அமெரிக்காவின் பிரபல சமையல்கலை ரியாலிடி ஷோவான 'Chopped' நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்று உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தார் ஆர்த்தி சம்பத். மும்பையில் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்து, இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிசெய்தபின் இப்போது நியூ யார்க்கில் 2010லிருந்து தொடர்ந்து ஐந்தாண்டுகளாக மிஷலின் கைடு விருதைப் பெற்றுவரும் 'ஜுனூன்' ரெஸ்டராண்டில் தலைமை செஃப் பணியில் இருக்கிறார் ஆர்த்தி. மிஷலின் ஸ்டார் விருதுபெற்ற அதன் நிறுவனர் விகாஸ் கன்னாவுடன் இணைந்து ஒரு நூலை எழுதத் தொடங்கியிருக்கிறார். தான் நடந்த பாதையில் சந்தித்த வலிகள், வெற்றிகள், சோதனைகள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஆர்த்தி சம்பத்.
*****
தென்றல்: உங்கள் பெற்றோரைப்பற்றிச் சொல்லுங்கள்... ஆர்த்தி சம்பத்: அம்மா சென்னை, அப்பா மும்பை. நான் பிறந்தது சென்னையில்தான். வளர்ந்தது மும்பையில். எங்க குடும்பத்தில எல்லாரும் டாக்டர், எஞ்சினியரா இருந்தாங்க. எங்கப்பாவே ஒரு எஞ்சினியர்தான். அவர் வெற்றிகரமான பிசினஸ்மேன். நானும் ஒரு டாக்டராவோ எஞ்சினியராவோ ஆவேன்னு நெனச்சாங்க. அதுல எனக்கு இன்டெரஸ்ட் இருக்கல.
அம்மாவுக்குச் சின்ன வயசிலேயே கல்யாணம் ஆயிடுச்சு. நல்ல ஆரோக்கியமா, கவனமா இருப்பாங்க. ஆனா, அவங்களுக்குச் சமையல்ல ரொம்ப ஆர்வம் கிடையாது. அதனாலதான் நான் சமைக்க ஆரம்பிச்சேன்னு சொல்லலாம் - எனக்கு வேண்டியதை நானே செஞ்சிக்கறதுக்காக.
தென்றல்: இன்டெரஸ்டிங். ஆர்த்தி: சின்ன வயசிலேயே எனக்கு நுண்கலைகள் எல்லாத்துலயும் ஆர்வம் இருந்தது. பரதநாட்டியம், ஓவியம், நடிப்பு, எழுத்து. ஆர்க்கிடெக்சர் மாதிரி படைப்பாற்றலுக்கு வாய்ப்பிருக்கற எதையாவது கல்லூரியில படிக்கலாம்னு நெனச்சேன்.
தென்றல்: உங்க முகநூல் பக்கம் உங்க எழுத்துத் திறமையைக் காண்பிக்குது. ஆர்த்தி: ஆமாம். நிறைய எழுதுவேன். ஜர்னலிசம் படிக்கலாமான்னுகூட எண்ணம் இருந்தது. ஆனா அதைவிட நாட்டியமும் நடிப்பும் எனக்கு விருப்பமா இருந்தது. அது சரியான விருப்பமில்லை, எனக்கு ஏற்ற தொழிலாக முடியாதுன்னு வீட்டுல நெனச்சாங்க. வேற என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.
அம்மா நிறைய சமையல் புத்தகம் வெச்சிருந்தாங்க, அதை அவங்க பயன்படுத்தலைங்கறது வேற விஷயம். அதை எடுத்துப் புரட்டினேன். எனக்கு 12, 13 வயசிருக்கும்போது ஒரு சாக்லேட் கேக் செய்தேன். மாவு, வெண்ணெய், சர்க்கரை, கோகோ மாதிரி சாதாரண விஷயங்களைக் கலந்து பேக் செய்யும்போது அது எப்படி பஞ்சுமாதிரி பெரிசாகுது! அதுல எனக்கு ஆச்சரியம். சமையல் அப்படியே என்னைக் கட்டிப்போட்டது. அம்மா செய்துபோடாத சிலவற்றை நான் சமைத்துப் பார்த்தேன். இரண்டு வருஷ காலத்துல சமையல் செய்வதுதான் எனக்குப் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சிடுச்சு.
