ரஜினிடா!
இந்திய கிரிக்கெட்டுக்கு இப்படி ஒரு சோதனையா? இந்தியா-ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை இறுதியாட்டம் பத்து நிமிடங்களில் ஆரம்பம்! பதினைந்துபேர் இந்திய அணியில், ஐந்து பேர் வாந்தி, பேதி என்று திடீரென்று படுத்துவிட்டார்கள். போட்டி நடப்பதோ பாகிஸ்தான் கராச்சியில். அரையிறுதியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்ற கடுப்பிலிருந்தது. மொத்த பாகிஸ்தான் கூட்டமும் ஆஸ்திரேலியா பக்கம்.

ஆட்டத்தை நிறுத்துவது, கொஞ்சம் அவகாசம் கேட்பது என்றெல்லாம் முடியாத காரியம்; ஒன்றும் யோசிக்கவே நேரமில்லை. யாராவது இரண்டுபேரை சேர்த்துக்கொள்வது, இல்லை, பத்துப்பேராக ஆடுவது தவிர வேறு வழியில்லை. அப்போதுதான் நானும் ஹாஸனும் கவனித்தோம் (நாங்கள்தான் இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) ரஜினியும், பிபேக்கும் பெவிலியன் வழியாக நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.

"அண்ணே வாங்க" ஹாஸன், ரஜினியை அழைத்தார், விபரீத நிலைமையைச் சுருக்கமாகச் சொன்னார்.

"நம்ம ஊர் சித்தர்கள் சமாதிபோல, பலுச்சிஸ்தான்ல, சில சூஃபி ஞானிகள் சமாதி இருக்குன்னு சொன்னாங்க, அதைப் பார்க்கப் போறவழியில இங்கவந்தா, என்ன மாட்டிவிடறயே! நான் கிரிக்கெட் மாட்ச் பார்த்துதான் இருக்கேன், விளையாடினது இல்லையேப்பா" என்றார்.

பிபேக்கை பார்த்து கேட்டார், "நீ விளையாடி இருக்கியாப்பா?"

"நான் சின்ன வயசுல கிட்டிப்புள் விளையாடியிருக்கேன்!" என்றார் பிபேக்.

வலுக்கட்டாயமாக, இருவரையும் கேப்டனிடம் இழுத்துக்கொண்டு போனோம். கேப்டன் போணிக்குக் கொஞ்சம் சந்தேகமும், நிறையக் கவலைகளும் இருந்தன. ஆனாலும், ஹாஸன் விடவில்லை, ரஜினியைக் காட்டி, "இவர் ஒரு ரன் எடுத்தா, நூறு ரன் எடுத்தா மாதிரி, இவர் டீம்ல இருந்தால், இப்பவே ஜெயிச்சமாதிரி," என்றெல்லாம் சொல்லிச் சம்மதிக்க வைத்துவிட்டார். கேப்டனுக்கும் வேறுவழியில்லை, அரைகுறையாய்த் தலையை ஆட்டிவிட்டார். பிறகு என்ன, ஆஸ்திரேலிய கேப்டன், மேனேஜர், ஐசிசி பிரதிநிதி என்று ஓடி, ஓடி சம்மதம் வாங்கிவிட்டோம்.

ஆஸ்திரேலியர்களுக்கு என்ன, ஏற்கனவே பேதிபுடுங்கிய அணியில், இரண்டு சோப்ளாங்கிகளையும் சேர்த்துக்கொண்டார்கள் என்று ஒரே சந்தோஷம். எதிர் அணியிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்டோம் என்ற பேருமாச்சு, ஆடாம ஜெயிச்சோமடா என்று பெருமிதமுமாச்சு. இந்திய அணிக்கு எதுவுமே செட்டாகவில்லை. பூவா, தலையாவிலும் இந்தியா தோற்க, ஆஸ்திரேலியா பேட்டிங். ரஜினி டீமில் பதினோராவது ஆள், பிபேக் டுவெல்த்மேன் என்று களம் இறங்கியாகிவிட்டது.

