ஜூலை 15, 2016 அன்று விரிகுடாப்பகுதியில் நடைபெற்ற Shape Hackathon போட்டியில், அனீஷ் கிருஷ்ணனும் கரண் மேத்தாவும் இணைந்து உருவாக்கிய App முதல் பரிசை வென்றுள்ளது. கூப்பர்ட்டினோ பகுதியைச் சேர்ந்த இருவரும் மோன்ட விஸ்டா மேல்நிலைப் பள்ளியின் சீனியர் மாணவர்கள். வயது, கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றில் பழம் தின்று கொட்டை போட்ட 600 அணிகளுக்கிடையே இந்தப் பள்ளி மாணவர்களின் App முதல் பரிசான $20,000 தட்டிச் சென்றது விளையாட்டல்ல!
சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் AT&T பார்க்கில் நடைபெற்ற இந்த Shape தொழிநுட்பக் கண்காட்சி புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பம் எதிர்காலத்தில் எப்படி மாற்றத்தை உண்டாக்கும் என்பதை விளக்குவதற்காகவும் நடத்தப்பட்டது. இரு நாட்கள் நடந்த இக்கண்காட்சியில் 3000க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்களும். புதியன படைப்போரும் பங்கேற்றனர்.
இதன் ஒரு பகுதிதான் Shape Hackathon. இந்தப் போட்டியில் பொறியியல் வல்லுநர் மற்றும் வடிவமைப்பாளர்கள் பங்கேற்றனர். சமூகத்திற்குப் பயனுள்ள ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது தரப்பட்ட இலக்கு. அதை அவர்கள் 24 மணி நேரத்தில் செய்து முடிக்கவேண்டும். IBM, AT&T ஆகியோர் இதன் முக்கியப் புரவலர்கள்.
வெற்றிபெற்றதைப் பற்றி அனீஷ், "கரனிடம் இதில் கலந்துகொள்ளலாமா என்று கேட்டபோது தயங்கினார். அவர் இன்டர்ன்ஷிப்பில் மும்முரமாக இருந்தார். பின் ஒப்புக்கொண்டார். நாங்கள் போட்டிக்கு வந்திருந்த அனுபவமிக்கவர்களைப் பார்த்ததும் முதல்சுற்றுக்கு வருவதே சந்தேகம் என நினைத்தோம்" என்கிறார். கிடைத்த 24 மணிநேரமும் மிகக் கடுமையாக உழைத்து இதை உருவாக்கினார்களாம்.
இந்த App என்ன செய்கிறது? சுற்றிலும் இருக்கும் பல தகவல்களைச் சேகரித்து ஓரிடத்தில் அபாயமான, குற்றம் நிறைந்த சூழல் இருக்கிறதா என்பதை அறிந்து, பயனாளியை எச்சரிக்கிறது. அதன்மூலம் அவர் அந்த வழியே செல்வதைத் தவிர்க்கலாம். இதற்குச் 'செயற்கை நுண்ணறிவை' பயன்படுத்துகிறது. பிரில்லியன்ட்!
இதைச் செய்யத் தூண்டுகோலாக அமைந்தது என்ன? "சமீபத்தில் நடந்த குற்றங்கள் எங்களை யோசிக்கவைத்தன. ஓரிரவு முழுவதும் யோசித்து இதை உருவாக்கினோம். பல சுற்றுகளுக்குப் பின் இறுதிச் சுற்றுக்கான 9 திட்டங்களில் ஒன்றாகத் தேர்வானது. கடைசிச்சுற்றுக்குப் பின், 3ம், 2ம் இடங்களுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன. எங்கள் பெயர் இல்லை! சற்றே நம்பிக்கை இழந்தோம். கடைசியில் வெற்றிபெற்றது நாங்கள்தான் என அறிவிக்கப்பட்டபோது அதை உணரச் சிறிதுநேரம் பிடித்தது. மகிழ்ச்சியில் ஊமையானோம்" என்கிறார் அனீஷ்.
ஊபர் டாக்ஸியில் போய் சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஐஸ்க்ரீம் சண்டே சாப்பிட்டுக் கொண்டாடினார்களாம் இருவரும்! பரிசுத்தொகையை எப்படிச் செலவிடலாம் எனத் திட்டமிட்டபடி வீடு திரும்பியதாகக் கூறுகிறார்.
"போட்டியாளர்கள் எத்தனை பேர், எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்கிற விவரம் நம்மை மனந்தளரச் செய்யக்கூடாது. இயன்றவரை சிறப்பாகச் செய்து கனவை நனவாக்க வேண்டும். 'The Imitation Game' திரைப்படத்தில் வரும் "Sometimes it is the people no one imagines anything of, who do the things no one can imagine" என்ற வசனத்தை நினைவில் கொள்ளவேண்டும்." என்கிறார்.
அனீஷ் மற்றும் கரனுக்கு வாழ்த்துக்கள்!
தகவல்: கோபாலகிருஷ்ணா தமிழில்: மீனாட்சி கணபதி |