தென்றல்: ஒரு சாக்லேட் கேக் உங்க வாழ்க்கையை திசை திருப்பிடுச்சு...! ஆர்த்தி: ஆமாம். அப்பாகிட்ட போய், 'நான் எஞ்சினியராக விரும்பலே. சமையல்கலைக்குள்ள நுழைய விரும்பறேன்' அப்படீன்னேன். அப்பாவிடம் சொன்னதுதான் திருப்புமுனை. 'அப்பா, நீங்க துணிச்சலா இங்கே பிசினஸ் செய்யறீங்க. உங்களைப்போலவே நானும் என் திறமையை வைத்துச் சாதிக்க விரும்பறேன். என் கனவைப் பின்தொடர விடுங்க' அப்படீன்னு கேட்டேன். அவர் சம்மதிச்சார்.
தென்றல்: கிரேட். அப்புறம்? ஆர்த்தி: ஜெய்ப்பூர்ல ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சேன். அங்கே தாஜ் குரூப் ஹோட்டல்கள் என்னை மேனேஜ்மெண்ட் ட்ரெய்னீயாகத் தேர்ந்தெடுத்தது. நாடெங்கிலுமுள்ள தாஜ் ஓட்டல்கள்ல இரண்டு வருஷம் கடுமையான பயிற்சி கொடுத்தாங்க. தாஜ்ல நான் மொத்தம் 5 வருஷம் வேலை பார்த்தேன்.
தென்றல்: அமெரிக்காவுக்கு எப்படி வந்தீங்க? ஆர்த்தி: எனக்கு கிரியேடிவிடி ரொம்ப அதிகம். வித்தியாசமா சிந்திப்பேன். ஆனா, தாஜ் குரூப்ல இருந்தவங்க பழம் தின்னு கொட்டை போட்டவங்க. அதிக மாற்றங்களை விரும்பாதவங்க. நாம சரியான எடத்துல இல்லையோன்னு சந்தேகம் வந்திடுச்சு. அதுக்குள்ள நான் வளர்ச்சி அடைஞ்சு, ஒரு ரெஸ்ட்ராண்ட்டுக்கு தலைமை செஃப் ஆய்ட்டேன். இன்னும் அதிகம் செய்ய ஆசைப்பட்டேன்.
அப்பத்தான் நான் ப்ராவிடன்ஸ் (ரோட் ஐலண்ட்) ஜான்சன் அண்ட் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சமையல்கலை கல்லூரிக்கு அப்ளை செய்தேன். வீட்டுலவேற கல்யாணம் செய்துக்கச் சொல்லி ஒரே பிரெஷர் (சிரிக்கிறார்). ஒரு சின்னத் தந்திரம் செய்தேன். எனக்கு ஒரே ஒரு வருஷம் குடுங்க, கொஞ்சம் உலகத்தைப் பார்த்துட்டு வந்து நீங்க சொல்றதைச் செய்யறேன் அப்படீன்னேன். சொல்லி இப்ப நாலு வருஷம் ஆயிடுச்சு (சிரிக்கிறார்).
தென்றல்: முக்கியமான இரண்டு கட்டங்கள்ல நீங்க அப்பாகிட்ட சாமர்த்தியமாப் பேசி அனுமதி வாங்கிட்டீங்க, இல்லையா? ஆர்த்தி: தென்னிந்தியக் குடும்பங்கள்ல கட்டுப்பாடுகள் அதிகம். கொஞ்சம் சாமர்த்தியமாப் பேசித்தான் சமாளிக்கணும்.
தென்றல்: அப்புறம்...? ஆர்த்தி: ஜான்சன் அண்ட் வேல்ஸில Baking & Pastries சிறப்புப் பிரிவை எடுத்துக்கொண்டேன். நான் அதுவரை முயற்சிக்காத ஏரியா அது. கல்லூரிக்கு வந்ததும் இன்டர்ன்ஷிப்புக்கு 'ஜுனூன்' ரெஸ்ட்ராண்ட்டுக்கு விண்ணப்பிச்சேன். ஏற்றுக்கொண்டார்கள். சில மாதங்களிலேயே என் திறமை அவர்களுக்குப் பிடித்திருக்க வேண்டும். எனக்குப் பதவி உயர்வுகள் கொடுத்தார்கள்.
தென்றல்: கேட்க நன்றாக இருக்கிறதே... ஆர்த்தி: கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும். அவர்கள் ஃப்ளோரிடாவின் ஆர்லண்டாவில் ஓர் உணவகம் திறக்க ஆசைப்பட்டார்கள்; அதற்காக ஜுனூன் ஓனர் என்னை அணுகினார். நான் ஏற்றுக்கொண்டு அங்கே போய் ஓராண்டு இருந்தேன். சென்ற வருடம்தான் நியூ யார்க் திரும்பினேன்.