கையில் கிடைத்த இந்திய அணியின் ஜெர்சியில் ஒன்றை ரஜினிக்கும் மற்றொன்றை பிபேக்கிற்கும் மாட்டிவிட்டோம். அதில் ரஜினி சிறிது கோமாளிபோல் இருந்தார், ஆனாலும், அவர் அணிந்து கொண்டதாலோ, என்னவோ, அது ஒரு தனி ஸ்டைலாகவே தோன்றியது:

ஃபீல்டிங் சமயத்தில் ரஜினி அடிக்கடி காணாமல் போய்க்கொண்டிருந்தார், பாக்கு போடப் போயிருப்பாப்போல. அவரைச் சொல்லிக் குற்றமில்லை, போரடித்துப் போயிருப்பார் - ஏனென்றால் ரஜினிபக்கம் பந்தே போகவில்லை! அவர் களத்தில் இருந்த நேரத்தில், கேப்டன் போணி அவரை மைதானத்தின் இரண்டு, மூன்று வெவ்வேறு பகுதிகளில் மாற்றி மாற்றி நிறுத்தினார். ஏனோ ரஜினி இருந்த பக்கம் பந்து போகவே இல்லை. ஒரே ஒரு பந்து அவர் இருந்த திசையில் வந்தது, அவர் பார்த்ததும் வேறு திசையில் போய்விட்டது!

அவரில்லாத நேரத்தில், அவருக்குப் பதில் பிபேக் வந்து இரண்டு கேட்சைக் கோட்டைவிட்டார். கேப்டனுக்குக் கோபம், என்னையும், ஹாஸனையும் பார்த்து முறைத்தார்.

அவர் முறைப்பது தெரிந்ததும், நாங்கள் நைசாக வேறுபுறம் பார்த்து நின்று கொண்டோம்!

ஆஸ்திரேலியாவின் முதல் இரண்டு பேட்ஸ்மென், பத்து ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் அதன்பிறகு, இந்தியாவுக்கு கண்டம்தான்.

டிரிக்கி டான்டிங் நான்கு, ஆறு என்று விளாச ஆரம்பித்துவிட்டார். 52 பந்துகளில், 129 ரன், சாகடித்துவிட்டார்! கடைசியில், ஆஸ்திரேலியா 20 ஓவரில் 227க்கு 6 விக்கெட் என்று முடித்துக்கொண்டது. டி20 இறுதியாட்டங்களில் இது ஒரு ரிகார்ட் என்றார்கள்.

இந்தியர்கள் ஆட ஆரம்பித்தனர். பாருங்கள், இந்திய கிரிக்கெட் அணியினர் எப்போதும் திகில் பிரியர்கள் மொத்தம் பத்தே பத்து ரன் எடுக்கச் சொல்லுங்கள், அப்போதுகூட, 8 விக்கெட்டுக்கு 8 ரன், 9 விக்கெட்டுக்கு 9 ரன் என்று ஆடி, கடைசி பந்தில்தான் ஜெயிப்பார்கள் இன்றும், அப்படித்தான் ஆட்டம் போய்க்கொண்டிருந்தது. பதின்மூன்று ரன்னுக்கு இரண்டு விக்கெட் போய்விட்டது.

அதன்பிறகு வந்த வண்டுல்க்கர், அவருடைய அபார பாணியில் ஆடி, 42 பந்தில் 61 ரன் கொண்டுவந்துவிட்டார். ஆனால் ஒரு அற்புத ஃபீல்டிங்கில், ரன்-அவுட் ஆகிவிட்டார்.

ஆஸ்திரேலியர்கள் வெறிபிடித்தது போல ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார்கள். கேப்டன் போணியும் ஒரு அற்புத கேட்சிற்கு - 28 பந்தில் 47 ரன் எடுத்த நிலையில் - அவுட் ஆனார். மறுபடியும் ஒரு ரட்சகன், ஹாஸன் ரூபத்தில் வந்தார் அவருக்கு சும்மாவா பெயர் வைத்திருக்கிறார்கள், உலக மஹா மட்டையாளர் என்று? மறுபக்கத்தில் விக்கெட்டுகள் போய்க்கொண்டிருந்தன, ஆனாலும் ஹாஸன் அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தார்.

