இந்தநாள் பங்குகள் அந்தநாள் தேதியில்
இன்றைக்கு காந்திஜி உயிரோடு இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? என்ற கேள்வி பாரத்தையும் திவ்யாவையும் அதிரச் செய்தது. ஒரு நிதி நிறுவனத்தில் சேர்வதற்குக் கடைசிச் சுற்றான குழு விவாதம்ஒ நடந்து கொண்டிருந்தது. அவர்கள் அதில் இருந்தார்கள். ஆப்பிள் கம்பெனியை விடச் சொல்லி யிருப்பார், திவ்யா தொடங்கினாள்.

யுனைடட் ஹெல்த், மான்ஸ்டர் வோர்ல்ட் வைடு இவற்றையும் விடு அப்படின்னு சொல்லியிருப்பார். ஏன் தெரியுமா? இது மூணுமே உகப்பு முன்தேதியிடல்ஒ (options backdating) அப்படிங்கற பிரச்சனையில மாட்டிக்கிட்டிருக்கு என்றான் பாரத். அது அவ்வளவு பெரிய விஷயமா? கேட்டது மட்டுறுத்துனர் (Moderator).

இல்லையா பின்னே! என்று தொடங் கினாள் திவ்யா. 1990களின் கடைசியில பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம் வேலைக்கு நல்ல ஆள் கிடைக்காம திண்டாடினப்போ, ஊதியத்தின் ஒரு பகுதியா உகப்பு (Options) கொடுக்கத் தொடங் கினாங்க. உகப்புன்னா என்ன தெரியுமா? அதை வைத்திருப்பவர்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஒரு முன்னமேயே குறிப்பிட்ட விலையில் பெற்றுக்கொள்ளும் உரிமையைப் பெறுகிறார்கள். உதாரணமா, குமார் ஆப்பிள் கார்ப்பொரேஷனில் ஆகஸ்ட் 2004ல் சேந்தார்னு வைத்துக்கொள்வோம். அவருக்கு ஊதியத்தின் ஒரு பகுதியாக ஆப்பிள் பங்குகளை 15 டாலருக்கு வாங்கும் உகப்பைக் கொடுத்தார்கள். ஆனால், iPod, புது Mac எல்லாம் வெளியான காரணத்தால், பங்குவிலை இப்போ 65 டாலர் ஆயிடுச்சு.

ஒரு பங்கு 15 டாலருக்கு வாங்கும் உரிமை பெற்ற குமாரின் பங்குகளின் மதிப்பு இப்போ 5,00,000 டாலர். அதாவது அவர் 15 டாலர் ஒரு பங்குன்னு வாங்கி, சந்தையில 65 டாலருக்கு விற்கலாம். ஒவ்வொரு பங்கின் மீதும் லாபம் 50 டாலர். அப்படி 10,000 பங்குகளுக்கு லாபம் 5,00,000 டாலர்.

ஆப்பிள் கார்ப்பொரேஷன் தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு உகப்புக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டார் மட்டுறுத்துனர்.

சுதந்திரம் பெறவேண்டும் என்ற உற்சாகம் இந்தியாவை இணைத்தது. அதேபோல, ஆப்ஷன்ஸ் ஒரு நிறுவனத்தின் பணியாளரை உற்சாகத்தோடு வேலைசெய்ய வைக்கிறது என்றான் பாரத். அப்போது நிறுவனம் லாபம் ஈட்டும், அதன் காரணமாகப் பங்கு விலை ஏறும். சம்பளத்தை விட இது நல்ல வழி.

அவன் விட்ட இடத்திலிருந்து திவ்யா தொடர்ந்தாள், நவம்பர் 2004ல் குமார் அந்தக் குழுமத்தில் சேர்ந்ததாக வைத்துக் கொள்ளலாம். அவருக்கு அதே எண்ணிக் கையில் பங்குகளைக் கொடுத்ததாக வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு பங்கின் விலை 35 டாலர், இப்போது 65.

ஒரு பங்குக்கு 35 டாலர் ஏறியிருப்பதால், குமாருக்கு 3,00,000 டாலர் லாபம் கிடைக்கும். ஆனால், 2004 ஆகஸ்டிலிருந்து நவம்பருக்குள் 15லிருந்து 35 டாலராக விலை ஏறிவிட்டதால், தான் வேலைக்குச் சேர்ந்தது ஆகஸ்டில் என்று திருத்தி எழுதும்படிக் குமார் மனிதவளத் துறை அதிகாரியைக் கேட்கலாம். இந்தச் சின்னப்பொய் அவருக்கு உபரியாக 2,00,000 டாலர் லாபத்தைக் கொடுக்கும். இப்படித்தான் ஆப்பிளும் பிற நிறுவனங்களும் தமது பணியாளர்கள் லாபம் பெறுவதற்காக உகப்புக் கொடுப்பதுடன், அவற்றை முன்தேதியிட்டும் கொடுக்கின்றன.

