குருவே இறுதிப் புகலிடம்
ஞானம் தேடிப் புறப்பட்ட ஒருவர் அடர்ந்த, மிருகங்கள் நிரம்பிய காட்டுக்குள் சென்றார். திடீரென்று அவருக்குச் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அதனிடமிருந்து தப்பிக்க அவர் ஒரு மரத்தில் ஏறினார். சிங்கம் அவரைக் கிளைகளுக்கிடையே பார்த்துவிட்டது. அது அந்த மரத்தையே கோபத்துடன் சுற்றிச்சுற்றி வந்தது.

மரத்தின்மீதிருந்த ஒரு கரடி அவரைத் தாக்கியது. அது ஆலமரம் என்பதால் அவர் அதன் இரண்டு விழுதுகளை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு நடுவில் தொங்கினார். அதே சமயத்தில், ஒரு கருப்பு எலியும் ஒரு வெள்ளெலியும் அந்த விழுதுகளைக் கடிப்பதைப் பார்த்தார். அவை கடிக்கக் கடிக்கத் தனது உயிருக்கு அபாயம் என்பதை உணர்ந்தார்.

அப்போது பார்த்து அந்த மரத்தின் உச்சாணிக் கிளையில் இருந்த ஒரு தேன்கூட்டிலிருந்து தேன்துளிகள் அவரை நோக்கிச் சொட்டவே, அவர் அதை ருசிக்க ஆசைப்பட்டுத் தனது நாவை நீட்டினார். ஒரு துளிகூட அவரது நாக்கில் விழவில்லை. துயரம் தாங்காமல் அவர், "குருவே! என்னைக் காக்க வாருங்கள்!" என்று அலறினார்.

அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த குரு இதனைக் கேட்டார். உடனடியாக அங்கே ஓடினார். தன் கையிலிருந்த வில்லினால் சிங்கம் மற்றும் கரடியின் மீது அம்பெய்து கொன்றார். எலிகளையும் விரட்டினார். மரண பயத்திலிருந்து சீடரைக் காப்பாற்றினார். பிறகு அவரைத் தன் ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்று முக்திப் பாதையைக் கற்பித்தார்.

இதுதான் உங்கள் ஒவ்வொருவரின் கதையும். இந்த உலகமென்னும் காட்டில் நீங்கள் உலவுகிறீர்கள். அச்சம் என்பதே சிங்கம், அது உங்களைச் சம்சாரம் என்னும் மரத்திலேறச் செய்கிறது. பதற்றம் என்னும் கரடி உங்களை சம்சாரக் கிளையிலிருந்து விரட்டுகிறது. நம்பிக்கை, அவநம்பிக்கை என்ற இரண்டு விழுதுகளைப் பிடித்துக்கொண்டு பற்று, கர்மவினை என்பவற்றில் சறுக்கி இறங்குகிறீர்கள். இரவு, பகல் என்ற இரண்டு எலிகள் உங்கள் வாழ்நாளைக் கரவித் தின்கின்றன. அகங்காரம், மனமகிழ்ச்சி என்ற தேன்துளிகளை இதனிடையே நீங்கள் ருசித்துவிட முயல்கிறீர்கள்.

அவற்றைப் பெறுவது கடினம் என்பதை ஒருவாறாக அறிந்த பின்னர், நீங்கள் துன்பத்தில் கதறி துறவைத்தேடி குருவை அழைக்கிறீர்கள். உங்களுக்கு உள்ளே இருந்தோ, வெளியே இருந்தோ குரு தோன்றுகிறார். உங்களை அச்சம் மற்றும் பதற்றத்தில் இருந்து காப்பாற்றுகிறார்.

ஸ்ரீ சத்திய சாயிபாபா

நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்ட் 2014

© TamilOnline.com