தென்றல்: 'Chopped' போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் எப்படி வந்தது? ஆர்த்தி: ஃப்ளோரிடா உணவகம் ஏதோ சில நிர்வாகக் காரணங்களால் மூடப்பட்டது. அருமையான உணவு என்று பத்திரிகைகள் பாராட்டும்படியாக நாங்கள் நடத்தினோம். ஆனாலும் அங்கே ஃப்ரான்ச்சைஸ் எடுத்தவருடன் ஏதோ பிரச்சனை. அது மூடுவதற்கு நான் காரணமல்ல என்றாலும், நிர்வாகி என்ற முறையில் எனக்கு அது சற்றே தளர்வைத் தந்தது. நான் சிறந்த செஃப்தான் என்று எனக்கு நானே உறுதிசெய்துகொள்ள வேண்டிய கட்டாயம்.
அதுவுமில்லாமல் இந்தத் துறையில் ஆண்கள்தான் அதிகம். அவர்களுக்கு நடுவே நான் ஒரேயொரு பெண்! கல்லூரி நாட்களில் 'Chopped' போட்டிகளை நண்பர்களோடு டி.வி.யில் பார்த்தது நினைவுக்கு வந்தது. மிக விறுவிறுப்பான ஷோ. அதில் அதிகமாக ஆசியர்களையோ இந்தியர்களையோ பார்த்ததில்லை.
நியூ யார்க் திரும்பியதுமே நான் அதற்கு விண்ணப்பித்தேன். ஃபோனில் உரையாடல், ஸ்டுடியோவில் ஒரு நேர்காணல் என்று கடுமையான செலக்ஷன் தேர்வுகள். நான்கு மாதத்துக்குப் பின் தேர்வானேன்.
தென்றல்: ஒரு சவாலாகத்தான் 'Chopped' போட்டியில் பங்கேற்றீர்கள், சரியா? ஆர்த்தி: ரொம்பச் சரி. இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்பதைத்தான் அந்தப் போட்டி சோதிக்கும். வேகம், சமயோசித புத்தி ஆகியவற்றை யாரும் கடைசிநிமிடத்தில் கற்றுக்கொள்ள முடியாது. எவ்வளவு நேரம் ஆகிறதென்று கணக்குப் பார்த்து எல்லாவற்றையும் செய்து பார்த்தேன். நிறையப் படித்தேன். அதுவரை பயன்படுத்தியிராத சில பண்டங்களைப் பற்றி வாசித்தேன். எனக்கு desserts அதிகம் பரிச்சயமில்லை. அதில் சிலதைச் செய்து பார்த்தேன்.
தென்றல்: 'Chopped' நிகழ்ச்சியின் சில சுவையான சம்பவங்களைச் சொல்லுங்கள். ஆர்த்தி: அதுல நாலு செஃப்கள் போட்டி போடுவோம். ஒரு மர்மக்கூடை இருக்கும். அதில 4 பண்டங்கள் இருக்கும். 30 நிமிஷத்துல ஒரு டிஷ் தயார் செய்யணும். முதல் சுற்றில் எனக்கு நத்தை (snails) வந்தது.
எனக்கு உடனே மும்பை மழைதான் ஞாபகம் வந்தது. வீட்டுப்படியில நத்தைகள் ஊர்ந்துவரும். நான் என் சகோதரனும் அதைப் பந்துபோல உதைப்போம். அந்த நினைவோட நான் சமைத்தேன்!
அடுத்த சுற்றில் மீன் மற்றும் சௌசௌ கூழ் (chayote squash) இருந்தது. வீட்டுல அம்மா சாம்பார்ல சௌசௌ போட்டாலே நாங்க புலம்புவோம். மற்ற போட்டியாளர்களுக்கு அதை என்ன செய்யறதுன்னே தெரியலை. நான் அதை வைத்து பூண்டு போட்டு பிரெட் உப்புமா மாதிரி செய்தேன். மீனுக்கு எள், மசாலா எல்லாம் சேர்த்து எங்கம்மா செய்யற மாதிரியே சமைத்தேன். ஜட்ஜுகள் அசந்து போய்ட்டாங்க.
அடுத்தது டெஸ்ஸர்ட். ஒரு கேக் கொடுத்திருந்தாங்க. அதை வைத்து ஷாஹி டுக்டா மற்றும் ஸ்ரீகண்ட் (ஒரு மஹாராஷ்டிர இனிப்பு யோகர்ட்) செய்தேன். அதுதான் எனது வெற்றிப் படைப்பும்!