அதிகம் வளர்த்துவானேன், கடைசி ஒவர், இந்தியா, 8 விக்கெட் இழப்பிற்கு, 210 ரன்கள் என்ற நிலை. ஹாஸன், 55 பந்துகளில், 82 ரன். மறுபக்கத்தில் நான் ரன் ஏதுமில்லை. நான் ரன் எடுப்பேன் என்று யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. ஹாஸன் அடிக்க, என்னால் முடிந்தது, ஓடி ஓடி ஹாஸனுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தேன். 18 ரன், 6 பந்து. ஹாஸன் பேட்டிங். ராக்மெத், கடைசி ஒவர் வீச வந்தார். முதல் மூன்று பந்துகள் ராட்சஸ பந்துகள், ஒன்றுமே செய்ய முடியவில்லை. மீதி மூன்று பந்துகள், 18 ரன் வேண்டும், அரங்கத்தில், அனைவரின் ரத்தக்கொதிப்பு எகிறி இருந்தது. அவனவன், நகத்தைக் கடித்து, நகத்தைக் கடித்து, யாருடைய விரலிலும், நகமே இல்லை - வெளியிலிருந்து யாராவது வந்து, அவருடைய விரலைக் கடன் வாங்கி, நகம் கடித்தால்தான் உண்டு!

ஒன்று இந்தியா தோற்கும். இல்லை என்றால், ஹாஸன் மூன்று சிக்ஸர்கள் அடித்து, தன் சதம் எடுப்பார், இந்தியா வெல்லும் என்றுதான் மொத்த அரங்கமுமே எதிர்பார்த்தது.

இந்தியாவிற்கு இனி வேறு மார்க்கமில்லை. நான்காவது பந்தும், ஆக்ரோஷமாகவே வந்தது. ஆனால், ஹாஸன் மிக நளினமாக ஒரு ஃப்ளிக் செய்ய, ஒரு அபார அழகு சிக்ஸ் - ஹாஸன் பந்தை அடிக்கிறாரா அல்லது அவரது மட்டை பந்துடன் சரசம் செய்ததா! அப்படி ஒரு நளினம், அப்படி ஒரு தீர்மானம்!

2 பந்து, 12 ரன்.

ஐந்தாவது பந்து யார்க்கர். அதையும், ஹாஸன் தூக்கி அடிக்க, பந்து, பவுண்டரி கோட்டுக்கு மேல் சிக்ஸராகப் போயிருக்கும். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பூமியிலிருந்து கிட்டத்தட்ட 14 அடி உயரம் பாய்ந்த டோனலி அதை கேட்சாகப் பிடித்துவிட்டார். ஒருகணம் அந்த ஆச்சரியத்தில், அரங்கமே நிசப்தமாயிருக்க, அடுத்தகணம், விண்ணதிர்ந்தது. ஸ்கோர், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 216 ரன் - மீதம், 1 பந்து, 12 ரன். ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவ, ராக்மெத்தையும் டோனலியையும் நான்கு பேர் வானில் தூக்க, தாங்கள்தான் உலக சேம்பியன் என்று ஆஸ்திரேலியர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டனர்.

ஆஸ்திரேலியர்களைவிட, இந்தியா தோற்றது என்று மொத்த பாகிஸ்தானும் கொண்டாடத் தொடங்கியது!

அப்போதுதான், மட்டையை தூக்கிக்கொண்டு, நிதானமாக, அரங்கிற்குள் பிரவேசித்தார் ரஜினி. கொஞ்சம் சலிப்பாகத்தான் இருந்தது; ஆனாலும், சம்பிரதாயமாக, இன்னமும் ஒரு பந்து பாக்கி இருக்கிறதே, அதைப் போடவேண்டுமே. ஆஸ்திரேலியர்கள் அவரவர் இடத்திற்குச் சந்தோஷமாகத் திரும்பினர்.

