அரங்கேற்றம்: அனாமிகா கண்ணன்
ஜூன் 18, 2016 அன்று கலாவந்தனா நடனப்பள்ளி மாணவி செல்வி. அனாமிகா கண்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சான் ஹோஸே மெக்சிகன் ஹெரிடேஜ் பிளாஸாவில் அவரது குரு திருமதி. சுந்தரா சுவாமிநாதன் தலைமையில் நடந்தேறியது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் அனாமிகாவின் பெற்றோர் கலைஞர்களை அறிமுகப்படுத்தி, வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியைப் புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பித்தார். அடுத்து நாட்டையில் ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் "ஆனந்தநர்த்தன கணபதிம்" என்னும் கணபதி கௌத்துவத்தை அழகான அபிநயங்களுடனும், முத்திரை பதிக்கும் அடவுகளுடனும் ஆடினார். தொடர்ந்து குருவின் நட்டுவாங்கத்தில் திஸ்ரஏக தாளத்தில் அமைந்த அலாரிப்பு மிகத் துல்லியமாக அமைந்திருந்தது. சக்ரவாக ராக ஜதிஸ்வரத்துக்கு அனாமிகா மிக அழகாக ஆடினார். ஓரு தோழி வருந்தும் தன் கதாநாயகிக்காக முருகனிடம் அவனுடைய தயைகோரி மன்றாடும் நிகழ்வுகளை விளக்கும் பாபநாசம் சிவனின் ஸ்ரீரஞ்சனி ராக வர்ணத்திற்கு உணர்ச்சிகளை அபிநயத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்தினார். தொடர்ந்து வந்த "வருகலாமோ அய்யா" பதத்தில், நந்தனாருக்குத் தில்லையம்பலத்தின் நந்தி விலகும் காட்சியை நேர்த்தியாக வெளிப்படுத்தினார். சுருட்டியில் அமைந்த தில்லானா மஹா விஷ்ணுவை மையமாகக் கொண்டிருந்தது.

சங்கீத கலாநிதி ராஜம் ஐயரின் சிஷ்யரான திரு. கோமதி நாயகம் (வாய்ப்பாட்டு), திரு. சக்திவேல் முருகானந்தம் (மிருதங்கம்), திரு. சுனில்குமார் (புல்லாங்குழல்), திரு. சிகாமணி (வயலின்), குரு சுந்தரா அவர்களின் நட்டுவாங்கம் நாட்டியத்திற்கு மெருகுசேர்த்தது. இறுதியில் குரு சுந்தரா அனாமிகாவின் நாட்டியத்தைப் புகழ்ந்துபேசி சான்றிதழ் வழங்கினார். அனாமிகா இசைக்குழுவினரை கௌரவித்தபின், நன்றியுரை வழங்கினார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com