தென்றல் பேசுகிறது...
கொள்கைகளால் மாறுபட்டாலும், தாமிருக்கும் நாட்டின் நன்மை என்கிற ஒரே பொதுநோக்கால் ஒன்றுபட்டு நடத்தப்படுவதுதான் கட்சி அரசியல். கொள்கை மாறுபாடு இருக்கின்ற காரணத்தால் கருத்து வேறுபாடு நிச்சயம் இருக்கும். ஆனாலும் அவை அரசியல் நாகரிகத்தோடும் பெருந்தன்மையோடும் பொதுமன்றத்தில் விவாதிக்கப்படும். இதுதான் நாம் பார்த்துவந்த நடைமுறை. சென்ற மாதங்களில் ரிபப்ளிகன் மற்றும் டெமாக்ரடிக் கட்சியினரின் பேரரங்குகள் நடைபெற்றபோது, ஓர் அதிபர் வேட்பாளர் மாற்றுக்கட்சி வேட்பாளரைப்பற்றிக் குறைந்தபட்ச மரியாதைகூட இல்லாமல் பேசுவதைக் காண நேரிட்டது. அவதூறு, அவமானப்படுத்துவதற்காகவே பேசப்படும் புனைந்துரை, வசைமொழி எனப் பொதுமேடையின் தரம் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலும் இவ்வகையில் மகிழ்ச்சி தருவதாக இல்லை.

எதிர்க்கருத்துகள் இருந்தபோதும், பொதுநன்மைக்கு எது மிகவும் உகந்ததோ அதைத் தெரிந்தெடுத்துச் செயல்படுத்துவதுதான் அரசின், அரசியலின் கடமை. அப்போதுதான் மக்களாட்சி பொருள்பொதிந்ததாக இருக்கும். இல்லையென்றால் "புட்டின் என்னைப்பற்றி நல்ல வார்த்தை கூறினார், அதனால் ரஷியாவோடு நல்லுறவு கொள்ளலாம்" என்பதுபோன்ற கேலிக்குரிய வாதங்களின் அடிப்படையில் தேசத்தின் செயல்பாடு அமைந்துவிடும். அதனால், மக்கள் தமது தலைவர்களை, அரசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பேசுகின்ற ஓரிரண்டு வேகமான சொற்களால் ஆவேசப்பட்டு, அவற்றிற்காகத் தலைவரைப் பீடத்தில் ஏற்றிவிடக் கூடாது. 'அதிகப் பேருக்கு அதிக நன்மை' என்னும் தத்துவம் நம்மை வழிநடத்திச்செல்ல வேண்டும். அப்படிக் கவனத்தோடு செய்யும்போது, சுயலாபத்துக்காக சாக்கடை அரசியல் செய்வோரை ஒதுக்கித் தள்ளுதலும் அறிவார்ந்த மனிதசமூகத்தின் முக்கியக் கடமையாக அமையும்.

*****


இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்று கூறுவார்கள். அதைவிடப் பெரிய மதமாகச் சினிமா ஆகிவிட்டதோ என்ற ஐயம் அண்மையில் 'கபாலி' திரைப்பட வெளியீடு ஏற்படுத்தியது. பொது ஊடகங்கள் எல்லாவற்றிலும் அதைப் பார்ப்பதும் அதைப்பற்றிப் பேசுவதும் ஏதோ ஜீவமரணப் பிரச்சனை என்கிற அளவுக்குச் செய்யப்பட்டது. ஒருவர் இந்தப் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் சென்று, திரும்பியதும் செய்தியாக வெளிவந்தது. 'முதல்நாள் முதல் காட்சி' என்பது ஏதோ வாழ்க்கை லட்சியம்போலத் தம்பட்டம் அடித்துக்கொள்ளப் பட்டது. அரங்கத்தில் எடுத்த செல்ஃபிக்கள் அவசரமாகப் பதிவாகின. நாம் எவ்வளவு எளிதாக விளம்பர உத்திகளுக்குப் பலியாகிவிடுகிறோம், சிரமப்பட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொண்டுபோய் வணிகசக்திகளின் கரத்தில் கண்ணை மூடிக்கொண்டு கொட்டத் தயாராக இருக்கிறோம் என்பதையே இவையெல்லாம் காண்பித்தன. நாம் அந்தப் படத்தை விமர்சிக்கவில்லை; ரஜனி என்ற நடிகரையும் விமர்சிக்கவில்லை. படத்தின் வெளியீட்டுக் காலத்தில் ரசிகர்களிடையேயும் அல்லாதவர்களிடமும் காணப்பட்ட உயர்வெப்ப ஜுரத்தைத்தான் விமர்சிக்கிறோம். இப்படிப்பட்ட நடத்தை நம்போன்ற, அறிவின், மனத்தின் சுய ஆளுமையை மதிக்கும் சமுதாயத்துக்குப் பெருமை தருவதாக அமையவில்லை.

*****


இருமொழிப் புலமையோடு தெள்ளிய தமிழில் கணீரென்று பேசும் பேருரைகளுக்குச் சொந்தக்காரர் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள். எளிமை, இறைவனைத் தவிர வேறெவரையும் புகழேன் என்ற உறுதி, அடியார் பணியில் ஆனந்தம் காணுதல் என்ற பல பாரம்பரிய விழுமியங்களைப் பிடிவாதமாகக் கடைப்பிடித்துப் பெரியதொரு அன்பர் கூட்டத்தை வென்றவர். சிந்திக்கத்தக்க பல கேள்விகளுக்குச் சிறப்பான பதில்களை அவரது நேர்காணலில் நாம் வாசித்து மகிழலாம். இன்னும் ஏராளமான அம்சங்களோடு இவ்விதழ் உங்களை வந்தடைகிறது.

வாசகர்களுக்கு கோகுலாஷ்டமி, இந்திய சுதந்திரநாள், அன்னை வேளாங்கண்ணித் திருவிழா வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

ஆகஸ்டு 2016

© TamilOnline.com