முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 24)
குட்டன்பயோர்கின் பிரச்சனை கூட்டுமுயற்சி அல்ல, மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பத்திறன் கொண்ட ஒரே ஒருவரால் செய்யப்பட்டிருக்க வேண்டும், அதனால் ஜேகப் ரோஸன்பர்க் காரணகர்த்தாவாக இருக்கமுடியாது என்று விளக்கிய சூர்யா, ஆனால் அதே காரணத்தால் மற்ற மூன்று விஞ்ஞானிகளையும் சந்தேகத்திலிருந்து விலக்கமுடியாது என்றும், அவர்களில் யார் மூலகர்த்தா என்பதை அவரே தன் மூகமூடித் தாக்குதலால் காட்டிக்கொண்டுவிட்டார் என்றும் கூறினார்.

சூர்யாவின் விளக்கத்தைக் கேட்டு பரபரப்புற்ற அகஸ்டா, அந்தக் கிராதகன் யார் என்று உச்சஸ்தாயியில் வினவவே, முதலில் எப்படி கண்டுகொள்ள முடிந்தது என்று விளக்கியபின் மூலகர்த்தாவைக் குறி காட்டுவதாகக் கூறிய சூர்யா நிதானமாக விளக்கத்தைத் தொடர்ந்தார்.

"நான் ஏற்கனவே விளக்கியபடி, இந்தப் பிரச்சனையில் இரண்டு உட்பகுதிகள் இருக்கு. ஒண்ணு முழு அங்கப் பகுதிகள் சரியாகப் பொருந்தாமலிருப்பது. இன்னொண்ணு, மூல உயிரணுப்பசை சரியாக ஒட்டாமல் போவது. இந்தப் பிரச்சனை கூட்டுமுயற்சியால் விளைந்ததல்ல என்று தீர்மானித்து விட்டதால், அவை இரண்டிலுமே அவ்வப்போது சிறிய பிரச்சனை உருவாக்க முடிந்தவர் இந்த மூன்று தொழில்நுட்ப வல்லுனர்களில் ஒருவருக்கு மட்டும் சாத்தியம் உள்ளதா என்று யோசித்துப் பார்த்தேன். மூன்று பேருமே இரண்டு விஷயத்திலும் வெவ்வேறு அளவுக்குத் திறன் படைத்தவர்கள் என்பதால் மூவரில் எவரையும் சந்தேகத்திலிருந்து விலக்க முடியாமல் தவித்தேன்.

அப்போதுதான் அந்த மூலகர்த்தா என் உதவிக்கு வந்தார்!"

அகஸ்டா குழப்பத்துடன், "மூலகர்த்தா... உதவினாரா? எப்படி!" என்று வினவினாள்.

தான் சந்தேகித்த விஞ்ஞானிகள் மூவரையும் ஒருமுறை தனித்தனியாகக் கூர்ந்து நோட்டம்விட்ட சூர்யா தொடர்ந்தார். "நான் முப்பரிமாணப் பதிப்பான்களை சோதிக்கும்போது தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடிய ஒரு தடயம் அங்கே விட்டுவிட்டதாக உணர்ந்த மூலகர்த்தா, அதை மீட்கவும், அகஸ்டாவுக்கு பதற்றமளித்து விசாரணையை முடிக்க முயலவும் எத்தனித்தார். உருவம் தெரியாதபடி சுத்த அறை முழு அங்க அங்கியையும், முகமூடியும் அணிந்து விட்டதால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று மனப்பால் குடித்த மூலகர்த்தா, உருவத்தை மறைத்துக்கொண்டு ஆராய்ச்சிக் கூடத்துக்குள் ஓடிவந்து என்னைத் தள்ளிவிட்டு பதிப்பான்களிடம் சென்று எதோ தடயத்தைக் கலைத்துவிட்டு ஓடினார். ஆனால்..."

அகஸ்டா அடக்கமுடியாமல் இடைமறித்தாள். "ஆனால் என்ன சூர்யா? அது யார்?"

சூர்யா தொடர்ந்தார். "ஆனால் அவரை அந்தச் செயலே காட்டிக் கொடுத்துவிட்டது. அவர்தான்..." என்று கூறி கைநீட்டி சுட்டிக்காட்டிய சூர்யா அறிவித்தார், "அந்த மூலகர்த்தா இதோ இந்த அலெக்ஸ் மார்ட்டன்தான்!"

