இந்தியாவில் மோட்டார் தொழில் உலகில் உயர்ந்த இடம் வகிக்கும் டி.வி.எஸ். குழுமத்தை உருவாக்கிய டி.வி.சுந்தரம் ஐயங்காரின் மகளாக ஆகஸ்ட் 18, 1905 அன்று பிறந்தார் சௌந்திரம். இவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வாண்டில் இவருடைய வாழ்க்கை மற்றும் சாதனைகளைக் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
12 வயதில், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, சௌந்திரத்திற்கும் மருத்துவக் கல்லூரியில் சேரப்போகும் சௌந்திரராஜன் என்ற 16 வயது முறைப் பையனுக்கும் திருமணம் நடைபெற்றது. 1922-ல் சௌந்திரத்துக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து, எட்டே மாதங்களில் இறந்தும் போயிற்று. மதுரை அரசு மருத்துவ மனையில் 1925-ல் மருத்துவராய்ப் பணியாற்றிக்கொண்டிருந்த சௌந்திரராஜன் ப்ளேக் என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அச்சமயம் ப்ளேக் நோய் அவரையே பலிகொண்டது.
உயிர் பிரியுமுன் அவர் தன் மனைவியிடம் கூறியது இதுதான்: "சௌந்திரம்! என்னை நினைத்து நீ அழுது கொண்டிருக்கக் கூடாது. இறப்பதும் பிறப்பதும் இயற்கை. இந்த உலகத்தில் சாதிக்கப் பிறந்தவள் நீ. உன் படிப்பைத் தொடர வேண்டும். நீ ஒரு மருத்துவராகி, நான் விட்ட சமுதாயப் பணியைத் தொடர வேண்டும். விரும்பினால் திருமணமும் செய்து கொள். இதுவே என் விருப்பம்."
இருபது வயதில் இப்படிப்பட்ட அதிர்ச்சியைச் சந்தித்த சௌந்திரம் கணவரின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்ற உறுதி பூண்டார். குடும்ப நண்பரும் விடுதலை வீரருமான சுப்பிரமணிய சிவா அவர்களின் தூண்டுதலால், உறவினர் ஊரார் எதிப்புக்களைப் பொருட்படுத்தாமல், சௌந்திரத்தின் பெற்றோர் அவரது பள்ளிப்படிப்பைத் தொடர முழு ஒத்துழைப்பை அளித்தனர். பள்ளியில் சிறந்த மாணவியாகத் தேறிய இவர் மேற்படிப்பிற்காக டெல்லியில் லேடி ஹார்டிஞ்ச் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார். இவரது தாயார் லக்ஷ்மி அம்மாளுக்கு இவரது சாதனையில் பெரும்பங்கு உண்டு.
பிற்காலத்தில் அமைச்சர் பதவி வகித்தவரும் மகாத்மா காந்தியின் தனி மருத்துவராய்த் திகழ்ந்தவரும் ஆன டாக்டர் சுசிலா நய்யார் சௌந்திரத்துடன் மருத்துவக் கல்லூரியில் உடன் பயின்றவர். பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே பாரதியாரின் விடுதலைப் பாடல்களை ஆர்வத்தோடு கற்றிருந்த இவர் சுசிலாவின் நட்புக் காரணமாக மகாத்மா காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் வேகமும்கொண்டார். இனிமையான குரலில் அருமையாகப் பாடுவதோடு வீணை வாசிப்பிலும் பயிற்சி உடையவர். டில்லியில் இருந்தபோது அடிக்கடி மகாத்மாவைச் சந்திப்பார்.
அதே நேரத்தில் மகாத்மா நிறுவிய சேவா கிராமத்தில் நிர்மாணப் பணிகளுக்காக, தொண்டுள்ளம் கொண்ட பல பட்டதாரி இளைஞர்கள் நேரடிப் பயிற்சி பெற்றனர். அவர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்த வரும் காந்தீயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவருமான டாக்டர் இராமச் சந்திரனும் ஒருவர். இரவீந்திரரின் சாந்தி நிகேதனில் உயர்கல்வி பெற்றவர், ஆங்கிலப் புலமை மிக்கவர். அழகான ஆங்கிலத்தில் அவர் ஆற்றும் சொற்பொழிவில் மயங்காதவர்களே கிடையாது. காந்தியிடம் அவருக்கு இருந்த நெருக்கத்தால் அரசியல் உலகில் அவருக்கு நல்ல மதிப்பும் இருந்தது சென்னை அரிஜன சங்கத்தின் காரியதரிசியாகப் பணி ஆற்றிக்கொண்டிருந்தார். காந்தியைச் சந்திக்க இவர் அடிக்கடி டெல்லி வருவது வழக்கம். இதனால் சௌந்திரமும் அவரது சொற்பொழிவுகளைக் கேட்பதுண்டு. இவரைப் போன்ற ஒருவரின் துணை இருக்குமானால் தனது சமூக சேவைக்கு நல்ல ஒத்துழைப்பு இருக்கும் என்ற எண்ணம் சௌந்திரத்திற்கு ஏற்பட்டது. மறைந்த கணவரின் இறுதி விருப்பமும் உடன் நினைவுக்கு வந்தது. அப்போது அவருக்கு வயது 35. பொதுநலம் ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு வந்தார்.
