ஜூன் 11, 2016 அன்று சான்டா ஆனாவிலுள்ள கோதீன் 2 உயர்நிலைப்பள்ளி அரங்கில் சுவாதி பாலாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரத்துக்குப் பிறகு அமைந்த வர்ணத்துக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. லால்குடி ஜெயராமனின் ஷண்முகப்ரியா ராக வர்ணத்திற்கு விஷ்ணுவின் ரூபங்களைச் சித்திரித்து ஆடியது சிறப்பு. "ஜகன்னாதா" என்று ஆரம்பித்த வர்ணம், பாற்கடலைக் கடையும் காட்சியைக் காட்டுவதாக இருந்தது. வாமனனாக வந்து மூவுலகையும் அளந்தது, பார்த்தசாரதியான கிருஷ்ணன், குசேலனுக்கு உதவியது, திருமலையில் ஸ்ரீநிவாசனாக அவதரித்து ரிஷி, முனிவர்களுக்கு அருளி, பக்தர்களுக்கு தரிசனம் தந்தது என யாவற்றையும் அனாயசமாக அபிநயம், ஜதிகளுடன் ஆடியது சிறப்பு.
ரம்யா ஹரிசங்கரின் நடன வடிவமைப்பு முதல்தரம். கற்றுக்கொடுத்த ஆசிரியையைப் பாராட்டுவதா, கற்றுக்கொண்ட மாணவியைப் பாராட்டுவதா என்றே தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகு பிரம்மானந்தாவால் அமைக்கப்பட்டிருந்த 'ஜெய்துர்கா' பஜன் அசத்தல். அஷ்டபுஜங்களில் ஆயுதங்களை ஏந்தி, மும்மூர்த்திகளால் துதிக்கப்படும் தேவியை சிங்கத்தின்மேல் அமர்ந்தவளாகப் பார்க்கமுடிந்தது. ஸ்ரீகாந்தின் வாய்ப்பாட்டு, ப்ரியம்வதாவின் வயலின், ஹரிபாபுவின் மிருதங்கம், மோஹன்ராஜ் ஜயராமனின் ஒத்துழைப்பு எல்லாமே அரங்கேற்றம் சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்தன.
படிப்பிலும் சுவாதி திறமைசாலி. பத்மாகுட்டியிடம் 10 வருடங்களாக இசை பயின்று வருகிறார். சென்னையில் அரங்கேற்றம் செய்துள்ளார். 12வதிலும் சிறப்பான மதிப்பீடு பெற்று, கல்விநிதி வென்றுள்ளார். சிகாகோவில் படிக்கவுள்ளார்.
இந்திரா பார்த்தசாரதி, சதர்ன் கலிஃபோர்னியா |