அகஸ்டா அதிர்ச்சியில் வார்த்தை வராமல் "அலெக்ஸா! இருக்காது..." என்று திணறினாள். அலெக்ஸ் மார்ட்டனோ அடக்க முடியாத சினத்துடன் எழுந்து நின்று "ஹேய், ஹேய், ஹேய்! என்ன நினைச்சுக்கிட்டிருக்கே. என்ன இது அகஸ்டா? உன்னோட இணைநிறுவனரா இவ்வளவு காலம் செஞ்ச பணிகளுக்கு இதுதான் உன் கைமாறா? ஒரு துளி நிரூபணம் இல்லாம இந்த சூர்யா என்மேல் குற்றம் சுமத்தறதை சும்மா பாத்துக்கிட்டிருக்கயே! அப்படி செய்ய என்ன காரணம் இருக்கமுடியும்?" என்று சீறினார்.

சூர்யா முறுவலித்தார். "அங்கதான் நீங்க தவறிட்டீங்க அலெக்ஸ். நிரூபணம் நீங்களே குடுத்துட்டீங்க. நான் ஒரு பதிப்பான்ல இருந்த நுண்ணிய மாற்றத்தை கவனிச்சுட்டேங்கறதை கவனித்த நீங்க முகமூடி உடையோட வந்து என்னைத் தள்ளிட்டு அந்தத் தடயத்தை எடுத்துக்கிட்டு ஓடினதும், கிரண் ஓடிவந்து என்னைப் பார்த்தான். அவன்கிட்ட ஒரு வேலை சொன்னேன். அந்த நிரூபணம் கிட்டிடுச்சு. கிரண் நீ என்ன செஞ்சேன்னு சொல்லு."

கிரண் வெற்றிப் பெருமிதத்துடன் அகஸ்டாவைப் பார்த்துக் கண்சிமிட்டிவிட்டு விளக்கினான். "சூர்யா விழுந்ததும் நான்தான் முதலில் அவரிடம் ஓடி அடைந்தேன். அவர் இரண்டாம் வரிசையில் மூன்றாவது பதிப்பானிடம் அந்த உருவம் எதையோ எடுத்ததாகவும் அங்குச் சென்று அந்தப் பதிப்பானின் அடியில் சிக்கியிருக்கும் துணியிழையை எடுத்து இந்த மூன்று விஞ்ஞானிகளின் சுத்த அறை ஆடைகளோடு ஒப்பிடுமாறு கூறினார். நான் அவர்களின் சுத்த அறை லாக்கர்களின் பூட்டுக்களைத் திறந்து சேகரித்த இழைகளோடு ஒப்பிட்டதில் அலெக்ஸின் அங்கி மட்டுமே பொருந்தியது."

சூர்யா தலையாட்டி ஆமோதித்துவிட்டுத் தொடர்ந்தார். "அது மட்டுமல்ல அலெக்ஸ். அந்த இழையயும், உங்கள் உள்ளிழைகளையும் DNA ரீதியாகவும் பொருத்திப்பார்க்க முடியும். அதனால் நீங்கள் உங்கள் குற்றத்தை மறுக்க இயலாது."

அடக்கமுடியாத சோகம்கலந்த கோபத்துடன் அகஸ்டா சீறினாள். "ஏன் அலெக்ஸ்! ஏன் இப்படி செஞ்சீங்க? நம் இத்தனை நாள் கூட்டுமுயற்சியையும் ஏன் இப்படி வீணாக்கப் பாத்தீங்க?"

சற்றும் மறுக்க முடியாதபடி தன்னைச் சூர்யா மடக்கிவிட்டதை உணர்ந்த அலெக்ஸ் மிதமிஞ்சிய வெறுப்புடன் அகஸ்டாவை இகழ்ந்தார். "ஆமாம். நான்தான் செஞ்சேன். ஏன் தெரியுமா? நான் இணைநிறுவனராக இருந்தும் எனக்கு நீ சரியான நிறுவனப் பங்களிக்கவில்லை. முக்கியத்துவமும் அளிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் நீயே முந்தினாய். சூர்யா சந்தேகித்தபடி, என் பணத்தேவையை நிவர்த்திக்கவும் குட்டன்பயோர்கை சிறிய விலைக்கு வாங்க உதவினால் அதிகப்பணம் தருவதாக ஒரு பெருநிறுவனம் உத்தரவாதமளித்து முன்பணமும் கொடுத்தது. அந்த இரண்டு காரணங்களும் சேர்ந்து வந்ததால்தான் செஞ்சேன். உன்னால் என்னைச் சட்டரீதியா ஒண்ணும் செய்யமுடியாது. ஆனால் இனிமேல் உன்னுடன் வேலை செய்யமுடியாதுன்னு நல்லாவே தெரியும். நீயே இந்தப் பிரச்சனையைத் தீர்க்கமுடியுமான்னு பார்!" என்று பொங்கிவிட்டு அலெக்ஸ் வெளியேறினார்.