தென்றல்: லவ்லி. பொதுவா உணவைப்பற்றிய உங்கள் கோட்பாடு என்ன? ஆர்த்தி: உணவு மக்களை ஒன்று சேர்க்கிறது. ஒருவருக்கொருவர் பிணையக் காரணமாகிறது. வீட்டுக்கு நண்பர்கள், உறவினர்களை அழைப்பதோ, திருவிழாவோ எதுவானாலும் அங்கே விருந்து இருக்கும். அந்த நிகழ்வின் மையமாக உணவுதான் இருக்கும். அப்படி உறவுகளை ஏற்படுத்தும் அம்சத்தில் நான் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால்...
தென்றல்: ஆனால்? ஆர்த்தி: இன்றைய உலகில் கன்னாபின்னாவென்று உணவை மரபணு மாற்றம் செய்கிறார்கள். முன்போல அது ஊட்டம் தருவதாக இல்லை. சரியாக உண்ணுதல், சரியான பண்டங்கள், சிறு விவசாயிகளை ஆதரித்தல் போன்றவை குறித்துச் சுற்றியிருப்போருக்குச் சொல்வது என்போன்ற சமையல் கலைஞர்களின் கடமை. என்னைப் பொருத்தவரை, விரும்பியதைச் சமைப்பது என்பது மாறி, இன்றைக்கு நான் போஷாக்கான உணவை - சுவையானதை மட்டுமல்ல - சத்தானதைச் சமைக்கிறேன்.
தென்றல்: அற்புதம். ஆர்த்தி: நம் ஆயுர்வேதம், நம் கலாசாரம் எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள். அவை நல்ல சத்துமிக்க உணவைத்தான் பரிந்துரைத்தன. அதை நாம் உலகுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
தென்றல்: ஆமாம். இந்திய உணவை உண்ணுகையில் ஒரு நல்ல உணர்வு ஏற்படுகிறது... ஆர்த்தி: மிகச்சரி. "எல்லாவற்றிலும் மஞ்சள் சேர்க்கவேண்டும். அது நச்சுக்கொல்லி (antiseptic), அழற்சியைத் தடுக்கும் (anti inflammatory)” என்று என் பாட்டி சொல்வார்கள். இது இப்போது பரவலாகி வருகிறது. நாம் எப்போதுமே இதைச் செய்துவந்தோம். நம் உணவுமுறை ஏதோ தற்காலிக ஆர்வமல்ல.
அதனால்தான் எனக்கு 'Chopped' போட்டியில் ஜெயிப்பது முக்கியமாக இருந்தது. ஃப்ரெஞ்சு அல்லது ஜப்பானிய உணவுகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல நமது சமையல்வகை. ஏன், அவற்றைவிட உயர்ந்ததாகக்கூட இருக்கலாம். அதைப் பிரபலப்படுத்த நாம் முயலவேண்டும்.
தென்றல்: ஆஹா, நல்ல கருத்து! உணவும் ஆரோக்கியமும் குறித்துச் சொன்னீர்கள். ஆர்த்தி: கோஜி பெர்ரி என்பதுபோல இன்றைக்கு வந்து நாளைக்குப் போகும் மோகமாக உணவு இருக்கக்கூடாது. நமக்குள் எது போகிறதோ அந்த உணவு அடுத்த தலைமுறைகளைப் போய்த் தொடும். என்போன்ற சமையல் கலைஞர்கள் மற்றவர்களுக்காகச் சமைத்தாலும், வீட்டுணவு பரவலாக வேண்டுமென்றே விரும்புகிறோம். கடையில் கிடைப்பதை அப்படியே வாங்கி உண்பதைவிட வீட்டில் சமைப்பது அதிகரிக்க வேண்டும்.
தென்றல்: தலைமை செஃப் என்ற முறையில் நீங்கள் சந்திக்கும் அன்றாடச் சவால்கள் என்னென்ன? ஆர்த்தி: தினமும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தயாராகும் உணவைச் சுவைத்துப் பார்ப்பேன். அதைச் சரிசெய்ய உதவவேண்டும். அங்கேதான் ஈகோ மோதல் வரும். 'இல்லையில்லை, நல்லாத்தான் இருக்கு'ன்னு அவர் சொல்வார். அவரோடு போராட வேண்டியிருக்கும். சிலசமயம் கூப்பாடு போடுவோம். இறுதியாக மேஜைக்கு உணவு போயாக வேண்டும். அது நேர்த்தியாக இருப்பதை நான் உறுதிசெய்ய வேண்டும்.
