திருச்சிராப்பள்ளி அருகேயுள்ள தலம் லால்குடி. திருத்தவத்துறை என்ற புராணப்பெயரை உடைய இத்தலத்தை சாலை மற்றும் ரயில் வழியே அடையலாம். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த இந்தக் கோயில், பராந்தக சோழ மன்னர் உட்படப் பலரால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது. இறைவன்: சப்தரிஷீஸ்வரர். அம்பாள்: பெருந்திருப்பிராட்டியார். தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம். தலவிருட்சம்: அரசமரம். திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற திருத்தலம் இது. இத்தலத்து இறைவன், இறைவி மீது தியாகராஜர் கீர்த்தனை இயற்றியுள்ளார். அருணகிரிநாதர் முருகன் மீது பாடியுள்ள திருப்புகழ்ப் பாடல்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன.
ஒருகாலத்தில் தேவர்கள் தாரகாசுரனின் கொடுமையிலிருந்து காத்தருளும்படி சிவபெருமானை வேண்ட, தன் அருளினால் முருகனைக் குழந்தையாகத் தோன்றவைத்து, சப்தரிஷிகளான அத்ரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், ஆங்கீரஸர், மரீசி ஆகியோரின் ஆசிரமத்தில் விட்டார். ரிஷிபத்தினிகள் குழந்தையைக் கண்டு மகிழ்ந்து விளையாடினர். பசியினால் அழுத குழந்தைக்கு ரிஷிபத்தினி அருந்ததி பால் கொடுக்க மறுக்கவே, கார்த்திகைப் பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இதைக் கேட்ட முனிவர்கள் மனைவியரைச் சபித்து விரட்டிவிட்டனர். முருகன் அந்த முனிவர்களைச் சபிக்கவே, அவர்கள் சாபம் நீங்குவதற்காக முதலில் திருவையாறிலும் பின்னர் லால்குடியிலும் தவம்செய்தனர். சிவபெருமான் அவர்கள்முன் தோன்றி, தனது தலையிலிருந்து ஜ்வாலையைத் தோற்றுவித்து அதில் ஏழு ரிஷிகளையும் ஐக்கியப்படுத்திக் கொண்டு சாபவிமோசனம் அளித்தார். சப்தரிஷிகளும் தொழுது மோட்சப்பேறு பெற்றதனால் சிவபெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்று பெயர் வந்தது.
டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி காலத்தில் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்த மாலிக்காபூர், இவ்வூர் ஆலயத்தின் கோபுரத்தைக் கண்டு 'லால்குடி' என்று அழைக்க (உருதுமொழியில் லால் = சிவப்பு. குடி = கோபுரம்) அப்பயெரே பின்னர் நிலைத்துவிட்டது.
ஊரின் நடுவில் திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் சுற்றளவு கிழக்கு மேற்காக 358 அடி. தெற்கு வடக்காக 230 அடி. கோயிலில் நான்கு பிரகாரங்கள் உள்ளன. நான்காவது பிரகாரம் தேரோடும் வீதியாகும். சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும் அம்மன் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கிழக்குநோக்கிக் காட்சியளிக்கிறார். கோயிலின் நுழைவாயில் ஐந்துநிலை கோபுரம் கொண்டது. கோயிலுக்கு வெளியே முன்புறம் உயர்ந்த நாற்கால் மண்டபம் உள்ளது. சுவாமியின் கர்ப்பகிரகத்தின் கீழ்ப்புறம் அர்த்தநாரீஸ்வரர் சிலை, அழகான கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. தென்புறம் கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி அழகிய சடைமுடியோடும், கைகளில் வீணையோடும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். வடபுறம் பிக்ஷாடனர் காட்சி தருகிறார். வெளிப்புறச் சுவர்க் கல்வெட்டுக்களில் மன்னர்கள் கோயிலுக்கு அளித்த அறக்கொடைகள் பற்றிய செய்திகள் காணக் கிடைக்கின்றன.
கோயிலில் ஜுரஹரேஸ்வரர் அருவுருவாக உள்ளார். தீராத ஜுரம் உள்ளவர்கள் வேண்டிக்கொண்டு சந்தனத்தால் இவருக்கு அபிஷேகம் செய்தால் ஜுரம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். கோபுரவாயிலில் நுழைந்ததும் வலப்புறம் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. இரண்டாவது வாயிலைத் தாண்டி நடனமண்டபம் உள்ளது. திருவாதிரை விழாவில் நடராஜப் பெருமானின் நடனக்காட்சி அம்மண்டபத்தில் நடைபெறும். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாங்கல்ய மகரிஷி என்ற முனிவருக்கும் சப்தரிஷிகளுக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் உடன் திருமணம் கைகூடி வருகின்றது. ஆலயத்தில் கிழக்குநோக்கிய வண்ணம் சிவகாமசுந்தரி அம்மை திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர், சிவகாமி அம்மையை "அறம் வளர்த்த கல்யாணி” எனப் போற்றிப் பாடியுள்ளார். தியாகராஜரும் அன்னையை கீர்த்தனைகள் பாடித் துதித்துள்ளார்.
இவ்வூருக்குப் பெருமை சேர்த்தவர் இசைமேதை லால்குடி ஜயராமன். சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, சோமவாரம், சிவராத்திரி, தைப்பூசம், திருவாதிரை, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் வருடந்தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு நடக்கும் விழாக்களிலேயே மிகச்சிறப்பானது திருவாதிரைத் திருவிழா. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அடுத்தாற்போல் ஆருத்ரா தரிசனமும் நடராஜப் பெருமானின் ஆனந்தநடனமும் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் நடராஜப் பெருமானை தரிசிக்க பெருந்திரளான மக்கள் வந்து செல்கின்றனர். 'திருத்தவத்துறை' என்று தலப்பெயர் குறிக்கப்பட்டு, நாவுக்கரசர் பெருமானால் தேவாரம் பாடிச் சிறப்பிக்கப்பட்ட பெருமையுடையது இத்தலம்.
கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன் பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற் குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு மயிலாடு துறைகடம்பந் துறைஆவடு துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே
- அப்பர்
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிஃபோர்னியா |