புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016
அமெரிக்கா, ஐக்கிய பேரரசு, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றில் 6,500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்குத் தமிழ்க்கல்வி அளித்துவரும் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் (மேநாள் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்) மே 27-30 நாட்களில் சான்ட க்ளாரா கன்வென்ஷன் சென்டரில் 'புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016' என்னும் இரண்டாவது கல்வி மாநாட்டை நடத்தியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும், தமிழ்க் கல்வியாளர்களும், தமிழாசிரியர்களும், புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களும், பெற்றோர்களும், இணைபள்ளி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நான்குநாள் மாநாட்டின் முதல்நாள், பள்ளியில் படித்து முடித்த/படித்துவிட்டு ஆசிரியர்களாகத் தன்னார்வத் தொண்டு செய்துகொண்டிருக்கும் இப்பள்ளி மாணவர்கள் 'இளைஞர்கள் தினம்' நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினர். இதில், மாணவர்கள் தமது எதிர்கால இலட்சியத் தமிழ்ப்பள்ளி எப்படி இருக்கவேண்டும் என்று தங்கள் கருத்துக்களைக் கூறினர். அடுத்து 'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்துவது சரியா, தவறா?', 'ஆங்கில வார்த்தைகளைச் சேர்த்து தமிழைக் கற்பித்தல் சரியா?' என்கிற தலைப்புகளில் விவாதித்தனர். காலத்துக்கேற்ப தமிழ் கலாச்சார உடைகள் எப்படி மாறிவருகின்றன என்கிற ஒரு காட்சியையும் நடத்தினர். மாணவர்களும் மற்ற தமிழ்க்கல்வியுடன் தொடர்புள்ள அனைவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு வலைவாசல் துவங்கப்பட்டது.

இரண்டாம் நாள் பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்களும், தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர். தமிழறிஞர்கள் "பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் கலந்து கற்பித்தலில் அளவும் அணுகுமுறையும்" என்னும் விவாதத்தில் பங்கேற்றனர்.

மூன்றாம் நாளன்று, எளிய முறையில் இலக்கணம் பயிற்றுவித்தல், வாக்கியங்கள் அமைத்தல், விளையாட்டு முறையில் தமிழ் பயிற்றுவித்தல், எழுத்தொலி ஆகிய தலைப்புகளில், தமிழாசிரியர்களுக்குப் பயிலரங்குகள்நடத்தப்பட்டன. இணைப்பள்ளிகளிலிருந்து வந்து மாநாட்டில் கலந்துகொண்ட நிர்வாகிகளுடன் நடந்த மாலைநேரச் சந்திப்பில் தமிழ்க்கல்வியை எப்படிச் சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்னும் தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இரண்டு, மூன்றாம் நாள் மாலைகளில் உலகத் தமிழ்க்கல்விக் கழக மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர்.

நான்காம் நாள் கண்காட்சி இடம்பெற்றது. தமிழ், தமிழர் வரலாறு, கலாசாரம், கலைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் இதில் இடம்பெற்றன. புத்தகங்கள், குறுந்தகடு மற்றும் தமிழ் பயிற்றுவிக்கும் கருவிகள், மென்பொருட்கள் ஆகியவையும் ,குழந்தைகளுக்கு மாயாஜாலம் (magic show), பலூன், முகப்பூச்சு (face painting) மற்றும் பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றன.

மாநாட்டின் இறுதியில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களும் மாநாட்டுச் செயற்குழு உறுப்பினர்களும் தொண்டூழியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் தகவலுக்கு:
வலைமனை: www.TamilConference.org

நித்யவதி சுந்தரேஷ்,
உலகத் தமிழ்க் கல்விக்கழகம்

© TamilOnline.com