இராமச்சந்திரனும் சௌந்திரத்தின் இளமைக்கால வாழ்க்கை பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிந்திருந்தார். அவரது படிப்பு, இசைஞானம், இனிய பண்பு, எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தொண்டுள்ளம் ஆகியவற்றை மனதில் கொண்டு திருமணத்தை வரவேற்றார். ஆனால் நெருங்கிய நண்பர்கள் முதல் இராஜாஜி வரை பலர் எடுத்துச் சொல்லியும் சௌந்திரத்தின் பெற்றோர் இதற்குச் சம்மதிக்கவில்லை. முடிவில் மகாத்மா காந்தி இவர்களை சேவாகிராமத்திற்கு வரவழைத்துத் தம்முடைய தலைமையில் எளிய முறையில் திருமணத்தை நடத்தி வைத்தார். வெவ்வேறு மாநிலம், தாய்மொழி, இனம் என்ற இத்தனை வேறுபாடுகளைத் தாண்டி இவர்கள் செய்துகொண்டது 60 ஆண்டு களுக்கு முன்னர் நினைத்துப் பார்த்திருக்க முடியாத புரட்சித் திருமணம்.
மருத்துவக் கல்வி முடித்து தமிழ் நாட்டுக்கு வந்த சௌந்திரம் சென்னையில் சிறந்த மருத்துவரும் சமூக சேவகியுமான டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டியுடன் சேர்ந்து ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்யத் தொடங்கினார். இதற்காக, போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்குப் பல மைல்கள் நடந்தே போவார். இராமச்சந்திரன் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஆசிரியர் பதவி ஏற்றார்.
காந்தி கிராமம் பிறந்தது
1944-ல் காந்திஜியின் 75-வது பிறந்த நாள் பரிசுக்காகத் திரட்டப்பட்ட நிதிவசூல் 125 லட்சத்தை எட்டியது. கவிக்குயில் சரோஜினி இதை மகாத்மாவிடம் கொடுத்தபோது அந்தத் தொகையை மறைந்த தம் மனைவி கஸ்தூரிபா காந்தி நினைவாக ஓர் அறக்கட்டளை ஆரம்பித்து, கிராமங்களிலுள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வி மருத்துவம், சுயதொழில் ஆகியவற்றிற்குப் பயன்படச் செய்யும்படிக் கூறினார் காந்திஜி.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சவால்களைத் தயக்கமின்றி ஏற்றல், அனைவரையும் அரவணைத்துச் செல்லுதல், பம்பரம்போல் சுழன்று கடமைகளை ஆற்றுதல் போன்ற பல பண்புகளைப் பெற்றிருந்த சௌந்திரத்திடம் காந்திஜியின் வேண்டுகோள் நல்ல பலனை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி அருகிலிருந்த லகுமையா என்பவருக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் சௌந்திரத்திடம் அளிக்கப்பட்டது. காந்தி கிராமம் இங்கேதான் உருவானது.