முக்கியமான முடிவுகளை எடுக்கும் நிர்வாகிகளுக்கும் நிர்வாகிப் பங்கு உகப்பு (Executive Stock Option) கொடுப்பார்கள். அது பணமாகத் தரப்படும். இதையும் முன்தேதியிடுவது, அந்த நிர்வாகிகளுக்குப் பணத்தை அள்ளிக்கொட்ட உதவுகிறது.

ஒம்... நம்ம IRS பங்கு உகப்பு ஏய்ப்புச் சட்டம்ஒனு ஒண்ணைக் கொண்டு வரலாம்னு சொல்லு என்றார் மட்டுறுத்துனர்.

பாரத் புன்னகைத்தான். ஆமாம். முன்தேதியிடும் வம்பில் சிக்கியுள்ள குழுமங்களின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டிருக்கிறது. அவைகள் கணக்கைத் திருத்தி எழுதியுள்ளதால் IRSக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கிறது. ஆப்ஷன்ஸ் கொடுப்பதன் நோக்கமே பணியாளர்கள் பங்குதாரர்களுக்கு நல்லபடியாக வேலை செய்ய வேண்டும் என்பதுதான். முன்தேதி இடுவதன் மூலம் நிர்வாகிகள் ஏராளமான பணத்தைக் குவிக்கிறார்கள். அதை ஒரு பங்குதாரர் செய்து பணம் ஈட்ட முடியாது. பங்குதாரர்கள் இதனால் எரிச்சல் அடைகிறார்கள். யுனைடட் ஹெல்த், ஆப்பிள் போன்றவற்றின் பங்குதாரர்கள் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்கள்.

ஒரு கம்பெனி தனது நிர்வாகிக்குப் பங்கு உகப்புக் கொடுக்கும்போது, அவர்கள் பெறும் லாபத்தை வருமானத்திலிருந்து கழிக்க வேண்டும். அது உபரிச் சம்பளமாகிற தல்லவா, அதனால்தான். உதாரணமாக, 25 டாலர் வீதம் 10,000 பங்குகளை ஆப்பிள் கொடுத்து, அதை ஒரு நிர்வாகி 65 டாலரில் பணமாக்க நினைத்தால், ஆப்பிள் தனது வருமானத்தில் 4,00,000 டாலரைக் குறைக்க வேண்டும். முன்தேதி இட்டு 15 டாலருக்குக் கொடுத்தால், வருமானத்தில் 5,00,000 டாலர் குறையும்.

குழு விவாதத்தில் முன்னணியில் இருந்த பாரத்தும் திவ்யாவும் அதன்பிறகு சிற்றுண்டி விடுதியில் சந்திக்கும்போது பேசினர்.

ஒரு நிறுவனம் முன்தேதி இட்டு, அதை வரித் துறைக்குச் சொல்லவில்லை என்றால், எத்தனை வருஷம் முன்தேதியில் உகப்புக் கொடுத்ததோ அவ்வளவு வருஷத்துக்கும் வருமானத்தை மறுகணக்கிட வேணும், இல்லையா? அந்தக் குழுமத்தின் நிதித்துறை அதற்கு எவ்வளவு வேலை மெனக்கிட வேண்டியிருக்கும்! என்று ஆச்சரியப்பட்டாள் திவ்யா.

உண்மைதான். பங்கு உகப்புப் பெற்ற ஒரு நிர்வாகி 4,00,000 டாலர் அதிக வருமானம் பெற்றால், அதற்கு அவர் வருமான வரி செலுத்தியாக வேண்டும். அதுவே முன்தேதி யிட்டதால் லாபம் 5,00,000 டாலர் என்றால் அதற்கு வரி செலுத்த வேண்டுமே.

அது கிடக்கட்டும். இப்போ நமக்கு வேலை கிடைச்சாச்சு. எங்கே வேலை செய்யப் போறே, இந்தியாவிலயா, வெளிநாட்டிலயா? என்று கேட்டான் பாரத்.

எனக்கு எப்பவுமே மேரா பாரத் மஹான் என்று அவள் சொன்னதன் இன்னொரு பொருளும் அவனுக்குப் புரிந்தது.

ஆங்கிலத்தில்: சிவா மற்றும் ப்ரியா
தமிழ்வடிவம்: மதுரபாரதி

© TamilOnline.com