மைதானத்திற்குள் ரஜினியின் என்ட்ரியே ஒருவித ஸ்டைலாக இருந்தது; மட்டையை ஏகே47 துப்பாக்கியைப்போல் பிடித்துக்கொண்டு, "டுப், டுப், டுப்" என்று சுடுவதுபோல் வாய்ஸ் கொடுத்துக்கொண்டு, "ஹா, ஹா, ஹா" என்று நடுவே சிரித்துக்கொண்டு களம் இறங்கினார். கண்களில் கூலிங் கிளாஸ். தலையில் சாதா தொப்பி, ஏதோ டிஸ்கோ டான்ஸ் ஆடவந்தவர் போலத்தான் இருந்தார். கால்களுக்கு பேட், தலைக்கு ஹெல்மெட் எதுவுமில்லை. இத்தனை பெரிய அரங்கினுள், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் நிற்கிறோமே என்ற சபைக் கூச்சமுமில்லை.

இவர் இதுவரை கிரிக்கெட்டே விளையாடாதவர், ஏதாவது இசகு, பிசகாக அடிபட்டுக் கொள்ளப் போகிறாரே என்ற கவலை எனக்கு. அதிலும் ஆஸ்திரேலியர்களிடம் கொஞ்சமும் கருணையை எதிர்பார்க்கமுடியாது, "அண்ணே, ஜாக்ரதை" என்று ஆரம்பித்தேன்; இவர் படக்கூடாத இடத்தில் அடிபட்டுக் கொண்டால், அண்ணிக்கு யார் பதில் சொல்வது என்கிற பயம்.

அதற்குள் ரஜினியே, "கண்ணா, எதுக்கும் கவலைப்படாதே. எது நடக்கணுமோ, அது நடக்கும்; எது நடக்காதோ, அது நடக்காது; ஆண்டவன், இந்தியாவுக்கு சோதனையக் குடுப்பான், ஆனா, கைவிட்டுற மாட்டான்" என்று சொல்லிக்கொண்டே, பேட்டிங் கிரீஸுக்குப் போனார்.

கிரீஸிலும், சாதாரணமாக பேட்ஸ்மேன் ஒருபக்கமாக குனிந்து நிற்பதுபோல் நிற்கவில்லை; கிருஷ்ணர் காலை குறுக்காக மடித்துக்கொண்டு நின்றுகொண்டு, புல்லாங்குழல் வாசிப்பாரே அதுபோல் ரஜினி நின்றுகொண்டார்; கையில் கிரிக்கெட் பேட்டை, டென்னிஸ் மட்டையைப் போல் தூக்கிப்பிடித்துக் கொண்டு நின்றார்.

உலக கிரிக்கெட் அரங்கில், இப்படி ஒருவர் கிரீஸுக்குமுன் நின்று யாரும் பார்த்ததில்லை. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சிரித்தார்கள், அம்பயர்கள் வாயை மூடிக்கொண்டு சிரித்தனர், நானும் சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அரங்கமே சிரித்தது.

"சும்மா அதிருதில்ல" என்றார் ரஜினி. எல்லாம் அடங்க இரண்டு நிமிடமாயிற்று.

அதற்குள், ஆஸ்திரேலிய வீரர்கள் சுதாரித்துக்கொண்டனர். அவர்கள் தொழில்முறை ஆட்டக்காரர்கள், தொழில் என்று வந்துவிட்டால், அண்ணன், தம்பி, ஹாஸ்யம் எல்லாம் பார்க்காதவர்கள். வெற்றி ஒன்றே அவர்கள் குறிக்கோள்.

ராக்மெத் கடைசிப் பந்தை வீசத் தயாரானார். எனக்கு மறுபடியும் கவலை வந்துவிட்டது. தோற்பது உறுதி, அடி படாமல் பிழைக்க வேண்டுமே. ஒருநொடி கண்மூடி ஆண்டவனை வேண்டினேன். கண்ணைத் திறந்தபோது, ராக்மெத் பந்தை வீசிக்கொண்டிருந்தார்.

ரன்னர் கிரீஸில் இருந்த எனக்கே ஒருகணம், ஒன்றும் புரியவில்லை. பார்த்தபோது, ரஜினி ஒரு வினோதமுறையில் மட்டையைச் சுழற்றி, பந்தை வானத்தை நோக்கி ஓங்கி அடித்தார்.

பந்து ஒரு கண்ணுக்கெட்டாத உயரத்தில் வானில் சென்று கொண்டிருந்தது. அப்படிச் சென்ற பந்து, ஒரு அதீத உயரத்தில், சக்கரம்போல், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, வானில் இருக்கும் ஒரு கற்பனை மைதானத்தையும் சுற்றி வர ஆரம்பித்தது - பூமி, சூரியனைச் சுற்றுவது போல்!

