வங்கமொழியின் மூத்த எழுத்தாளரும், நாடறிந்த சமூகச் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி (90) ஜூலை, 28 அன்று கொல்கத்தாவில் காலமானார். ஜனவரி 14, 1926 அன்று வங்கத்தின் டாக்காவில் பிறந்த இவர், இளவயதுமுதலே கவிதை மற்றும் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். தந்தை மனீஷ் கடக் நாடறிந்த கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர். சாந்தி நிகேதனிலுள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை முடித்ததும் சிலகாலம் ஆசிரியப் பணிபுரிந்தார். அக்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்விபெற உழைத்தார். அவர்களுக்குப் பாடம் போதித்தார். பழங்குடிமக்கள் மிகவும் தாழ்நிலையில் இருப்பது கண்டு வருந்தினார். அவர்கள் முன்னேற்றத்திற்கு உழைப்பதை வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு செயல்பட்டார். பீஹார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலப் பழங்குடியினர் அரசின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானபோது இவர் அதனை எதிர்த்துப் போராடினார், அவரது படைப்புகள்மூலம் அம்மக்களது நிலையை உலகறியச் செய்தார். சிறுகதை, நாவல், கட்டுரை என்று பலதளங்களில் இயங்கினார். இவரது கதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. சாகித்ய அகாதமி, ஞானபீடம் ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரது சமூகப் பணிகளுக்காக பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், ரமன் மக்செஸே உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
|