ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்வுகள்
ஆகஸ்ட் மாதம் ஸ்ருதி ஸ்வர லயா சென்னையை சேர்ந்த கர்னாடிகாவுடன் இணைந்து 'கிருஷ்ணனுபாவம்'' என்ற இசை தட்டை வெளியிட்டது. இசை தட்டின் வெளியீட்டு விழா சென்னை நாரத கான சபாவில் திரு. கே.எஸ்.மகாதேவன், திரு.வி.வி. சுந்தரம், திரு.ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் தலைமையில் நடந்தது. முதல் இசைத் தட்டை திரு.கே.எஸ்.மகாதேவன் பெற்றுக் கொண்டார். இவ்விசைத்தட்டில் குமாரி மானசா சுரேஷ் பாட, திரு. ர.சதீஷ்குமார் வயலினும், திரு. பி.சிவராமன் மிருதங்கமும் வாசித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் குமாரி மானசா சுரேஷ் புதுதில்லி, ஹைதராபாத், சென்னை உட்பட 5 இடங்களில் க்ருஷ்ண ஐயந்தியை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 27ம் தேதி, திருமதி அனுராதா சுரேஷ், குமாரி மானசா சுரேஷ், திருமதி மைதிலி ராஜப்பன் (வயலின்), திரு. ரவி ஸ்ரீதரன் (மிருதங்கம்) திருமதி பகீரதி சேஷப்பனின் சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆகஸ்ட் 30ம் தேதி, சன்னிவேல் சனாதன தர்ம சாமாஐத்தில் திருமதி அனுராதா சுரேஷும், குமாரி மானசா சுரேஷும் இணைந்து பாடினர். இந்நிகழ்ச்சி லோட்டஸ் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது. இதற்கு திருமதி மைதிலி ராஜப்பன் வயலின், திரு ரவி ஸ்ரீதரன் மிருதங்கம் வாசித்து சிறப்பித்தனர்.

செப்டம்பர் 9ம் தேதி இதே குழுவினர் ஓக்லண்ட் 19வது தெருவில் அமைந்துள்ள சங்கதி சமுதாய மையத்தில் கச்சேரி நடத்தினர். திருமதி அனுராதா சுரேஷும், குமாரி மானசா சுரேஷும் இணைந்தும், தனித்தும் பாடல்களை பாடி சபையோர்களை மகிழ்வித்தனர். நிகழ்ச்சியை சுத்த தன்யாசி வர்ணத்துடன் தொடங்கி, நாட்டையில் பிள்ளை஡யர் துதியும் பாடினார். மானசா ஐயந்தசேனாவில் தியாகராஜரின் விநதாஸுதாவும், ஸ்வாதி திருநாளின் பரிபாலய என்ற ரீதிகெளளை கிருதியை பாட, அனு சுரேஷ் ப்ருந்தாவன சாரங்காவில் தியாகராஜரின் கமலாப்தகுல, மற்றும் சரஸ்வதி நமோஸ்துதேயும் பாடினார். இருவரும் இணைந்து பாடிய அனாதுடனு பாடல் மிகவும் அருமை. குமாரி மானசா விஸ்தாரமாக ராகம், நிரவல், ஸ்வரத்துடன் ஸரோஜ தளநேத்திரி (சங்கராபரணம்-ஸ்யாமா சாஸ்திரி) கிருதியையும், அனுசுரேஷ் ஹிந்தோளத்தில் தீட்சதரின் நீரஜாக்ஷி கிருதியையும் பாடினார். கர்ணரஞ்சனியின் கம்பராமயண பாடலும், பாபநாச சிவன் பாடலை அடுத்து, மானசா யமன்கல்யாணியில் பஜமன் ராம் என்ற துளசிதாஸ் பஜனும், அனுசுரேஷ் பாகேஸ்ரீயில், ''கோவிந்த மிக' என்ற அஷ்டபதியை பாடினார். முருகன் மீது அமர் கல்யாணி தில்லானாவுக்குப் பிறகு திருப்புகழுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. திருமதி மைதிலி ராஜப்பன் வயலினிலும், திரு. ரவி ஸ்ரீதரன் மிருதங்கத்திலும் நிகழ்ச்சிக்கு களையூட்டினர். மற்றும் ஸ்ருதி ஸ்வரலயா அக்டோ பர் மாதம் 7ம் தேதி இரண்டு மணிக்கு விஜயதசமி நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

திருமதி வசுந்தரா சுந்தரம்

© TamilOnline.com