நான் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, ரஜினியிடமிருந்து, கர்ஜனையாய் ஒரு கட்டளை கேட்டது: "ஒடு!". நான் தலைநிமிர்ந்து பார்க்க, பேட்டிங் கிரீஸிலிருந்து, ரஜினி ஓடிவந்துகொண்டிருந்தார்.

அப்புறமென்ன, பந்து சுழன்று, சுழன்று, ஆகாயத்தில் பிரயாணித்துக் கொண்டிருக்க, நாங்கள் ஒடத்துவங்கினோம். 1, 2, 3 என்று நாங்கள் மூச்சிறைக்க ஓடி, 12 ரன்கள் எடுத்து முடிக்கவும் பந்து கொஞ்சம், கொஞ்சமாய் தரையிறங்கி, பிட்ச்சின் அருகே தரைதொட்டு, அங்கேயே சங்குசக்கரம் போல சுழன்றது

என்ன நடக்கின்றது எல்லோருமே பிரமித்திருக்க, அந்த மயக்கத்திலிருந்து விடுபட்ட மூன்று ஃபீல்டர்கள், பந்தை கேட்ச் பிடிக்க ஓடினார்கள் ஆனாலும், பந்தின் வேகமும், சுழற்சியும் யாரையும் நெருங்கவிடவில்லை. நாங்கள் 12 ரன் ஓடி முடித்துவிட்டோம், ஆனால் பந்து ஓயவில்லை. பிரமிப்புகளும், கைத்தட்டல்களும் ஆரம்பித்துவிட்டன. மட்டையை உயர்த்தி, உடலை வளைத்து நன்றி என்று செய்கை காட்டிய ரஜினி, என்னைப் பார்த்து, "சக்ரா, ஷாட் இது எப்படி இருக்கு!" என்றார்.

கைக்கு எட்டிய வெற்றியை, விட்டுவிட யாருக்குத்தான் மனமிருக்கும்? அதிலும் ஆஸ்திரேலியர்கள் சமயோஜிதர்கள், சாதுர்யர்கள் ஏன், குறுக்கு புத்திக்காரர்கள் என்றே சொல்லலாம். அதிலும் அவர்களது கேப்டன், யக் யேப்பல், அதிகுறுக்கு புத்திமான். பந்து நிற்கவில்லை அல்லவா? அது இறந்த பந்து (Dead Ball) என்று ஆகுமுன், அதை உதைத்து, பெளண்டரிக்கு அனுப்பி, நாலு ரன் மட்டுமே என்று வாதிட நினைத்தார் போல.

பிட்ச்சின் அருகில் சுழன்று கொண்டிருந்த பந்தை ஓங்கி உதைக்க எத்தனித்தார்; ஆனால் இலக்கில்லாமல் சுழன்று கொண்டிருந்த பந்து அவரைத் தடுக்கிவிட, பந்தின் மேலேயே, குப்புற விழுந்தார். அவர் விழுந்த விதமும், இடமும், ரஜினிக்கு அருகில், நேராக நமஸ்கரிப்பது போல் இருந்தது. பிரமிப்பிலும், ஆச்சரியத்திலும், நிசப்தமாய் இருந்த அரங்கம், அதிர ஆரம்பித்தது; ஏன், ஆஸ்திரேலியர்களும், பாகிஸ்தானியர்களும் கூட கைதட்டி, ஆரவாரிக்க ஆரம்பித்தனர். கீழே விழுந்த யேப்பலை, "The Game is Over" என்று கூறிக்கொண்டே, தொட்டுத் தூக்கி நிறுத்தினார் ரஜினி, அவரை அணைத்துக் கொண்டார்; அவர் அணைப்பில் அன்பும், ஆறுதலும் குழைந்திருந்தன. யெப்பலின் கண்களில் ஒரு கணம், ஒரு சொட்டு கண்ணீர் துளிர்த்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க, எங்கிருந்தோ முளைத்தது போல், ஒரு பறவையின் மெல்லிய சிறகு, காற்றில் மிதந்து வந்து, ரஜினியின் இடது தோளில் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டது. அதை மிருதுவாய் எடுத்த ரஜினி, யெப்பலிடம் நீட்டிவிட்டுச் சொன்னார் "ஜெயிப்பது எல்லாம், வெற்றிகள் அல்ல; வீழ்வது எல்லாம், தோல்விகள் அல்ல."

