பாசிப்பயறு உருண்டை
தேவையான பொருட்கள்
பாசிப்பயறு - 1 கிண்ணம்
முந்திரி - 6
பாதாம் - 8
கொப்பரைத் தேங்காய் - 1
கருப்பட்டி (அ) வெல்லம் - 1 1/4 கிண்ணம்
முந்திரிப்பருப்பு ஒடித்து வறுத்தது - 1 மேசைக்கரண்டி
அரிசிமாவு - 1 கிண்ணம்
கோதுமைமாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரித்து எடுக்க
நெய் - 1 தேயிலைக்கரண்டி
ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை
பாசிப்பயறை வெறும்வாணலியில் சிவக்க வறுத்து, மிக்சியில் ரவைபோல் அரைத்து, மேல்தோலைப் புடைத்து அல்லது ஊதி எடுக்கவும். முந்திரி, பாதாம் வெறும்வாணலியில் வறுத்து ரவைபோல அரைக்கவும். கொப்பரையைச் சிறுதுண்டுகளாக நறுக்கி, சிவக்க வறுத்து மிக்சியில் அரைத்து பாசிப்பயறு, பாதாம், முந்திரி இவற்றுடன் போட்டு நெய்விட்டுக் கலக்கவும். கருப்பட்டிப் பாகு வைத்து அதில் ஊற்றி நன்றாகக் கலந்து ஏலப்பொடி போட்டுச் சிறு உருண்டையாகப் பிடித்து வைக்கவும். அரிசி, கோதுமை மாவுடன் சிட்டிகை உப்புப் போட்டு பஜ்ஜி மாவுபோலக் கரைத்துக்கொண்டு, உருண்டைகளை அதில் தோய்த்து, எண்ணெய் காய்ந்ததும் போட்டுப் பொன்னிறமாக எடுக்கவும். தேவையானால் வறுத்த முந்திரிப்பருப்பு கலந்து உருண்டை பிடிக்கலாம். வெல்லம் போட்டும் செய்யலாம். கேரளத்தில் இதை முந்திரிக்கொத்து என்று சொல்வார்கள். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சத்துமிக்க உருண்டை.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com