தொழில் அதிபரின் மகளாகப் பிறந்து, செல்வச் செழிப்பில் வளர்ந்தும் டம்ளரில் கஞ்சியை வாங்கிக் குடித்தபடியே கல்லையும் சாந்துச் சட்டியையும் தலையில் சுமந்து சக தொழிலாளர்களுடன் சேர்ந்து உடல் உழைப்பைத் தந்தார் சௌந்திரம். 1947-ல் பம்பாய் முதல்வர் பி.ஜி.கெர் அவர்கள் தொடங்கி வைக்க காந்தி கிராமம் பிறந்தது. காந்தியின் அறக்கட்டளை நிதி உதவியுடன், ஜாதி சமய பேதமற்ற சமுதாயம் உருவாக்க, அஹிம்சை, உடல் உழைப்பு இவைகளைக் குறிக்கோளாய்க் கொண்டு ஏற்படுத்திய இக்கிராமத்திற்கு 'காந்தி கிராமம்' என்றே பெயர் வைத்தார். ஆரம்பத்தில் காந்திஜி அறிமுகப் படுத்திய தொழிற்கல்வியை அடிப்படையாகக் கொண்ட வார்தா கல்வித்திட்டமென்னும் ஆதாரக்கல்வி போதிக்கும் பள்ளியாக உருவெடுத்த காந்தி கிராமம் 1976-ல் பல்கலைக் கழகமாக உயர்ந்து இன்று நிகர்நிலை அந்தஸ்தைப் பெற்றுள்ளது (Deemed University). இங்குள்ள கட்டிடத்தின் ஒவ்வொரு கல்லும், செழுமை யாய் வளர்ந்து நிற்கும் செடி கொடி மரங்களும் சௌந்திரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.
சாதனைகள்
சௌந்திரம் அவர்களின் சாதனைகள் நான்கு வகைப்படும்: 1. காந்தி கிராமம்; 2. கிராம மக்கள் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள்; 3. சட்டமன்ற உறுப்பினராகச் செய்த பணிகள்; 4. மத்திய அமைச்சின் கல்வித்துறையில் ஆற்றிய பணிகள். இவற்றின் கூறுகளைச் சற்றே பார்க்கலாம்.
முதியோர் கல்வி
அரசு ஆரம்பித்து நடத்துவதற்கு முன்பாகவே அரசின் உதவியின்றி கிராமங்களில் முதியோர் கல்விப் பயிற்சியைத் தொடங்கினார். குடும்பநலன், குழந்தை வளர்ப்பு, சுகாதாரம் ஆகியவை குறித்த சமூகக் கல்வி வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தினார்.
சாந்தி சேனை
புயல், வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும் நேரத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், சமுதாயப் பணி செய்வதற்கும் ஆண் பெண் இருபாலரையும் கொண்ட சாந்தி சேனை என்ற அமைப்பை உருவாக்கினார். இவர்களுக்கு வெள்ளைச் சீருடையும் கதர்க் குல்லாயும் தரப்பட்டன. முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் முதன்முதலாக தலையில் கதர் குல்லா அணிந்தது காந்தி கிராமம் வந்தபோதுதான்.
சௌபாக்ய இல்லமும் சேவிகாசிரமும்
ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க சௌபாக்ய இல்லமும் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காகச் சேவிகாசிரமமும் ஆரம்பித்தார். சந்தர்ப்பச் சூழலால் வாழ்விழந்த பெண்கள் தற்கொலை முயற்சி மேற்கொள்வதிலிருந்து அவர்களைத் தடுத்து அடைக்கலம் கொடுத்ததோடு அவர்கள் சுமக்கும் குழந்தைக்கும் ஆதரவு கொடுத்தார். 1700க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆதரவு தந்த அன்புத் தாயாக இவர் சேவிகாசிரமத்தில் ஆற்றிய பணிக்காக 1962-ல் இந்திய ஜனாதிபதி பாபு இராஜேந்திர பிரசாத் அவர்களால் பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டது.
கிராம முன்னேற்றம்
பிற்பட்ட கிராமங்களில் ஆழ்கிணறு தோண்டுதல், சாலை அமைத்தல், மின்சாரம், குடிநீர் வசதி, தாய்சேய்நல அமைப்பு, குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள், ஆரோக்ய மையங்கள், பால்வாடிகள், தொழில் துவங்கக் கடன் வசதி ஏற்பாடு, தொழிற்பயிற்சி மையங்கள், நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், விவசாயக் கூட்டுறவுச் சங்கம், நிலமற்றோர்க்கு கறவை மாடுகள் வாங்க அரசுடைமை வங்கிகள்மூலம் கடன் உதவி, விரிவாக்கப் பணியாளர்களைக் கொண்டு கிராமப்புறப் பணிகளில் உதவுதல், 'மகளிர் மன்றம்' அமைத்து அதன் மூலம் பெண்கள் தன்னம்பிக்கை, பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனப்பக்குவம் பெறுதல், சுற்றுப்புற சுகாதாரம், வீட்டுத் தோட்டம், கால்நடைப் பராமரிப்பு ஆகிய வற்றில் பயிற்சி அளித்தல், அம்பர் ராட்டையில் நூற்கப் பயிற்சி கொடுத்து அதன் மூலம் துணித்தேவையில் கிராமங்கள் தன்னிறைவு அடைதல், சாயம் தோய்க்கவும் அச்சுப் பதிக்கவும் சாயப் பட்டறை, கதர் உற்பத்தி நிலையங்கள், எல்லா உற்பத்தி நிலையங்களுக்கும் பொதுவான விற்பனை மையங்கள் அமைத்தல் போன்ற அனைத்து வகைகளிலும் கிராம முன்னேற்றங் குறித்த இவரது அயரா உழைப்பு ஈடு இணையற்றது.
'காதி பவன் மற்றும் கிராமக் கைத்தொழில் பொருட்கள் விற்பனை நிலையம்' என்ற பெயரில் சௌந்திரம் அவர்கள்தான் முதன் முதலாக ஆரம்பித்து வைத்தார். தானே கதர்ப் புடவைகளுக்கு டிசைன் வரைந்து கொடுத்து நெசவு செய்யச் சொல்வார். தறியில் நெய்து வரும் மூன்று புடவைகளில் ஒன்று தனக்கு, ஒன்று பாரதப் பிரதமர் இந்திராகாந்திக்கு, மூன்றாவது தமிழக உள்துறை அமைச்சராயிருந்த பக்தவத்சலம் அவர்களின் மனைவிக்கு (அவர் கதர் மட்டுமே கட்டுவார்), என்று எடுத்து வைப்பாராம். இந்திராகாந்தி தன் வாழ்நாள் முழுவதும் சௌந்திரத்திடம் தான் கதர்ப் புடவைகளை வாங்கிக் கட்டியிருக்கின்றார்.
கிராமக் கைவினைப்பொருட்கள்
1947-ல் காந்தி கிராமத்தில் கிராமக் கைத்தொழிற்கூடம் ஒன்றைத் தொடங்கினார். இங்கே காகிதம், செக்கில் எண்ணெய், தேனீ வளர்ப்பு, பொம்மைகள், மண் பாண்டங்கள், சலவை மற்றும் குளியல் சோப், பாய், பனை ஓலைப்பொருட்கள் ஆகியவை செய்யப்பட்டன. தன் தாயார் பெயரில் லக்ஷ்மி சேவா சங்கம் என்ற அமைப்பின் மூலம் கிராமப் பெண்களுக்கு 'சக்தி மால்ட்' என்ற சத்து மாவு தயாரிக்கவும், கைக்குத்தல் அரிசி மற்றும் அவல், சமையல் பொடி வகைகள் தயாரித்தல் போன்றவற்றில் பயிற்சி அளித்து கிராம சுயவேலை வாய்ப்புக்கும் வருமானத்திற்கும் வழி வகுத்தார். ஒரே குடிசையில் ஆரம்பித்த இந்தத் தொழில்கள், நாளடைவில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவுக் கட்டிடம் அமைந்த ஒரு தொழிற்கூடமாகப் பெரிதாயிற்று. 1956-ல் கிராமத்தொழில் வளர்ச்சிக்கு டாக்டர். ஜெ. ஸி. குமரப்பா அவர்கள் ஆற்றிய தொண்டினை மனதில் கொண்டு 'குமரப்பா கிராமத் தொழிற்கூடம்' என இதற்குப் பெயர் சூட்டினார்.
சௌந்திரம் அவர்கள் இத் தொழிற்கூடத்தில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தச் சுமார் 150 வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் அவர்களே வீடு கட்டிக்கொள்ள அரசுடைமை வங்கிகளிடம் கடன் பெற வழி செய்தார். ஊழியர்களே இந்த அறக்கட்டளையை நிர்வாகம் செய்ததால் நிர்வாகத்தின் லாபத்திலும் பங்கு பெற்றனர். கறவை மாடு வைத்திருப்பவர்கள் விற்கும் பாலைக் கூட்டுறவுச் சங்கங்கள் வாங்கி திண்டுக்கல் மாவட்டத்தின் அருகிலுள்ள வேடசந்தூரில் பால்கோவா தயாரிக்கப்பட்டு காதி மற்றும் கிராமக் கைவினைப்பொருள் மையங்கள் வழியே விற்கப்பட்டது.
காந்தி கிராமம் அருகில் உள்ள சிறுமலை என்ற மலைப்பகுதியில் நிரந்தர வருவாய் இல்லாமல் வறுமையில் வாடும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்புத்தந்து அம்மலையில் கிடைக்கும் கணக்கற்ற மூலிகைகளைச் சேகரிக்கச் செய்து 'சௌந்திரராஜன் பண்ணை' என்று 250க்கும் மேற்பட்ட சித்த ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் மையம் ஒன்றைத் தன் கணவர் பெயரில் நிறுவினார். இவரது இத்துணை ஆக்கப் பணிகளால் 1960-61ல் ஒரே ஆண்டில் 20,000 கிராம மக்கள் வேலை வாய்ப்பைப் பெற்றனர்.