சூர்யா அகஸ்டாவுக்கு ஆறுதலளித்தார். "நீங்க ஒரு தவறும் செய்யலை அகஸ்டா. அலெக்ஸின் தாழ்வு மனப்பான்மையும் பேராசையும்தான் அவரைத் தவறான பாதையில் நடத்திடுச்சு. விடுங்க. இந்தப் பிரச்சனையை நிவர்த்திக்க அலெக்ஸின் உதவி தேவையில்லை. காரணம் என்னன்னு தெரிஞ்சாச்சு. உங்க உயிரியல் திறனோடு நீல் மற்றும் சேகர் உதவி போதும்."

தன் வெகுநாள் சகா அலெக்ஸ் செய்த துரோகத்தால் மிக்க சோகத்துடனும் கவலையுடனும் இருந்த அகஸ்டா சூர்யாவின் வார்த்தைகள் அளித்த நம்பிக்கையால் சுதாரித்துக்கொண்டாள். "என்ன காரணம், எப்படி நிவர்த்திக்க முடியும் சூர்யா? மேலும் அதை எப்படிக் கண்டு பிடிச்சீங்கன்னும் சொல்லுங்க" என்று வேண்டினாள்.

சூர்யா விளக்கினார். "உங்கப் பிரச்சனையின் நுண்ணிய விவரங்களை நீங்க விளக்கினதுமே, இது என்னோட முன்னாள் தொழிலான மின்வில்லை உற்பத்தித் துறையில் உண்டாகும் சில பிரச்சனைகள் போலவே இருப்பதை உணர்ந்தேன். அதனால் உயிரியல் அம்சமான மூலவுயிரணு விஷயத்தைப் பிறகு ஆலோசிக்கலாம் என்று தீர்மானித்து அங்கப் பகுதிகள் சரியாக நேர்ப்படி சேராதபடி பதிக்கப் படும் அம்சத்தைப் பற்றி ஆராய்ந்தேன். மின்வில்லை உற்பத்தியில் சிலசமயம் இப்படி மின்வில்லைகளின் தளங்கள் (layers) நேராக இணையாமல் சற்றே விலகி, வில்லைகள் பாழாகிவிடும்."

அகஸ்டா ஆட்சேபித்தாள். "ஆனால் அத்தகைய இணைப்புத் தவறுகள் இங்கு நேர வாய்ப்பில்லையே? பதிப்புக்கான விவரங்கள் கணினிகளிலிருந்து நேராக பதிப்பான்களுக்குப் போயிடுது. கணினியில் சரியா இருக்கு, மேலும் பதிப்பான்களில் மாத்தமுடியாது. அப்புறம் எப்படி?"

சூர்யா ஆமோதித்தார். "ரொம்ப சரி அகஸ்டா. கணினியில் உள்ள பதிப்பு மூலவிவரம் பாதிக்கப்பட்டிருக்க முடியாதுங்கறதுனால தான் பதிப்பான்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்க முடியும்னு ஆராய எத்தனித்தேன். அதுக்குப் பலன்தான் என் மண்டைல ஒரு அடி!"

அகஸ்டா கூவினாள். "ஓ! ஐ அம் ஸோ ஸாரி அபவுட் தட் சூர்யா! ஆனா அது ரொம்ப க்ளேவர் யோசனை, பிரமாதம்!"

சூர்யா தொடர்ந்தார். "மின்வில்லை உற்பத்திக் கருவிகள் சரியான கோணம் அல்லது சமம் இல்லாமல் போனால் அப்படி ஆகலாம். உங்கள் பதிப்பான்களில் எதாவது அப்படி இருக்கலாமா என்று கூர்ந்து ஆராய்ந்தபோது சில பதிப்பான்களின் அடிப்புறம் மட்டும் சில கீறல்கள் இருப்பதையும் ஒன்றின் அடியில் ஒரு சிறியதகடு இருப்பதையும் கண்டறிந்தேன்."

அகஸ்டா வியப்புடன் வினாவினாள். "கீறல்களா? சின்னத் தகடா? எதுக்கு?"