பிறகு, புதியவர்களை வேலைக்கு எடுப்பது, பயிற்சி தருவது என்று பல கடமைகள். நியூ யார்க்கில் சமையல்காரர்கள் வருவார்கள், போய்விடுவார்கள். அதனால் புதியவர்களை ட்ரெயின் செய்வது நடந்துகொண்டே இருக்கும். ஹெல்த் டிபார்ட்மெண்ட் சட்டதிட்டங்களை எல்லோரும் சரிவரப் பராமரிக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். சிறப்பாகப் பணி செய்பவர்களின் வளர்ச்சிக்கு உதவவேண்டும்.
தென்றல்: எதுவரை? சரியான தரம் கிடைக்கும்வரையா? ஆர்த்தி: அதற்கு முடிவே கிடையாது. மிக உயர்ந்த தரத்தை அடைவது எளிது; அதை அப்படியே தக்கவைப்பது மிகக்கடினம். அதுதான் என் வேலை.
தென்றல்: எல்லோரும் இப்போது ஆர்கானிக் உணவு என்கிறார்களே, அதுவும் ஒரு மோகம்தானா இல்லை ஒரு கட்டாயமா? ஆர்த்தி: அது மோகமாக இருக்கக்கூடாது, அது நமது கடமை. நாம் உண்ணுவது தூயதாக இருக்கவேண்டும். ஒரு பொருள் விலைகுறைவு, எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காக அல்லாமல், அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து சமையல்கலைஞர்கள் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், உங்கள் உணவால் யாருக்கு நோய் வரப்போகிறதென்று நீங்கள் ஊகிக்க முடியாது.
பெரும்புகழ் ஈட்டிய சமையல் கலைஞர்கள் சரியான உணவுப்பொருட்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலசமயம் அவற்றைத் தாமே பயிரிடுகிறார்கள், அல்லது ஆடு, மாடுகளை வளர்த்திருக்கிறார்கள். டேன் பார்பர் போன்ற மகத்தான உணவுக் கலைஞர்கள் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன். ஏதோ இஷ்டப்பட்டால் செய்யலாம் என்பதல்ல, அது தவிர்க்க முடியாதது. கேன்சர், உடல்பருமன் இன்னும் பல நோய்களுக்கு உணவே காரணமாகிறது.
தென்றல்: முற்காலத்தில் நம் ஊரில் வீடுகளிலேயே ஆடுமாடுகளை வளர்த்தார்கள். அதற்கும் நீங்கள் கூறியதற்கும் தொடர்பு இருக்கிறதல்லவா? ஆர்த்தி: நிச்சயம். இன்றைக்கு நமக்குக் கிடைக்கும் பால் அல்லது இறைச்சியில் சொல்லமுடியாத நச்சுப்பொருட்கள் உள்ளன. பாலை அதிகரிப்பதற்காக ஆக்ஸிடோசின் ஊசி போடுகிறார்கள். அவற்றைக் கன்றுக்குட்டிகளைக் குடிக்கவிடுவதில்லை! அது வருந்தத்தக்கது.
நாம் பயிரிட்டோம், ஆடுமாடு வளர்த்தோம். கிராமத்திலிருந்து ஃப்ரெஷ்ஷாக உணவு வந்தது. இன்றைக்கோ பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டன. இன்றைக்கு நம்மால் முன்போல ஆடுமாடு வளர்க்க அல்லது பயிரிட முடியாமல் இருக்கலாம். குறைந்தபட்சம் நாம் அப்படிச் செய்பவர்களை ஆதரிக்க வேண்டும். சரியான இடத்திலிருந்து பொருட்களை வாங்கவேண்டும். அது நன்மை செய்யும்.
தென்றல்: சரியாகச் சொன்னீர்கள். இப்போது உங்களது பிற படைப்பூக்கங்களைப் பற்றிச் சொல்லுங்கள். ஆர்த்தி: எவ்வளவு பிசியாக இருந்தாலும் நான் ஹிப்ஹாப்/ஜாஸ் நடன வகுப்புகளுக்குப் போகிறேன். ஓவியம் என்று வரையாவிட்டாலும் பிளேட்டில் உணவு வைப்பதையே ஓவியத்தின் அழகுணர்வோடு செய்கிறேன். அதை 'Art on a plate' என்று சொல்வார்கள். பிறகு, செஃப் விகாஸ் கன்னா அவர்களோடு சேர்ந்து ஒரு புத்தகம் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.
