ஜூன் 24, 2016 அன்று சான்பிரான்சிஸ்கோ, ஃப்ரீமான்டில் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவை நடத்திவரும் திருமதி. லதா ஸ்ரீராமின் மாணவி செல்வி. சுருதி நாச்சியம்மை சொக்கலிங்கத்தின் இசை அரங்கேற்றம் வார்ம் ஸ்ப்ரிங் சென்டரில் நடந்தது. நிகழ்ச்சி 'சாமி உன்னை' என்ற பாபநாசம் சிவனின் ஆரபி ராக வர்ணத்துடன் தொடங்கியது. பிறகு பாரதியாரின் 'ஓம் சக்தி', தியாகராஜரின் 'சாதிஞ்சனே'வையும் விறுவிறுப்புடன் பாடினார். 'பூர்ணசந்த்ர' எனும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ராகமாலிகை க்ருதிக்கு ஹம்ஸத்வனி ராகத்தில் எடுப்பாக ஸ்வர பிரஸ்தாரம் செய்தபின், வசந்தா ராகத்தில்' கருணாநிதி' என்ற பாட்டுக்கு, அழகாக ஸ்வர கல்பனையின்மூலம் எல்லோரையும் மகிழ்வித்தார். தொடர்ந்து பாடிய பாபநாசம் சிவனின் 'கபாலி' (மோஹனம்) வெகு நேர்த்தியாக இருந்தது. 'என்ன கவி பாடினாலும்' மிகவும் உருக்கமாக இருந்தது. தில்லானா மற்றும் திருப்புகழுடன் கச்சேரி நிறைவுற்றது.
சுசீலா நரசிம்மன் (வயலின்), பாலாஜி மகாதேவன் (மிருதங்கம்) நிகழ்ச்சிக்கு மிகவும் பக்கபலமாகும். குரு லதா ஸ்ரீராமிடம் நான்கு வருடங்களாகப் பயின்று வருகிறார் சுருதி. பாடல் தேர்வுகளிலும், சுருதியின் துல்லியமான தமிழ் உச்சரிப்பிலும், பெற்றோர் சிவகாமி - சொக்கலிங்கம் ஆகியோரின் தமிழ்ப்பற்றைத் தெளிவுறக் காணமுடிந்தது.
சுபா விஸ்வநாதன், சான் ரமோன், கலிஃபோர்னியா |