ஜூன் 18, 2016 அன்று செல்வன். ரிஷிகேஷ் பாலாஜியின் கர்நாடக இசை அரங்கேற்றம் மேரிலாந்து கிரீன்பெல்ட்டிலுள்ள எலெனார் ரூஸ்வெல்ட் உயர்நிலைப் பள்ளியில் குரு திரு. சூர்யப்ரகாஷ் அவர்களின் ஆசியுடன் நடந்தேறியது.
நாட்டை ராகத்தில் சிறு ஆலாபனையுடன் தொடங்கி, "சுவாமிநாத பரிபாலய" என்ற முத்துசுவாமி தீக்ஷிதரின் பாடலுடன் கச்சேரி களைகட்டத் தொடங்கியது.
கல்பனாஸ்வரங்களையும், சர்வலகு முதலியவற்றைக் கையாண்ட விதமும் கச்சேரியைப் பெரிதும் ரசிக்க வைத்தன. "ஸ்ரீநாரத" பாடலுக்குப்பிறகு பந்துவராளியில் நிரவல், கல்பனாஸ்வரங்களுடன் "விசாலாக்ஷீம்" பாடல் சிறப்பு. தொடர்ந்து ஆஹிரியில் பாடிய சியாமா சாஸ்திரியின் "மாயம்மா" பாடல் மிக அருமை. அடுத்ததாக வராளி ஆலாபனையோடு தொடங்கியது பாபநாசம் சிவனின் "கா வா வா". கச்சேரியின் பிரதானப் பாடலாக காம்போஜி ராகத்தில் தியாகராஜரின் "மா ஜானகி" அமைந்தது. பெரும்பாலான அரங்கேற்றங்களில் இடம்பெறாத ராகம்-தானம்-பல்லவி நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது. காபி ராகத்தில் திஸ்ர திரிபுட தாளத்தில் "மந்தஹாஸ வதன ஹரே கிருஷ்ணா" என்ற வரியில் அமைந்த ராகம் தானம் பல்லவி அருமை. பாரதியின் "சின்னஞ்சிறு கிளியே", வியாஸராயரின் "கிருஷ்ணா நீ பேகனே பாரோ" ஆகியவை தொடர்ந்தன. நிறைவாக வந்தது குரு சூர்யப்ரகாஷ் இயற்றிய சுத்தசாரங்க ராகத்தில் தில்லானா.
வயலினில் சித்தார்த் அஷோக்குமார், மிருதங்கத்தில் விஜய் கணேஷ், கடத்தில் சௌம்யநாராயணன், தம்புராவில் குமாரி அஜிதா பாலா அருமையாகப் பக்கம் வாசித்தனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் குமாரி சுதீக்ஷணா வீரவல்லி. குரு சூர்யப்ரகாஷ், தலைமை தாங்கிய பேரா. சங்கரன் மஹாதேவன், வீணை வித்வான் திருமதி. நிர்மலா ராஜசேகர், பத்மபூஷண் பேரா. ஸ்ரீனிவாச வரதன் ஆகியோர் ரிஷியின் திறமையை வெகுவாகப் பாராட்டினர். அரங்கேற்ற மேடையலங்காரம் பிரமிக்க வைத்தது.
ஆங்கிலம்: ரங்கநாயகி வேணுகோபால் தமிழில்: பாலாஜி ஸ்ரீனிவாசன் |