ஓரிகான் மாகாணம் போர்ட்லாண்டில் நகரில் வசிக்கும் நடனக் கலைஞர் ஸ்வேதா ரவிசங்கர் பல்வேறு அமெரிக்க நகரங்களுக்கும் ஓர் அரிய கலைப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடனக் கலையைப் பரப்பும் இந்தப் பயணத்தில் இந்துக் கோவில்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் உதவியுடன் கோவில் பண்பாடுகள், நாட்டியமும் நற்றமிழும் போன்ற சுவையான தலைப்புகளில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை வழங்குகிறார்.
இதுவரை நியூ ஜெர்ஸியின் பிரிட்ஜ்வாட்டர் வெங்கடேஸ்வரர் கோவில், விஸ்கான்சின் மாகாணத்தின் மேடிசன் நகர் கோவில், சிகாகோ அரோரா வெங்கடேஸ்வரர் கோவில் சிவராத்திரி விழா ஆகியவற்றில் 'கோவில் பண்பாடுகள்', 'சிவசக்தி' என்ற தலைப்புகளிலும், கலிஃபோர்னியாவின் விரிகுடாப்பகுதி ஃப்ரீமான்ட் பாரதி தமிழ்ச் சங்கத்தின் பாரதியார் பிறந்தநாள் விழாவில் “பாரதியின் பார்வையில் வாழ்க்கையில் வெற்றியடைய தேவையான திறமைகள்” என்ற தலைப்பிலும் நடன நிகழ்ச்சிகளைச் சிறப்புற வழங்கியுள்ளார்.
வரவிருக்கும் நிகழ்ச்சிகள்: ஆகஸ்ட் 20: அட்லாண்டா தமிழ்ச் சங்கம்; முப்பெரும் விழா; தலைப்பு: 'நாட்டியமும் நற்றமிழும்'. செப்டம்பர் 10: விநாயக சதுர்த்தி; டென்னஸி மாகாணம் நாஷ்வில்; ஸ்ரீகணேசர் கோவில் அரங்கம்; தலைப்பு: 'கணபதி குணநிதி' நவம்பர் 5: மேரிலாண்ட் மாகாணம் லான்காம் நகர் வாஷிங்டன் முருகன் கோவில் கந்தசஷ்டி விழா; தலைப்பு: 'முருகனும் அன்பும்'
ஸ்வேதா ரவிசங்கர் பதினாறு வருடங்களாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் எண்பத்தி ஐந்துக்கும் மேலான தனி பரதநாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கிப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் சிறந்த நட்டுவாங்கக் கலைஞரும் ஆவார். இருபத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மும்பை குரு திருமதி. பத்மினி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் முறையாக பரதநாட்டியத்தில் பயிற்சி பெற ஆரம்பித்து, 2001ல் அரங்கேற்றம் கண்டார். பின்பு சென்னை குரு திருமதி. ரோஜா கண்ணன் அவர்களிடம் தனது பரத வேட்கையைத் தொடந்தார். ஸ்வேதா தற்போது ஓரிகான் மாகாணம் போர்ட்லாண்ட் நகரில் ஆய்வுப் படிப்பு (PhD) செய்துகொண்டே பரத நாட்டியப் பயணத்தைத் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபரங்களுக்கு வலைமனை: www.swetaravisankar.com முகநூல்: www.facebook.com/Sweta.Natyam
கௌசல்யா ரவிசங்கர் |