ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலய மஹாருத்ர விழா
மே 27முதல் 29வரை சான்ஹோஸே ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத்தில் மஹாருத்ர ஜபம் நடைபெற்றது. விரிகுடாப்பகுதியின் பல திருக்கோயில் வேத பண்டிதர்கள் இந்த யாகத்தில் கலந்துகொண்டனர். ஆலய நிறுவனர் பிரும்மஸ்ரீ கிருஷ்ணன் சாஸ்திரிகள் வேதநெறிப்படி இதனை நடத்தினார். இந்த யாகத்தின் முக்கிய அங்கங்களாக 1351முறை ஸ்ரீருத்ர ஜபம், 133முறை ஹோமம், ருத்விக் போஜனம் ஆகியவை முறையாக நடைபெற்றன.

நிகழ்ச்சி மே 27 வெள்ளிக்கிழமையன்று யாகசாலை சுத்தி ஹோமம் மற்றும் தேவதை தானத்துடன் தொடங்கியது. பிறகு கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும் நடைபெற்றன. தொடர்ந்து ஆவஹந்தி ஹோமம், சர்வதேவதை ஹோமம், ஐயாதி ஹோமம் முதலியன நடைபெற்றன. மாலையில் பெரிய குத்துவிளக்கை அலங்கரித்து, தேவியை ஆவாஹனம் செய்து, சுமார் 80 சுமங்கலிகள் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் சொல்லி தீபபூஜை செய்தனர்.

மே 28 நிகழ்ச்சி குருவந்தனத்துடன் தொடங்கியது. பிறகு மஹன்யாசம் மற்றும் ருத்ர பாராயணம் நடந்தது. நூற்றுமுப்பதுக்கும் மேற்பட்ட ருத்விக்குகள் ஸ்ரீருத்ர பாராயணம் செய்ய, சிவலிங்க அபிஷேகம் நடந்தது.

அன்றிரவு தைத்திரிய உபநிஷத் பாராயணமும், ருத்ரக்ரம அர்ச்சனையும் நடந்தன. பின் அஷ்டாவதன சேவையில் நான்கு வேதங்களும் பாராயணம் செய்யப்பட்டன. அதன்பின் ஜோதிஷ சாஸ்திரம் மற்றும் ஞானசாஸ்திரம் இவற்றைப் பற்றி சம்ஸ்கிருதத்தில் சிறு சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் சங்கீத சேவையும் அதிதி கிருஷ்ணனின் பரதநாட்டிய சேவையும் இடம்பெற்றன.

மே 29ம் தேதி காலை நடைபெற்ற ருத்ரஹோமம் இந்த மூன்று நாள் நிகழ்வின் மணிமகுடம். பல ஆவர்த்திகள் ஸ்ரீருத்ர ஜபத்துக்குப் பின், 121 கலசங்களும் 121 ருத்விக்குகளாக சிவன் சன்னிதிக்குக் கொண்டுவரப்பட்டன. மீண்டும் ருத்ரம் சொல்லி, இந்த சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

வேத பண்டிதர்களுக்கு சால்வை, சம்பாவனை, பிரசாதம் அளித்து சிறப்புச் செய்யப்பட்டது. பின்பு உபயதாரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இவற்றை நல்லமுறையில் நடத்திக்கொடுத்த பிரும்மஸ்ரீ கிருஷ்ணன் சாஸ்திரிகள் மற்றும் அன்பர்களை அனைவரும் பாராட்டினர்.

ஸ்ரீராம் லக்ஷ்மணன்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com