தென்றல்: எதையும் முயல நீங்கள் அஞ்சுவதில்லை. இங்கிருக்கும் இளம்பெற்றோர் மற்றும் நம் சமுதாயம் பற்றிய உங்கள் கருத்து? ஆர்த்தி: ஆசிய சமுதாயத்தினர், தமது குழந்தைகளுக்கு வழிகாட்டுவது நல்லதுதான், அவர்களை நன்றாக வளர்க்கிறீர்கள். ஆனால், சில முடிவுகளை அவர்களே எடுக்குமளவுக்கு அவர்களை நம்பவேண்டும். இல்லையென்றால் அவர்கள் தமது முழுத்திறனோடு பிரகாசிக்க முடியாது.
இளைஞர்கள் தமது கனவுகளைத் துரத்தவேண்டும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று யோசிக்கவேண்டும். 'இதைச் செய்யலாம்... வேண்டாம், கடினமாக இருக்கிறது, அதைச் செய்யலாம்' என்று அல்லாடக்கூடாது. ஒருமுறை தேர்ந்தெடுத்தால் அதைத் தொடர்ந்து செய்யவேண்டும். கஷ்டம் என நினைத்தால் ஹாபிகூடக் கடினமாகிவிடும்.
நாள் போகப்போக இன்னும் கடினமாகும். நீ சரியில்லை என்பார்கள். உன்னை மட்டம் தட்டுவார்கள். தன்னம்பிக்கையோடு நீதான் மேலே நடக்கவேண்டும். உன்னை நம்புவது நீமட்டுமே ஆக இருந்தாலும் பரவாயில்லை, விடாப்பிடியாகச் செல்லவேண்டும்.
தென்றல்: பிரமாதம்... ஆர்த்தி: பெண்களுக்குச் சொல்கிறேன்... சமையல்துறை ஆணாதிக்கம் நிரம்பியதாக இருக்கலாம். ஆனாலும், அதில் ஆர்வமிருந்தால், உனக்குத் திறமை இருந்தால், தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும். அப்போது எந்தத் தடையும் உன்னை நிறுத்தாது.
தென்றல்: உங்களுக்குப் பிடித்த சைவ உணவு? ஆர்த்தி: ரவாதோசை. அதில் வெங்காயம், பச்சைமிளகாய், முந்திரி எல்லாம் இருக்கவேண்டும். சிலவகைச் சட்னிகள், சாம்பார் வேண்டும்.
தென்றல்: உங்கள் முன்னோடிகளாக நீங்கள் கருதுவது... ஆர்த்தி: செஃப் ஆனந்த சாலமன். இவர் தாஜ் ஹோட்டல்ஸில் செஃப் ஆக இருந்தார். உணவைப்பற்றிய எனது எண்ணத்துக்கு வடிவம் கொடுத்தவர் இவர்தான். பிறகு ஓப்ரா வின்ஃப்ரே. உன் தோலின் நிறம், உன் தோற்றம் எல்லாம் எப்படி இருந்தாலும் இவை உன்னைத் தீர்மானிப்பதில்லை என்பதற்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் இவர்தான். சற்றே எனக்கு மனத்தளர்ச்சி ஏற்பட்டாலும் இவரது ஷோவைப் போட்டுப் பார்ப்பேன். அவரைப்பற்றிப் படிப்பேன்.
அடுத்து, செஃப் விகாஸ் கன்னா. எனக்கு வழிகாட்டி ஒரு செஃப் ஆகப் பக்குவப்படுத்தியவர் அவர். மனிதர்களின் நடத்தையைப் புரிந்துகொள்ள உதவினார். நான் ரொம்ப அக்ரெஸிவ். தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் குறியாக இருப்பேன். என்னை அமைதிப்படுத்தி, மிகப்பெரிய அளவில் வடிவமைத்தார்.
தென்றல்: அண்மையில் படித்த புத்தகம்... ஆர்த்தி: நாம் உச்சியை அடையவேண்டுமென்றால், அப்படி அடைந்தவர்களை இமிடேட் செய்யவேண்டுமென்று சொல்வார்கள். அதனால் அப்படிப்பட்டவர்களின் நூல்களைப் படிப்பேன்.
