ஜூன் 18, 2016 அன்று ஓலோனி கல்லுரியின் ஜாக்சன் அரங்கில் செல்வி. வித்யா ரவிகுமாரின் கர்நாடக வாய்ப்பாட்டு அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் குரு லதா ஸ்ரீராம் அவர்களிடம் 13 ஆண்டுகளாக இசை பயில்கிறார்.
முதலில் சுவாதித்திருநாளின் சங்கராபரண ராக வர்ணத்தை அழகான கல்பனா ஸ்வரங்களுடன் பாடினார். பின்னர் "முருகா முருகா என்றால்" என்ற பாடலில் சாவேரி ராகத்திற்கு வித்யா பாடிய ஆலாபனை, நிரவல் மற்றும் கல்பனா ஸ்வரங்கள் மிகவும் பொருத்தமாக அமைந்தன. "ஆடாது அசங்காது" (மத்யமாவதி), சியாமா சாஸ்திரியின் தோடிராக ஸ்வரஜதி, சுவாதித் திருநாளின் "பங்கஜ லோசன" (கல்யாணி) ஆகியவற்றைத் தெளிவான குரலுடன் வித்யா பாடிய விதம் அருமை. ஆதிசேஷய்யர் இயற்றிய "என்ன கவி பாடினாலும்" என்ற முருகன் பாடல் உள்ளத்தை உருக்கியது. லால்குடி ஜெயராமன் இசையமைத்த தில்லானா பாடல் (கமாஸ்) வெகு அருமை. வாய்ப்பாட்டு திருப்புகழுடனும் மங்களத்துடனும் இனிதே நிறைவுற்றது.
திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரனின் மிருதங்கமும் திரு. விக்ரம் ரகுகுமாரின் வயலின் இசையும் வாய்ப்பாட்டிற்கு உயிரோட்டம் அளித்தன. குரு லதா ஸ்ரீராம், வித்யாலயாவின் சார்பாக வித்யாவுக்கு ஒரு பதக்கம் அளித்தார்.
சுருதி சொக்கலிங்கம், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |