எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 10)
அதிகாலையில் டேவிட் ராப்ளேயிடம் சண்டை. அதற்கு சற்றுப்பின்னர் மேயர் ரோஸ்வுடுடன் மோதல். கீதாவுக்குத் தலை சுற்றிக்கொண்டு வந்தது. அருணின் வைராக்கியம் நொடிக்கு நொடி அதிகமாவதைப் பார்த்து சற்றே பயந்து போனார். தனது செல்லநாயைக் காப்பற்றுவதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தான் அவன்.

"மேயர் ரோஸ்வுட் இல்லைன்னா என்ன? நான், நம்ம ஜட்ஜ் குரோவ் (Judge Grove) கிட்ட கேட்கப்போறேன். அவரால ராப்ளேயை சம்மதிக்க வைக்க முடியும்."

அதுவொரு சின்ன ஊர். ஆதலால் கீதாவால் ஒவ்வொரு இடத்திற்கும் சட்டென்று போகமுடிந்தது. பக்கரூவின் உடல்நிலை இன்னும் மோசமானதாக உணர்ந்தார். அப்படியே விட்டால், இன்னும் ஒன்றிரண்டு நாட்கள்தான் உயிர் வாழ்வான் போலத் தோன்றியது.

மனதில் ஆயிரம் சிந்தனை இருந்தாலும் மகனைப் பார்க்கும்பொழுது மிகவும் பெருமையாக இருந்தது.

ஜட்ஜ் குரோவ் தனது ஓய்வுகாலத்தில் அந்த ஊரில் பலவித தர்ம காரியங்களைச் செய்துவந்தார். சின்னக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது முதல், ஏழை எளியவர்களுக்குச் சட்டம் சம்பந்தமான உதவிகளையும் அவர் செய்தார். மிகவும் கண்ணியமானவர். அவரது மகனும் மகளும் மிகத் தொலைவிலிருந்த ஊர்களில் குடும்பத்தோடு வாழ்ந்தனர். அவரது மனைவியோ பல வருடங்கள் முன்பே இறைவனடி சேர்ந்து விட்டார்.

ஜட்ஜ் வீடு ஒரு பெரிய பங்களா. அந்த ஊரிலேயே ஜட்ஜின் வீடுதான் மிகவும் பெரியது. அதன் முன்னால் வண்டியை கீதா நிறுத்தியதும், அருண் பக்கரூவை எடுத்துக்கொண்டு இறங்கினான்.

"அருண், ஜட்ஜ் குரோவால டேவிட் ராப்ளேயைச் சம்மதிக்க வைக்க முடியும்னு நம்பறியா?"

"ஏனம்மா முடியாது? ஜட்ஜ் சொன்னா இந்த ஊர்ல எல்லாரும் கேப்பாங்க இல்ல?"

"ராப்ளே எல்லாரும் மாதிரி இல்லை கண்ணா!"

"தெரியும் அம்மா. நான் நம்ம பக்கரூவுக்காக யார்கிட்டயும் கேட்கத் தயார். நான் எந்தச் சந்தர்ப்பத்தையும் விடப்போறது இல்லை."

கண்களில் வந்த நீர்த்துளிகளைக் கையால் துடைத்துவிட்டுக் கீதா அருணின் தலையை வருடி, அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்தார்.

"வா, கண்ணா" என்று சொல்லி அருண், பக்கரூவோடு பங்களாவுக்குள் நுழைந்தார். உள்ளே நுழையும்பொழுதே ஒரு வேலையாள், ஜட்ஜ் தனது அலுவலகத்தில் இருப்பதாகச் சொன்னான். நேரடியாக அலுவலக அறைக்குள் அவர்கள் சென்றனர்.

ஏதோ வேலையில் மும்முரமாக இருந்த ஜட்ஜ், அவர்களை முதலில் கவனிக்கவில்லை. பக்கரூவின் முனகல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர், "அடடா, வாங்க! உள்ளே வந்து உக்காருங்க.", என்றார். "பத்து நிமிஷம்தான். நான் இந்த வேலையை முடிச்சிடறேன்."

கீதாவையும் அருணையும் நாற்காலிகளில் உட்காரச் சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தார். சிலநிமிடம் கழித்து, "சொல்லம்மா கீதா, என்ன விஷயம்?", என்று புன்சிரிப்போடு கேட்டார். "என்ன அருண், இன்னைக்கு ஸ்கூல் இல்லையா?"

"இருக்கு ஜட்ஜ் ஐயா," என்றான் அருண் ஒரு ஸ்கூல் தினத்தில், அந்தக் காலை வேளையில் எதற்கு அங்கு வந்திருக்கிறார்கள் என்று ஜட்ஜிற்கு புரியவில்லை. ஜட்ஜின் குழப்பத்தை உணர்ந்த கீதா, "அருண், ஜட்ஜ் ஐயாகிட்ட வந்த விஷயத்தைச் சொல்லப்பா" என்றாள்.