சூர்யா தொடர்ந்தார். "அலெக்ஸ் அவ்வப்போது அந்தத் தகடை வெவ்வேறு பதிப்பான்கள் அடியில் வைத்து அவை சற்றே சாயும்படி செய்தார். அதனால் அவ்வப்போது வெவ்வேறு அங்கப் பகுதிகள் சரியாகப் பொருந்தாமல் போயிருக்கும். அந்தத் தகடு சில பதிப்பான்களின் அடிப்பகுதியில் மட்டும் கீறல்களை ஏற்படுத்தியிருக்கும். அதை நான் கவனிச்சதைப் பார்த்துதான் என்னைப் பயமுறுத்தி விரட்டவும், தகடை மீட்கவும் அலெக்ஸ் அந்த முகமூடி நாடகமாடினார். பொருந்தாத அங்கப் பகுதிகள் அந்த கீறல்கள் இருக்கும் பதிப்பான்களால் மட்டும்தான் உருவாக்கப்பட்டிருக்கும். உங்க பதிப்புக் குறிப்பேடுகளை வேணும்னா ஆராய்ஞ்சு பாருங்க. தெரியவரும்."

சேகர் தலையில் அடித்துக்கொண்டு, "நீங்க ஒரு ஜீனியஸ் சூர்யா! அஃப் கோர்ஸ்! இந்த சின்ன சிம்பிள் விஷயம் எனக்குத் தோணாமப் போச்சே!" என்றார்.

சூர்யா முறுவலுடன் மறுதலித்தார். "சேச்சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சேகர். எனக்கு மின்வில்லைத் தொழில் அனுபவம் இருந்ததுனால உடனே தோணிச்சு அவ்வளவுதான்."

நீல் பாராட்டினார். "இருந்தாலும், இவ்வளவு நாள் இந்தத் துறையில் ஊறின எங்களுக்கும் தோணியிருக்கணும். நீங்க நிஜமாவே ஜீனியஸ்தான்."

சூர்யா முறுவலுடன் தலை தாழ்த்திப் பாராட்டை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தார். "உயிரணுப் பசை அம்சமும் இந்த மாதிரி எதாவது சிறு மாற்றமாத்தான் இருக்கும் அகஸ்டா. அதுக்கான சரியான வெப்ப அளவு இல்லாமல் எதாவது அலெக்ஸ் அப்பப்போ மாற்றியிருக்கணும். அதைச் சரிசெஞ்சுட்டா நிவாரணமாயிடும்."

அகஸ்டா பொங்கிவந்த நன்றியுடன் பாராட்டினாள். "ஆஹா! பிரமாதம் சூர்யா, பிரமாதம்! நிச்சயமா அப்படித்தான் எதாவது இருக்கணும். எங்க நிறுவனத்துக்கு மீண்டும் உயிரளிச்சு மாற்றங்கம் தேவையான பல்லாயிரக் கணக்கானோருக்கும் நம்பிக்கையளிச்சிருக்கீங்க சூர்யா. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை!"

ஷாலினி தன் நேசத்துக்குரிய சூர்யாவைப் பெருமிதத்துடன் நோக்கினாள்.

கிரணோ, "அதுக்கென்ன நான் எப்படி நன்றி சொல்றதுன்னு நல்லா விளக்குவேனே! ஒரு டிரிங்க் அடிச்சுகிட்டே அதைப்பத்தி பேசலாமா? எப்ப நீங்க ஃப்ரீ?" என்றான்.

ஷாலினி கிரணை முறைத்து, "எத்தனை முறை எச்சரிக்கறது கிரண்? சும்மா அகஸ்டாகிட்ட உன் மன்மதலீலையைக் காட்டாதே."

அகஸ்டா தலையைப் பின்பக்கம் சாய்த்துக் கொண்டு அஹ்ஹஹ்ஹாவென உரக்கச் சிரித்தாள். "கவலை வேண்டாம் ஷாலினி! கிரணோட சேட்டைகளால எனக்கு நல்லா சிரிப்பு வருது, உண்மைதான். ஆனா அத்தோட சரி! உண்மையில் எனக்கு ஆண்கள்மேலயே ஆர்வம் இல்லை. அப்படின்னா என்னன்னு உங்களுக்கு உடனே புரியும்னு நெனைக்கறேன். ஸோ ஸாரி கிரண், உன்னைப்பத்தி குறிப்பிட்ட விருப்பு வெறுப்பு ஒண்ணுமில்லை, என் இயல்பே அப்படித்தான்! ஆனா, எனக்கு அந்த டிரிங்க் மட்டும் குடுத்துடு, அது பிடிக்கும்!" என்றாள்.

கிரண் தோள்களை அலட்சியமாக குலுக்கிக்கொண்டான். "ஓ வெல் அகஸ்டா! நீங்க எதை மிஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கக்கூட உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை அவ்வளவுதான்! ஸோ டிரிங்க்குக்கு நீங்கதான் பணம் குடுக்கணும் அகஸ்டா!" என்று சொல்லிச் சிரித்தான்.

கிரணுடைய சவடால் பேச்சைக் கேட்டு எல்லோரும் உரக்கச் சிரித்தனர்!

(முற்றும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com