உத்தமசோழன்
தமிழ் எழுத்துலகில் தீவிர இலக்கியத்தைப்போலவே வெகுஜன இலக்கியத்திற்கும் மிகமுக்கிய இடமுண்டு. தீவிர இலக்கியத்திற்குச் சற்றேனும் குறையாத காத்திரமான வெகுஜனப் படைப்புகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி எழுதும் ஆற்றல்மிகு எழுத்தாளர்களுள் உத்தமசோழனும் ஒருவர். இவரது இயற்பெயர் செல்வராஜ். இவர், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வெள்ளங்காற்றில் நவம்பர் 19,1944 அன்று, அருணாச்சலம்-சௌந்தரவல்லி தம்பதியருக்குப் பிறந்தார். வெள்ளங்காற்றில் பள்ளி இல்லாததால் இரண்டு கி.மீ. தொலைவிலுள்ள இடையூரில் படித்தார். பின்னர் திருத்துறைப்பூண்டி போர்டு ஹைஸ்கூலில் படித்தார். மேற்கல்வியை` முடித்ததும் அரசுப்பணியில் அமர்ந்தார்.

சிறுவயதில் தாத்தாவிடம் கேட்ட கதைகளும், வாசித்த நூல்களும் இவரது எழுத்தார்வத்தைத் தூண்டின. தந்தையின் பணி நிமித்தம் காரணமாக பல ஊர்களில் வசித்ததும், தனது பணி காரணமாகச் சந்தித்த பல மனிதர்களின் அனுபவங்களும் இவரை எழுதத் தூண்டின. உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து 'இரண்டு ரூபாய்' என்னும் தலைப்பில் அவர் எழுதிய முதல் சிறுகதை 1983ம் ஆண்டில் குங்குமம் இதழில் வெளியானது. அந்தக்கதை பெற்ற வரவேற்பு இவரை மேலும் எழுதத் தூண்டியது. குமுதம், விகடன், அமுதசுரபி என்று பல இதழ்களுக்கும் எழுதினார். விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனின் ஊக்குவிப்பு இவரை நாடறிந்த எழுத்தாளராக்கியது.

Click Here Enlargeஇவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 'துணை என்றொரு தொடர்கதை' சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு பாடமாக வைக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் இது பாடநூலாக இருந்தது. இவரது 'வாழ்க்கையெங்கும் வாசல்கள்' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப்பரிசு கிடைத்தது. 'குருவி மறந்த கூடு' என்னும் சிறுகதைத் தொகுப்பு, சிவகங்கை மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கப் பரிசு பெற்றது. விகடனில் வெளியான 'தொலைதூர வெளிச்சம்' என்னும் தொடர் பரவலான வாசக வரவேற்பைப் பெற்றதாகும். இதற்கு ஸ்ரீராம் - அமுதசுரபி ட்ரஸ்ட் விருது கிடைத்தது. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கைபற்றிப் பேசும் 'பத்தினி ஆடு' நாவலுக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த நாவலுக்கான விருது கிடைத்தது. 'தேகமே கண்களாய்' நாவல் பார்வையற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றிப் பேசுகிறது. இதற்கு காசியூர் ரங்கம்மாள் விருது கிடைத்தது. முனைவர் தமிழண்ணல் அவர்களால் மிகவும் உயர்வாகப் பாராட்டப்பட்ட நாவல் இது. 'கசக்கும் இனிமை' என்னும் சிறுகதை விகடனில் தொடராக வந்து பின்னர், கே. பாலசந்தரின் இயக்கத்தில் தொலைக்காட்சித் தொடரானது. தேவி வார இதழ் நடத்திய சின்னஞ்சிறு நாவல் போட்டியில் பரிசுப் பெற்றது 'மனசுக்குள் ஆயிரம்' குறுநாவல்.

எளியமக்கள் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றனர், அதிகார வர்க்கத்தினரால் பந்தாடப்படுகின்றனர் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் இவர். கதைமாந்தர்களின் நுண்ணிய உணர்வுநிலைகளைப் படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவர். அநாவசிய வர்ணனைகளோ, சிடுக்கு மொழிகளோ, குழப்பும் உத்திகளோ, வார்த்தை ஜாலங்களோ இல்லாமல் இயல்பாகக் கதை சொல்லும் பாணி இவருடையது. இவரது படைப்புக்கள் பலவும் வெகுஜன இதழ்களிலேயே வெளியானபோதும், படைப்பின் தரத்தை இவர் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. தஞ்சை மண்ணின் வளத்தையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றையும், கீழ்த்தஞ்சை மண்ணின் வட்டார வழக்குப் பேச்சையும் தொடர்ந்து தமது படைப்புகளில் பதிவு செய்கிறார்.

'பாமரசாமி', 'ஆரம்பம் இப்படி்த்தான்', 'வாழ்க்கையெங்கும் வாசல்கள்', 'பூ பூக்கும் காலம்', 'சிந்து டீச்சர்', 'சில தேவதைகளும் ஒரு தேவகுமாரனும்', 'ஒரே ஒரு துளி', 'மனிதத் தீவுகள்', 'வல்லமை தாராயோ!' போன்ற இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கன. 'அவசர அவசரமாய்', 'உயிர் உருகும் சப்தம்', 'கனல்பூக்கள்', 'கலங்காதே கண்ணே' போன்றவை வரவேற்பைப் பெற்றவை. இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'உத்தமசோழன் சிறுகதைகள்' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது. 'மழை சார்ந்த வீடு' என்ற தலைப்பில் சிறந்த எழுத்தாளர்களின் முக்கியமான கதைகளைத் தொகுத்திருக்கிறார். இவரது சிறுகதைகள் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் வெளியாகும் முன்னணி வார, மாத இதழ்கள் அனைத்திலும் சிறுகதைகள், தொடர்கள் எழுதியிருக்கிறார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியிருக்கிறார். இதுவரை 12 சிறுகதைத் தொகுப்புகளும், 10 நாவல்களும் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகளில் நாற்பதிற்கும் மேற்பட்டவை பல பரிசுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முனைவர்பட்ட மாணவர்கள் பலர் இவரது படைப்புகளை ஆய்வுசெய்து பட்டம் பெற்றுள்ளனர். 'கிழக்கு வாசல்' என்ற பல்சுவை மாத இதழின் ஆசிரியரும்கூட. அதை 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தான் கேட்டது, பார்த்தது போன்றவையே தனது படைப்புகளாக வெளிப்படுகின்றன என்று கூறும் உத்தமசோழன், தமிழ்ச் சமூகத்தின் பெருமைகள் என்னென்ன, அது எப்படியெல்லாம் தற்போது சிதைந்து போயிருக்கிறது, எதை மாற்றுவது எப்படி என்பதுபோன்ற கருத்துக்களை மையமாக வைத்து ஒரு நாவல் எழுத வேண்டுமென்பது தனது விருப்பம் என்கிறார். கீழ்த்தஞ்சை மாவட்டத்தின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியின் கதையை 'சுந்தரவல்லி சொல்லாத கதை' என்னும் தலைப்பில் நாவலாக எழுதிவருகிறார். 80 ஆண்டுகளுக்கு முந்தைய விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கை முறையையும், அக்காலத்து விவசாய முறைகளையும் இந்நாவலில் பதிவு செய்துள்ளார். வருவாய்த்துறையில் வட்டாட்சியராகப் பணியாற்றி, எழுத்துப் பணியை தீவிரமாகத் தொடருவதற்காகவே விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் உத்தமசோழன், திருத்துறைபூண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது முழுநேரப் படைப்பாளியாக இயங்கி வருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com