அனைத்துலக யோகாநாள்: ஐ.நா. தலைமையகத்தில் சத்குரு
ஜூன் 20-21, 2016 நாட்களில் நியூ யார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த அனைத்துலக யோகாநாள் கொண்டாட்டத்தில் சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் தலைமையேற்று உலகநாடுகளின் பிரதிநிதிகளை வழிநடத்தினார். ஜூன் 21 அன்று 135 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற விழாவில் வரவேற்றுப் பேசிய திரு. சையத் அக்பருதீன் (ஐ.நா.வுக்கான இந்தியத்தூதர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி) பெருமெண்ணிக்கையிலான அந்தப் பங்கேற்பு யோகத்தின் ஒருங்கிணைக்கும் தன்மையைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார். பொதுச்சபையின் தலைவரான திரு. மோர்கன்ஸ் லைக்கடாஃப்ட் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். ஐ.நா. பொதுச்செயலரின் செய்தியை துணைச்செயலர் கிறிஸ்டினா கேலக் வாசித்தார்.

ஜூன் 20ம் நாள் 'யோகிகளோடு ஓர் உரையாடல் - நீடித்த வளர்ச்சி இலக்கை எட்டுவதில் யோகத்தின் பங்கு' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு. சையத் அக்பருதீன் வரவேற்புரை வழங்க, திரு. மேக்ஸ் கென்னடி (நூலாசிரியர், சூழலுரிமை ஆர்வலர்) அவர்கள் சத்குருவோடு உரையாடல் நிகழ்த்தினார்.

யோகம் உலகுக்கானது என வலியுறுத்திய சத்குரு, "தனிமனிதன் மாறாமல் உலகை மாற்றமுடியாது. இதற்கான முயற்சியாக ஐ.நா. யோகத்தைக் கையிலெடுத்திருப்பது ஒரு புரட்சிகரமான செயலாகும்" எனப் பாராட்டினார். சரியான, விஞ்ஞானபூர்வமான வழிகளில் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழநினைக்கும் ஒவ்வொருவரிடமும் யோகத்தைக் கொண்டுசேர்க்கவேண்டும் எனக் கூறினார் சத்குரு.

சத்குருவைப்பற்றி மேலும் அறிய: isha.sadhguru.org

© TamilOnline.com