ஜூன் 19, 2016 அன்று திருமதி. இந்துமதி கணேஷின் மாணவி செல்வி. ரசிகா சுதர்ஸனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஓலோனி அரங்கத்தில் நடைபெற்றது.
மதுரை முரளிதரன் மெட்டமைத்த புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து கணபதியை வணங்கி ஜதிஸ்வரத்திற்கு சென்றார். ரசிகப்ரியா ராகத்தில் அமைந்த ஜதிஸ்வரத்துக்கு மிக அழகாக ஜதி அமைத்திருந்தார் குரு இந்துமதி. அடுத்து பந்துவராளி வர்ணம், ஏழுமலையான்மீது அமைந்திருந்தது. அறத்தை நிலைநாட்டப் பத்து அவதாரங்களை எடுத்த பெருமானாகவே மாறி, இறுதியில் வாமனனாக இவ்வுலகையே ஈரடியில் அளந்து, அரங்கத்தின் கைதட்டலை அள்ளினார்.
அடுத்து மஹாராஜா ஸ்வாதித் திருநாள் இயற்றிய சிவனைப்பற்றிய பதத்திற்கு, கையில் தீயும், உடுக்கையும் ஏந்தி, கண்களில் தீயசக்திகளை அழிக்கும் உக்ரத்துடன் ஆடினார் ரசிகா. தொடர்ந்தது இளங்கோவடிகளின் 'வடவரையை மத்தாக்கி' விஷ்ணுவின் மீதமைந்த பாடல். தன் பெருமையை மட்டுமே உலகம் பாடவேண்டும் என்று நினைக்கும் இரணியகசிபு, பிள்ளையிடம் எங்கே உன் இறைவன் என்று கேட்க, தூணிலிருந்து வந்து அவன் ஆணவத்தை அடக்கும் நரசிம்ம அவதாரத்தை அற்புதமாக வெளிப்படுத்தினார் ரசிகா. ஸ்வாதித் திருநாள் இயற்றிய தில்லானாவைத் தொடர்ந்து மங்களத்துடன் இனிதே நிறைவுற்றது ரசிகாவின் அரங்கேற்றம்.
திருமதி. இந்துமதி கணேஷின் மாமியார் கலைமாமணி திருமதி ரங்கநாயகி ஜெயராமன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ரசிகா ஈடுபாட்டையும், நடனம் ஆடிய நேர்த்தியையும் பாராட்டினார்.
திருமதி. சிந்து நடராஜன் வாய்ப்பாட்டு, திருமதி. சந்த்யா ஸ்ரீநாத் (வயலின்), திரு. ஆதித்யா கணேஷ் (மிருதங்கம்), திருமதி. அக்ஷயா கணேஷ் (நட்டுவாங்கம்) ஆகியவை இணைந்து நிகழ்ச்சியைச் சிறப்புறச் செய்தன.
நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |