டாலஸ்: உடல்நலக் கருத்தரங்கம்
ஜூன் 26, 2016 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் Children Garden Montessori வளாகத்தில் 'ஆரோக்கியம் உங்கள் கையில்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. பேரா. ரவீந்திரன் மனநலம், உடல்நலம் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைபற்றி விவரித்தார்.

முதுகுப்பிடிப்பு, தோள்வலி, கழுத்துப் பிடிப்பு போன்றவற்றால் அவதிப்பட்டவர்களுக்கு அக்குபிரஷர் மூலம் உடனடி நிவாரணம் அளித்தார். தொடர்ந்து வீட்டிலேயே சுயசிகிச்சை செய்துகொண்டு நிரந்தர நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளிலும் பயிற்சி அளித்தார். ஒருவர் கோபமடையும் போது அவருடைய நோயெதிர்ப்பு சக்தி எப்படிக் குறைகிறது என்பதை, பார்வையாளார் ஒருவருக்குக் கோபம் வரச்செய்து செய்முறை விளக்கத்துடன் காட்டினார். கோபத்தை எப்படித் தளர்த்துவது என்பதற்கான பயிற்சியையும் கொடுத்து வித்தியாசத்தை உணர்த்தினார்.

சோலார் ப்ளெக்ஸஸ் (Solar Plexus) நேராக இல்லாவிட்டால், முதுகுத் தண்டுவடம் முதல் பாதம்வரை ஏற்படும் பாதிப்புகளை விவரித்த ரவீந்திரன், பார்வையாளர்கள் பலருக்கு அதைச் சீர்படுத்தினார். உணவு ஒவ்வாமை, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு நிவாரணம் தரும் எளிய மருத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். பேரா. ரவீந்திரன், அக்குப்பிரஷர் மருத்துவத்தில் M.D. பட்டம் பெற்றவர். வேதாத்திரி மகிரிஷியிடம் யோகக்கலை பயின்று எளிய குண்டலினி யோகப் பயிற்சி தருகிறார். டாக்டர் தேவேந்திர ஓராவிடம் நேரடியாக அக்குப்பிரஷர் பயின்றார். உலக வங்கி, கொலாரோடோ பல்கலைக் கழகம் உட்பட பல்வேறு அமைப்புகளில் சிறப்புரை ஆற்றியிருக்கிறார். பெங்களூருவில் யந்த்ரா என்ற தன்னார்வ அமைப்பை நிறுவி, யோகம், அக்குபிரஷர் மற்றும் இயற்கை மருத்துவம்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நிகழ்ச்சியில் கங்கா, செல்வி மற்றும் அர்ஜுன் உதவிபுரிந்தனர். தமிழ்ச்சங்கச் செயலாளர் புகழ் வரவேற்புரை ஆற்றினார். இணைச்செயலாளர் கோமதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தலைவர் கால்டுவெல் பேராசிரியர் ரவீந்திரனின் சேவைகளைப் பாராட்டினார். தமிழ்ச்சங்க முன்னோடி ஆறுமுகம், நினைவுப் பரிசு வழங்கினார். உபதலைவர் சித்ரா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சின்னமணி,
டாலஸ்

© TamilOnline.com