விகாஸ் கன்னாவை எடுத்துக்கொள்ளுங்கள். தனது அழகிய தோற்றத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் அவர் மிகநல்ல நூல்களை எழுதியிருக்கிறார். போப்பரசருக்கு உணவு சமைத்திருக்கிறார். இந்தியாவில் ஒரு சமையல்கலை அருங்காட்சியகத்தை நிறுவிவருகிறார். இந்தியாவின் விழாக்களைப்பற்றி அவர் எழுதியுள்ள நூல்தான் இதுவரை வெளியான எந்த நூலையும்விட விலை அதிகமானது ($18,000) முகப்புப்பக்கம் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. அதிபர் பராக் ஒபாமா, போப்பரசர் ஆகியோருக்கு அன்பளிக்கப்பட்டது. அதில் பொங்கல் தொடங்கி, பார்சிக்கள், காஷ்மீரிகள் ஆகியோரின் பண்டிகைகள்கூட இடம்பெற்றுள்ளன.
தென்றல்: ஓ! வேறென்ன படிக்கிறீர்கள்? ஆர்த்தி: சாதனையாளர்கள் பற்றிப் படிக்கிறேன். நீச்சல்வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் "இருட்டில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அது உங்களை வெளிச்சத்தில் கொண்டுசேர்க்கிறது” என்கிறார்.
தென்றல்: ஆமாம். அவர் காலை 4 மணிக்கே எழுந்துவிடுகிறார். கடுமையான உழைப்பு. சைக்கிள் வீராங்கனை கிறிஸ்டின் ஆர்ம்ஸ்ட்ராங் கூறுவதும் வெகு இன்ஸ்பயரிங். அவர் தன் மகனை வெற்றிமேடைக்குக் கொண்டுசெல்ல விரும்பினாராம். அதற்காக அதிகாலையில் எழுந்து பயிற்சி செய்திருக்கிறார். 12 ஆண்டுகளில் 3 ஒலிம்பிக் தங்கமெடல்களை வென்றுள்ளார். அது மகத்தான சாதனை. (பார்க்க: www.facebook.com).
பிரையன் ட்ரேசி, "முதலில் சேம்பியன்களைக் காப்பியடியுங்கள்” என்றார். நீங்களும் அதையே கூறினீர்கள். அவர்கள் 999 வழிகளையும் செய்துபார்த்து, எது வெற்றிபெறும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் செய்ததைச் செய்து, அவர்களிருக்கும் இடத்தை அடைந்து, நீங்கள் அதற்கு மேலே சாதிக்க முடியும். சரி, சமீபத்தில் என்ன படித்தீர்கள்? ஆர்த்தி: மார்க்கஸ் சாமுவேல்சன் எழுதிய 'Chef' என்ற புத்தகம். அவர் Red Rooster என்ற உணவகத்தின் உரிமையாளர். ஆஃப்ரிக்காவிலிருந்து குடிபெயர்ந்த அவரை ஒரு ஸ்வீடிஷ் குடும்பம் தத்தெடுத்தது. வகுப்பில் அவர்மட்டுமே கறுப்பினத்தவர் என்பதால் நசுக்கப்பட்டார். அதன் காரணமாகவே அவரைச் செஃப் ஆகவிடாமல் தடுத்தனர். ஆனால் மிகமிகக் கடினமாக உழைத்து, நியூ யார்க்குக்கு வந்தார். இப்போது அவர் மிகவும் கொண்டாடப்படும் சமையல்கலைஞர்!
தென்றல்: சினிமா பார்க்க நேரம் கிடைக்குமா? கடைசியாகப் பார்த்த படம் என்ன? ஆர்த்தி: கபாலி பார்த்தேன். ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருடைய ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அவர் பேசும் விதமும்தான். ஒவ்வொரு படத்திலும் ஊக்கம் தருகிற கதை ஒன்று இறுதியில் இருக்கும்.
அவருடைய வாழ்க்கை வரலாறு படித்தேன். மிக எளிய தொடக்கம். மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால், அவர் ஒரு ரிஷியைப் போல. அவரை எதுவும் பாதிப்பதில்லை. புகழ் அவர் தலைக்குப் போவதில்லை. யார் என்ன விமர்சித்தாலும் அவர் கவலைப்படுவதில்லை.
தென்றல்: அவர் மேக்கப் இல்லாமல் வெளியே வருகிறார். பிற கதாநாயகர்கள் அப்படியல்ல. ஆர்த்தி: ஆமாம், எதுவுமே அவருக்கு ஒரு பொருட்டல்ல.
