பையன்தான் அவள் உலகம்!
அன்புள்ள சிநேகிதியே:

ஐந்து வருடங்கள் காதலித்து, இருதரப்புப் பெற்றோரையும் எதிர்த்து, பிறகு வேறு வழியில்லாமல் அவர்கள் சம்மதம் தர, நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். முதல் மூன்றுவருடம் சொர்க்கத்தில் இருந்தோம். அப்படி ஒரு இன்பமான வாழ்க்கை. மகன் பிறந்தான். பெருமையாக இருந்தது. சந்தோஷம் கூடியது. இரண்டு தரப்புப் பெற்றவர்களும் வந்து குழந்தையைப் பார்த்துக்கொண்டு, கொண்டாடிவிட்டுப் போனார்கள். அவள் வேலையை விட்டுவிட்டாள். முதலில் அந்தப் பொருளாதாரத் தாக்கம் தெரியவில்லை. பரவாயில்லை. நம் குழந்தைக்காக நம் சௌகர்யங்களை விட்டுக்கொடுத்துத்தானே ஆகவேண்டும். அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் பையன் வளர, வளர என்னிடம் அவளுக்கு அன்னியோன்னியம் குறைந்ததுபோலத் தோன்றியது. பையன்தான் அவள் உலகமாக மாறிப்போனான். முன்னைப்போல வேலையிலிருந்து வந்ததும் அன்றைய அனுபவங்களை அவளுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. எதற்கும் அவளுக்கு நேரம் இல்லை. வீடும் பாதி நேரம் ஒழுங்காக இருப்பதில்லை. என் தேவைகள் எதுவும் அவளுக்கு முக்கியமாகப் படுவதில்லை. பையனைக் கொஞ்சுவதும் நேரம், காலத்தில்தான் செய்யமுடியும். அவனுக்கு என்ன வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்வாள். நான் ஏதாவது கேட்டால் "நீ குழந்தை வளர்ப்பைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. எதையும் செய்யச் சோம்பல் படுகிறாய். கொஞ்சமட்டும் தெரிகிறது" என்று சண்டை போடுகிறாள். நான் என்ன செய்வது? இப்போதெல்லாம் வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பையனுக்கு மூன்றுவயது ஆகிறது.

எங்களுக்குள் இடைவெளி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நிறைய வாக்குவாதம். அவள் அழ, நான் படாரென்று கதவைச் சாத்திவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கிளம்ப - இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாகிவிட்டன. எனக்கு நிறைய work related travel. அதனால் பையனுடன் இருக்கும் நேரத்தில் ஆசையாகக் கழிக்கவேண்டும் என்று இருந்தால், அவள் அவனுக்கு தூங்கும் நேரம், சாப்பிடும் நேரம், விளையாடும் நேரம் என்று கண்டிப்பாக வளர்க்கிறாள். அவனுக்கு என்ன நல்லது என்று அவள்தான் முடிவுசெய்கிறாள். எனக்குப் பொறாமையாக இருக்கிறது. எல்லாமே அவனுக்கு அம்மாதான். முன்பெல்லாம் என்னிடம் அவ்வளவு காதலாக இருந்தவளா இப்படி மாறிப் போய்விட்டாள்?! என்னைக் கண்டுகொள்வதில்லை. இப்போது அவளுடைய அண்ணன் குடும்பம் ஒரு மணிநேர டிரைவில் வீடு வாங்கி வந்துவிட்டார்கள். அப்பா, அம்மா ஆறுமாத விசிட். போனவாரம் அவனுடைய பிறந்தநாள். surprise செய்யவேண்டுமென்று, நான் இரண்டுநாள் முன்பாகவே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு எங்கேயாவது 'வீக் எண்ட்' போகவேண்டும் என்று நிறைய எதிர்பார்ப்புக்களுடன் திடீரென்று வந்தேன். அங்கே எனக்கு வேறொரு surprise (shock) வைத்திருந்தாள். அவள் குடும்பம் முழுவதும் வந்திறங்கி 'குஜராத்தி' பேசிக்கொண்டு, 'டோக்ளா' சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாமல் எல்லாருடனும் சேர்ந்துகொண்டு அவனுடைய மூன்றாவது பிறந்தநாளை ஒரு ஈடுபாடில்லாமல் கொண்டாடினேன். நான் எதைக் கேட்டாலும், "நீதான் பாதிநாள் வீட்டில் இருப்பதில்லையே" என்று மடக்கிவிடுகிறாள். நான் என்ன செய்வது?

இப்போதெல்லாம் பேசுவதையே குறைத்துக் கொண்டேன். அதுவும் அவளுக்குக் குறை. "நீ ரொம்ப மாறிப் போய்விட்டாய்" என்று என்னைக் குற்றம் சாட்டுகிறாள். அவள் அண்ணன் அவளுடைய அப்பா, அம்மாவை எங்களுடன் விட்டுவிட்டுக் கிளம்பிப் போய்விட்டான். எத்தனை நாள் தங்கப் போகிறார்கள் என்று நான் கேட்டுக் கொள்ளவில்லை. இனிமேல் முட்டை, சிக்கன் எல்லாம் வீட்டுக்குள் கொண்டுவர முடியாது. சர்க்கரை போட்ட சாம்பார், கறி என்று டைனிங் ஹாலில் காத்திருக்கும். எனக்கு நல்ல காரம் போட்ட செட்டிநாடு சட்னி தேவை. இதற்கெல்லாம்கூட நான் கவலைப்படவில்லை. இதே நிலையில் போனால் நான், என் மனைவி, மகன், குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் இழந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. என் நண்பன் ஒருவனுக்கு இப்படி ஆகியிருக்கிறது. அவன்தான் உங்களுக்கு எழுத உதவினான்.

