும் துர்யோதனனோடும் ஒட்டகைபூண்ட தேரில் ஏறிக்கொண்டார்கள். ஓ ஜனார்த்தனரே! நாங்கள் அகஸ்தியரால் ஆளப்பட்ட திக்கை நோக்கிச் சென்றோம்; சீக்கிரத்தில் யமன்வீட்டை அடைவோம். நானும் மற்ற அரசர்களும் க்ஷத்திரியக் கூட்டமும் காண்டீவமாகிய அக்னியில் பிரவேசிப்போம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை' என்றான்" (மேற்படி, பக்: 478)

மிகத்துல்லியமாக 'யுத்தத்தின் முடிவு இதுதான். பேரழிவு ஏற்படப் போகிறது. அனைத்து மன்னர்களும் இறக்கப் போகிறார்கள். துரியோதனன் பக்கத்தில் மூவரைத் தவிர - நான் உட்பட - மற்ற அனைவரும் இறக்கப்போகிறோம் என்பதில் ஐயமில்லை' என்று கர்ணன் மிகத்தெளிவாகவே சொல்கிறான். இதற்கெல்லாம் காரணமாக இந்த உரையின் தொடக்கத்தில் கர்ணன் குறிப்பிடுவது இது: "இப்பொழுது பூமி முழுமைக்கும் அழிவானது நேரிட்டிருக்கிறது. அதில் சகுனியும் நானும் துச்சாஸனனும் திருதிராஷ்டிரரின் புத்திரனும் அரசனுமான துர்யோதனனும் நிமித்தமானோம்" (மேற்படி, பக்:474). 'உலகம் அழியப்போகிறது. சர்வநாசம் நேரிடப்போகிறது. இதற்கு நான், சகுனி, துச்சாதனன், துரியோதனன் ஆகிய நால்வரும் காரணமாக இருக்கப் போகிறோம்.' இதைச் சொல்லிவிட்டுக் கர்ணன் கேட்கிறான்: 'இந்த அழிவு நேரப்போகிறது என்பதை கிருஷ்ணரே நீரும் அறிவீர். அறிந்திருந்தும் என்னை ஏன் மயங்கச் செய்கிறீர்'. இந்த அழிவை நீயும் அறிவாய். அறிந்திருந்தும் என் மனத்தில் ஏன் மாற்றத்தை உண்டுபண்ண நினைக்கிறாய்' என்பது கர்ணன் கேட்கும் கேள்வி. கண்ணன் அனைத்தையும் அறிந்திருந்தாலும் கர்ணனுக்கு அவன் கொடுத்தது இன்னொரு சந்தர்ப்பம். கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை கர்ணன் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தீர்மானமானவுடன் அவனை அவன்போக்கில் விட்டுவிடுகிறான்.

நேரப்போவது அழிவுதான் என்றாலும் துரியோதனன் என்னை நம்பித்தான் இந்த யுத்தத்தில் இறங்கியிருக்கிறான். இந்தச் செயலில் இவ்வளவு காலம் அவனுக்குத் துணைநின்றுவிட்டு, அழிவுதான் ஏற்படப்போகிறது என்று அறிந்த நிலையில் அவனைக் கைவிடுவது சரியில்லை. நான் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யமாட்டேன். இறக்கத்தான் போகிறேன் என்று தெரிந்திருந்தாலும் துரியோதனன் பக்கத்தைவிட்டு வருவதற்கு நான் தயாராக இல்லை. கர்ணன் சொல்லும் வார்த்தைகளை கவனியுங்கள். 'நாங்கள் அனைவருமே காண்டீவம் என்னும் நெருப்புக்குள் இறங்கத்தான் போகிறோம் என்பதில் எனக்கு ஐயமில்லை.' இந்த இடத்தில் கர்ணன் மனமறிந்தே அதர்மத்தின் பக்கம் நின்றாலும், செய்வது தவறென்று அறிந்தே ராவணனுக்குத் துணைநின்ற கும்பகர்ணனைப்போல இமயமலையாய் உயர்கிறான். உயர்விலும் உயர்வானவையும் தாழ்விலும் தாழ்வானவையும் கர்ணனிடத்திலே கலந்தே இருந்தன என்று என் ஆசிரியர் நாகநந்தி அவர்கள் அடிக்கடிக் குறிப்பிட்டதைப்போல 'இந்த கம்பீரமான கங்கைக்கு நடுவிலே கற்பனைக்கும் எட்டாத சாக்கடையும் ஓடிக்கொண்டிருந்தது' என்பது மிகமிகத் தெளிவாகவே வெளிப்படுகிறது. இதற்குப் பிறகு கர்ணனைக் குந்தி சந்திக்கும் இடம் கவனிக்க வேண்டிய ஒன்று என்றாலும், அது பாத்திரப் படைப்பு ஆய்வின் ஒரு பகுதி என்பதால் இப்போதைக்குத் தவிர்க்கிறேன். இருப்பினும் கர்ணன் என்ற பாத்திரத்தைச் சூழ்ந்திருக்கும் மாயத்தோற்றங்களை ஓரளவுக்காவது விலக்கியிருக்கிறோம் என்று நம்புகிறேன். இதுதான் வியாசர் காட்டும் கர்ணன். வில்லி செய்திருக்கும் மாற்றங்களைப் பாத்திரப் படைப்பாய்வில் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

அரசுக்குரியவன் யுதிஷ்டிரன் மட்டுமே என்பதையும் பாண்டவர்களுக்குத் துரியோதன் செய்த தீமைகளையும் அதில் கர்ணன் மிக ஆரம்பக் கட்டத்திலிருந்தே துணைநின்றிருக்கின்றான் என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தோம். துரியோதனன் பாண்டவர்களுக்குச் செய்த தீமைகளுக்குத் திரும்புவோம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com