ஜூன் 05, 2016 அன்று செரிட்டோஸ் (தென்கலிஃபோர்னியா) பாரதி தமிழ் கல்வி தனது முதலாமாண்டு நிறைவுவிழாவைஜான் அ. கொன்சால்வஸ் ஆரம்பப்பள்ளி பல்முனை உள்ளரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடியது. மாணவர்கள் வரவேற்புரையாற்றி, தொகுத்து வழங்கியதோடு பல்வேறு தலைப்புகளில் பேசியும் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் அசத்தினர்.
குழந்தைகளின் கர்நாடக சங்கீத இசை மழை அனைவரையும் மெய்மறக்க செய்தது. வகுப்பு ஒன்று மாணவர்கள் தங்களது மழலை மொழியில் தமிழ் பேசி மெய்மறக்கச் செய்தனர். வகுப்பு இரண்டு மாணவர்கள் தங்களுக்கு பிடித்த நகரம், கோவில், குறட்பாக்கள் மற்றும் புலவர்கள் பற்றி அருமையாகப் பேசினர்.
வகுப்பு மூன்று மாணவர்கள் தமிழக வரலாறு, பொங்கல் திருநாள், சமையல் வகைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை வழங்கியும், சிறுவர்களுக்கான வண்ணப் புத்தகம் எழுதியும், '2.0' குறும்படம் இயக்கி நடித்தும் கலகலப்பூட்டினர். மாணவர்கள் பயின்றதை வெளிப்படுத்தும் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில் தன்னார்வத் தமிழாசிரியர்கள் பலத்த கரகோஷத்திடையே கௌரவிக்கப்பட்டனர். தலைமையாசிரியர் திரு. பாபநாசம் நன்றியுரையாற்றி, மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
வலைமனை: www.barathithamizh.org முகநூல்: www.facebook.com/barathithamizhkalvi
செந்தில் கருப்பையா, செரிடோஸ் |