வணக்கம்.

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதரே :

கருத்து ஒருமித்து, காதலித்து, கடிமணம் புரிந்த தம்பதிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பெற்றோர்களால் என்று நிறையப்பேர் எனக்கு எழுதி, பேசி இருக்கிறார்கள். ஆனால், 2, 3 வருடமாக குழந்தை வளர்ப்பில்தான் கருத்து வேறுபாடுகள் தோன்றி, வளர்ந்து, சில சமயம் திருமண முறிவில் கொண்டுபோய் விடுகின்றன. நான் முன்பே இந்தப் பகுதியில் குறிப்பிட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். கலாசார மோதல்கள் இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு மட்டும் அல்ல; குடும்ப வளர்ப்பும் வெளியுலக அனுபவமும் சேர்ந்து தனிமனித கலாசாரத்துக்கு ஒரு set of beliefs கொடுக்கிறது. காதலிக்கும்போதோ திருமணத்தின்போதோ இந்தக் கலாசாரத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்பார்ப்புகளும், நடத்தைகளும் ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும், அன்பாகவும் தொடர்ந்து இருக்க உதவிபுரிகிறது. குழந்தை என்று மூன்றாவது variable வரும்போது முதலில் இருவருக்கும் ஏற்படும் ஆர்வம், அன்பு, பாசம், பரிவு, ஆனந்தம் என்று ஒருமித்த அத்தனை உணர்ச்சிகளும் இன்னும் பந்தத்தை இறுக்கிவிடும். ஒரு இனந்தெரியாத பயம் கலந்திருக்கும். அதுவும் ஒருமித்துத்தான் இருக்கும். இதை எல்லாப் பெற்றோர்களும் அனுபவித்துத்தான் இருப்பார்கள். அந்தக் குழந்தை வளர, வளரப் பொறுப்புகள் பெருகுகின்றன. குழந்தையின்மேல் பாசம், உரிமை, பொறுப்பு என்று சரிசமமாகப் பங்குபோட்டுக் கொள்ளும்போது, ஆசைமட்டும் பெருகிக்கொண்டு போகும். உரிமை, பொறுப்பில் வித்தியாசங்கள் வளரும். தனிமனித கலாசாரம் வளர்க்கும் விதத்தில் தலையிடும், ஜாதி, மத, மொழியை அழிக்கும் சக்தி காதலுக்கு இருக்கிறது. ஆனால் இந்தக் குழந்தை வளர்ப்பில் ஏற்படும் மோதலில் (எல்லாம் ஒன்றாக இருந்து, பெரியவர்கள் பார்த்துச் செய்யும் திருமணத்தில்கூட) எல்லாமே விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கின்றன. குழந்தை வளர, வளர இந்தச் சண்டை, சச்சரவுகள் மிக அதிகமாகப் போகின்றன.

இந்த இரண்டு மாதத்தில் என்னிடம் கலந்து ஆலோசித்தவர்களில் பலபேர் குழந்தை வளர்ப்புப் பிரச்சனையில் உறவு இடைவெளி அதிகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று கருத்துத் தெரிவித்தனர். ஆனால், விவாகரத்து அளவுக்குப் போகவில்லை. என்னை இதுபற்றிக் கையேடு ஒன்று எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் ஒருவர். அடுத்த பகுதியில் கொஞ்சம் விளக்கமாக எழுத இருக்கிறேன். அதேசமயம் என்ன எழுதினாலும், இது அவரவர் தனித்துவப் பிரச்சனை. விவேகமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருக்கும்போது கணவன், மனைவி இருவரும் தங்களுடைய விருப்பு, வெறுப்புக்களை மனம் கோணாமல் தெரியப்படுத்தும்போது, இரண்டுபேரும் சேர்ந்து தங்கள் செல்லத்தை இன்பமாக அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் விஷயத்தில் - நீங்கள் உங்கள் மனைவியை வேலையை விடச்சொல்லி, குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். முழு நேரமும் குழந்தையுடன் செலவுசெய்யும் வாய்ப்பு அந்த மனைவிக்குக் கிடைத்திருக்கிறது. அதை அந்த மனைவி அருமையாகப் புரிந்துகொள்ளும்போது, கணவனுக்குக் கிடைக்கும் நேரத்தில் குழந்தையைக் கொஞ்ச உரிமையைக் கொடுக்கவேண்டும். முடியவில்லையென்றால் எடுத்துச்செல்ல இங்கிதம் தேவை.

காதலிக்கும்போது இதே சர்க்கரை சாம்பார், காரக்குழம்பாகவும், டோக்ளா, மல்லிப்பூ இட்லியாகவும் தோன்றியிருக்கும் உங்களுக்கு என்று நினைக்கிறேன். இப்போது உங்களுடன் குழந்தையின் நேரத்தைப் பங்குபோட்டுக் கொள்ள வரும் குடும்பத்தினர் என்று நினைக்கும்போது எந்த ருசியும் கசப்பாகப் போய்விடுகிறது.

நீங்கள் பயப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்காது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்களும் குழந்தை வளர்ப்புக்கலையில் ஆர்வம் காட்டினால் உங்கள் மனைவிக்குக் கொஞ்சம் சமாதானமாக இருக்கும். குழந்தை வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனையே - தாய், தந்தை இருவரும் சரி - அந்தக் குழந்தையில் தங்களை அடையாளம் காட்ட முனைகிறார்கள். இதுபற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com