அருண் படபடவென்று அதுவரை நடந்த எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான்.

"அப்பப்பா, ஒரு சின்ன விதைக்காக இவ்வளவு மோசமா நடந்துக்கிட்டாரா ராப்ளே? நம்பவே முடியலையே?" என்று வியந்தார் ஜட்ஜ்.

"ஆமாம், ஐயா, இந்த விதைகளுக்காக எங்களை மோசம் செய்யப் பார்த்தாரு" என்றான் அருண்.

"இப்ப நான் என்ன செய்யணும்?" என்று கேட்டார் ஜட்ஜ்.

"நீங்க எப்படியாவது டேவிட் ராப்ளேயை சம்மதிக்க வைச்சீங்கன்னா நல்லாயிருக்கும். பக்கரூவை பிழைக்கவைக்க இதுதான் கடைசி சந்தர்ப்பம். ப்ளீஸ்" என்று அருண் கெஞ்சினான்.

"சரி, முயற்சி பண்ணிப் பாக்கலாம். டேவிடின் மனைவி ஆனபெல் மிகவும் தயாளகுணம் கொண்டவள். டேவிடோ…" என்று சொல்லிக்கொண்டே, டேவிடின் ஃபோன் நம்பரைத் தேடினார்.

"ஐயா, ஃபோன் நம்பர் வேண்டுமா?" என்று கேட்டாள் கீதா.

"ஆமாம். ஆனபெல்லின் நம்பர் என்வசம் உள்ளது. டேவிடின் அலுவலக நம்பர் இல்லை."

"TOP-SEED" என்றாள் கீதா.

"என்னம்மா?"

"TOP-SEED. அது தான் போன் நம்பர்."

"வித்தியாசமா இருக்கே?"

"ஆமாம் ஐயா, எல்லாமே அவருக்கு விவசாயம், தாவரம், விதைகள் பற்றித்தான். அவரது வண்டியின் லைசன்ஸ் நம்பர் POT-SOIL" என்று கீதா சொன்னபொழுது, ஜட்ஜின் முகத்தில் ஒரு சிரிப்பு தெரிந்தது.

"ஸ்பீக்கர் ஃபோன்லயே பேசலாம். வயசாயிருச்சு எனக்கு" என்று சொல்லி, டேவிடின் நம்பரைச் சுழற்றினார். அருணைப் பார்த்து சத்தம்போடாமல் இருக்குமாறு சைகை செய்தார்.

மறுபுறம் டேவிட்டின் குரல் ஒலித்தது. "ஹலோ, டேவிட் ஹியர்."

அருண் மெதுவாக, "ராட்சசன்" என்று தனக்குள்ளேயே சொன்ன பொழுது, கீதா அவனை சத்தம் போடாமல் இருக்கச்சொல்லிக் காதில் முணுமுணுத்தாள்.

"ஹலோ, நான் ஜட்ஜ் குரோவ் பேசறேன் டேவிட்."

"சார், நான் ஒரு மீட்டிங்குக்கு போய்க்கிட்டு இருக்கேன். அப்பறம் பேசலாமே?"

"இரண்டு நிமிஷம், ப்ளீஸ்."

"சொல்லுங்க."

"இந்தப் பையன் அருண்…"

"சார், நான்தான் விதை கொடுத்தா அனுமதி தரேன்னு சொல்லிட்டேனே. அப்பவும் முடியாதுன்னா, சாரி…"

"ராட்சசன்" திடீரென்று அருண் கத்தினான். "ராட்சசன்! ராட்சசன்! கொஞ்சம்கூட தயவே இல்லாத ராட்சசன்." அருணால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஒரே கத்தாகக் கத்திவிட்டான். அதுதான் சமயமென நினைத்து டேவிட் ஃபோனை வைத்துவிட்டார்.

கீதாவிற்கு பகீரென்றது. "என்ன ஆச்சு?" என்று கீதா கேட்டார்.

அருண் வேகமாக மூச்சுவிட்டான். அவன் கண்களில் ஒரு ஆக்ரோஷம் தெரிந்தது.

"தம்பி, இப்பிடி கோபப்படலாமா? பாரு, டேவிட் ஃபோனை வெச்சுட்டாரு" என்று ஜட்ஜ் கவலையோடு சொன்னார்.

ஜட்ஜுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அருணைச் செல்லமாக கட்டியபடி, "தம்பி, எனது பிரார்த்தனைகள். உன் செல்லநாயை அந்த இறைவன் காப்பாற்றட்டும்" என்று சொல்லி பக்கரூவிற்கு ஒரு முத்தம் கொடுத்தார்.

"டேவிட் உண்மையிலேயே ஒரு கிராதகன்," என்று ஜட்ஜ் கூறியபடி இருவரையும் வழியனுப்பினார்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com