பரிசளிக்கும் விழா ஆரம்பித்தது. ரஜினியைக் காணவில்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரகு மேஸ்திரி, இன்று நடந்த அந்த அதிசயக் கனவிலிருந்து தான் இன்னமும் மீளவில்லை என்றார். சேம்பியன் கோப்பையைப் பெற்றுக்கொண்ட கேப்டன் போணி, இதுபோன்ற அதிசயங்கள் யுகங்களில் ஒருமுறையே நிகழும் என்றார். அடுத்து அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியக் கேப்டன் யெப்பலின் பேச்சு, உணர்வுபூர்வமாய் இருந்தது. "We were not just defeated, we were conquered" என்று சொல்லி, இந்த மாமனிதருக்கு, ஓர் உணர்வு பூர்வமான பரிசை கொடுக்க விரும்புவதாகக் கூறி, வெளியே எடுத்துக் காண்பித்தார். ஒரு கண்ணாடிப் பெட்டகம், அதனுள்ளே ஒரு வெள்ளிப்பேழை, அதனுள்ளே, ரஜினி கடைசியாக அடித்த பந்தும், அந்தச் சிறிய இறகும் அலங்காரமாய், சொகுசாய் அமர்ந்திருந்தன. அதில் "The Yuga Shot that made us small" என்று எழுதப்பட்டிருந்தது. பெற்றுக்கொள்ள, ரஜினியை அழைத்தார்கள். ரஜினி வரவில்லை; காணவில்லை என்றார்கள்.

அடுத்த மூன்று நாட்களும், எல்லாத் தொலைக்காட்சிகளிலும், அந்த கடைசி ஒவரையே மறுபடி, மறுபடி காட்டியபடி இருந்தார்கள்.

ட்விட்டரில், "தலைவா, நீ எப்போது வருவாய்," ரஜினி ரசிகர்கள், ஏங்கியபடி இருந்தார்கள் - சிலர், "நீ வராவிட்டால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்," என்று மிரட்டினார்கள். "அப்படியெல்லாம் செய்து கொள்ளவேண்டாம்," என்று, ட்விட்டரிலேயே வேண்டுகோள் விடுத்திருந்தார் ரஜினி, தேவை என்று வரும்போது, தான் கட்டாயம் வருவதாகவும் வாக்களித்திருந்தார்.

வசூல்ராஜா சினிமாவில், ஸ்னேகா, "டாடி, இப்படிப்பட்ட அதிசயங்கள் எல்லாம் இனிமேல் இந்த ஆஸ்பத்திரியில் நடக்காது, நடக்கவும் விடமாட்டீர்கள்," என்று அழகாய் கூவுவாரே, அப்படி ஆகிவிட்டது. ஐசிசி-யின் தலைவராய் ஓர் ஆஸ்திரேலியக் கனவான் இருந்தபோது, புது விதிமுறை கொண்டு வந்துவிட்டார், ஒரு பந்தில் அதிகபட்சமாய், ஆறு ரன்கள்தான் எடுக்கமுடியுமென்று.

பந்து காணாமல் போகலாம், அம்பயர்களுக்கு எண்ணுவதில் சிரமம், டி.வி-யில் தெரியாது என்று பல காரணங்களைச் சப்பை கட்டினார்கள். இந்தப் புது விதியைப் பற்றி, கிரிக்கெட் ரசிகர்களிடையே பல அபிப்பிராய பேதங்கள் இருந்தன. ஆனால் ரஜினி ரசிகர்களோ ஒரே முடிவாய் இருந்தார்கள்: ஒரு பந்தில் 12 ரன்கள் என்ற தலைவரின் ரிக்கார்டை இனி எந்த காலத்திலும் முறியடிக்கமுடியாது!

கணேஷ் பாபு,
மதுரை

© TamilOnline.com