சான்ஹோஸேயிலிருந்து செயல்படுகின்ற South India Fine Arts (CIFA) இந்த வருடம், ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் பிரபல வைஷ்ணவ சொற்பொழிவாளர் ஸ்ரீ உ.வே. துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசங்களை ஏற்பாடு செய்துள்ளது. இது அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு ஹிந்து தர்மத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக அமையும். இவர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உபன்யாசங்களை 12 நாடுகளில் செய்துள்ளார். இந்தியத் தொலைக்காட்சிச் சேனல்களில் இவரது சொற்பொழிவுகள் தினந்தோறும் நடந்து வருகின்றன. இவரது யூட்யூப் வீடியோக்கள் 500 மணி நேரத்துக்கும் மேல் உள்ளன. அதற்கு 3 மில்லியன் பார்வைகள் கிட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆச்சார்யர்களின் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தைக் கற்றுத்தேர்ந்த இவர், 'வேதாந்த தேசிகன்' என்னும் படத்திற்குக் கதை-வசனம் எழுதுகிறார். அதில் இவர் தேசிகராகவும் நடிக்கப்போகிறார். 'தேசிக தயா ட்ரஸ்ட்' மூலமாகப் பல நல்ல பணிகளைச் செய்துவருகிறார்.
இந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவின் 23 நகரங்களுக்குச் சென்று ஐம்பதுக்கும் மேற்பட்ட உபன்யாசங்களைச் செய்யப் போகிறார். இந்த உபன்யாசங்கள் ஆங்கிலத்தில் இருக்கும். காரணம், இந்தியர்கள் எல்லோரும் குடும்பத்தோடு, முக்கியமாக இளைஞர்களோடு, வந்து உபன்யாசங்களைக் கேட்கவேண்டும் என்பதால். இது அவரின் கோரிக்கை.
செய்திக்குறிப்பிலிருந்து |