தென்றல்: உங்களை வழிநடத்தும் நம்பிக்கை என்று எதைச் சொல்வீர்கள்? ஆர்த்தி: தன்னை நம்புதல். யாரும் நீ திறமைசாலி, அழகானவள் என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை. நான் எல்லாவற்றையும் சந்தித்துவிட்டேன். இந்தியாவில் கறுப்புத் தோலுடன் வளர்வது மிகக்கடினமான அனுபவம். என்னைச் சீண்டுவார்கள். என்னிடம் ஏதோ தப்பு இருக்கிறதென்றுகூட நம்பவைத்தார்கள். தென்றல்: கடவுளே! ஆர்த்தி: திறமைகளிலும் அப்படித்தான். அதிலும் நீ ஒரு பெண் என்றால் நான்கு மடங்கு அதிகம் உழைக்கவேண்டும். நான் அப்படித்தான் உழைக்கிறேன். என்னொத்த ஆண்களைவிட அதிக வலிமையானவளாக நான் வெளிப்படுகிறேன்.
எனது நாட்டின் பெண்களுக்கு நான் ஒரு தூண்டுகோலாக இருக்க விரும்புகிறேன். 'நீ பார்க்க அப்படி இருக்கவேண்டும், இப்படி உடையணிய வேண்டும், சின்ன வயதாக இருக்கவேண்டும், அப்படி இல்லாவிட்டால் யாரும் பாராட்டமாட்டார்கள்” என்பதெல்லாம் பொய். அது உண்மையல்ல என்று நான் செய்துகாட்ட விரும்புகிறேன். தென்றல்: உங்கள் மனதைத் திறந்து பேசியமைக்கு நன்றி. நீங்கள் இன்னும் பெரிய சிகரங்களைத் தொடப் போகிறீர்கள். தென்றல் வாசகர்கள் சார்பாக இப்போதே அதற்கான வாழ்த்துக்கள்.
உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன் தமிழ்வடிவம்: மதுரபாரதி
*****
பாதுகாப்புக் கூண்டுக்குள்... நான் 'Chopped' போட்டியில் பங்கேற்றபோது, என்னிடம் வந்து 'இதெல்லாம் உன்னால் முடியுமா?' என்று கேட்பார்கள். இந்தியர்கள் சவாலை விரும்புவதில்லை. ஏதோவொரு அரசாங்க வேலைக்குப் போய்விடலாம் என்று நினைப்பார்கள். அப்படியொரு பாதுகாப்பான கூண்டுக்குள் வாழ்வதால் படைப்புத் துறைகளில் சிறப்படைவதில்லை.
நாம் தோல்விக்கு அஞ்சக்கூடாது. இதை நான் விளையாட்டு வீரர்கள், பெரிய பாடகர்கள் இவர்களிடம் கற்றேன்.
இப்போது நான் பிரியாங்கா சோப்ராவைப்பற்றி நிறையப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கருநிறத் தோல் கொண்டவர்; பாலிவுட்டுக்கு லாயக்கில்லை என ஒதுக்கப்பட்டவர். இப்போது ஹாலிவுட் உட்பட எங்கு பார்த்தாலும் அவரது போஸ்டர்கள்தாம். 'Quantico', 'Fast & Furious' ஆகிய படங்களில் நடிக்கிறார். பெரிய சாதனைதான். ஆனாலும் அவரைப்பற்றிப் புரளி பேசுகிறார்கள். அவரை எந்தப் புரளியும் தடுத்து நிறுத்தாது.
- ஆர்த்தி சம்பத்
*****
எனக்குள் எரியும் நெருப்பு எப்போதுமே எனக்குள் ஒரு நெருப்பு எரிந்துகொண்டிருக்கிறது. அது இல்லாத நாளில்லை. நான் இங்கே தனியாக வசிக்கிறேன். ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. அது மிகச்சிரமமானது. சிலசமயம் காலையில் எழுந்திருக்கவே வேண்டாமெனத் தோன்றும். வேலைக்குப் போகவேண்டாம், வீட்டுக்குப் போய்விடலாம் என்று தோன்றும். அது மிக எளிது. நான் நிறையத் தியாகம் செய்திருக்கிறேன். நான் திருமணம் செய்துகொள்ளலாம், குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளலாம். அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எதைச் செய்கிறேனோ அதை மிகநன்றாகச் செய்யவே விரும்புகிறேன்.
சென்ற பத்து ஆண்டுகளாக தினமும் 12 மணிநேரம் வேலை செய்கிறேன். என் ஹாபிகளைச் செய்கிறேன். உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குகிறேன். தினமும் ஒரு பக்கமாவது புதிதாக வாசிக்கிறேன். அப்போதுதான் முன்னணியில் இருக்கமுடியும்.
- ஆர்த்தி சம்பத் |