இவரது தலையாய பணி கிராம மருத்துவ சேவையாகும். சென்னை அடையாறில் 1943-ல் செய்ததைப்போலவே கிராமங்கள் தோறும் சென்று தாய்மார்களின் நலன், கர்ப்பிணிப் பெண்களின் நலன், குழந்தைகள் நலன், பொது சுகாதாரம், குடும்பநலம் என்று சேவை செய்தார். இதே சேவையை காந்தி கிராமத்திலும் 'கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி' என்ற பெயரில் ஒரு வீட்டில் ஆரம்பித்தார். பின் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே 1950-ல் 22 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவ மனை உருவாயிற்று. நோயாளிகளின் வருகை மிகவும் அதிகரிக்கவே, அமெரிக்க நாட்டின் பொது நிறுவனங்கள் சிலவற்றின் நிதியுதவி, பொதுமக்கள் நிதியுதவி, வங்கிகளிடம் கடன் உதவி ஆகியவை பெற்று 1957-ல் 100 படுக்கைகள் கொண்ட 'கஸ்தூரிபாய் மருத்துவமனை' உருவானது. இது இன்று 200 படுக்கைகள் கொண்டதாக வளர்ந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினராக
சௌந்திரம் அவர்கள் சட்டமன்றத்தில் உறுப்பினராயிருந்த 10 ஆண்டுக் காலத்தில் தமிழ் நாட்டில் கனரகத்தொழிற்கூடங்கள், பரம்பரை கைத்தொழில்களில் ஈடுபட்டிருந் தோர் நலன், கிராமப்புறங்களில் சிறு கைத்தொழில்கள் போன்ற பல்வேறு நிலைகளிலும் அரசு உதவி கோரி குரல் எழுப்பினார். தஞ்சை மாவட்டத்தில் வெண்கலவார்ப்புத் தொழில், சேலத்தில் அலுமினியத்தொழிற்சாலை, தனியார் நிறுவனங்கள் துவக்கும் மின்சார உற் பத்திக்கு அனுமதி, கதர் மற்றும் கைத்தறித் துணிகளுக்குச் சலுகைகள், விவசாயிகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மானியம், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற ஆக்க பூர்வமான வேண்டுகோள்களை சட்டசபையில் வலியுறுத்தியது இவர் பொதுமக்கள் நல்வாழ்வில் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகின்றது.
பெண்கள் நலனில் அக்கறை கொண்டு இவர் முன்மொழிந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அரசு இவரையே தலைவராக்கி 'ஆலோசனைக் குழு' ஒன்றை நிறுவியது. பெண்களின் நலனுக்கென்று தனி இலாகா ஒன்றையும் ஏற்படுத்தி நிரந்தரமாகச் செயல்படவைத்தார் இவர். பஞ்சாயத்தில் பெண்களுக்கு 50 விழுக்காடு பிரதிநிதித் துவம் அளிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
மாநிலம் முழுவதும் திக்கற்ற பெண்களுக்குத் தற்காப்பு இல்லங்கள் அமைக்கப் படவேண்டும் என்று வாதாடினார். பெண் களின் திருமண வயது 18 என நிர்ணயிக்க வேண்டும் என்ற இவரது கோரிக்கை சட்டம் ஆனது. பெண்களைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் மானத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றப் போலீசார் பெண் சேவகியையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்றும், தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்களைத் திருத்தி நல்வழிப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் இவர் கூறிய ஆலோசனைகள் செயல் படுத்தப்பட்டன.
பாலியல் வன்முறைக்கு உட்பட்ட பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் இடம் மறுக்கக் கூடாது; தாய் விரும்பவில்லை என்றால் தகப்பனார் பெயரைக் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது, விண்ணப்பப் படிவங்களில் தகப்பனார் பெயருக்கான இடம் காலியாகவே விடப்பட வேண்டும் என்றும், 'சமூகத்தால் ஊனமாக்கப்பட்டவர்கள்' என்ற பிரிவில் இவர்களைச் சேர்த்து அரிசனங்களுக்குக் காட்டப்படும் அத்தனை சலுகைகளும் இவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற இவரது பரிந்துரைகள் சட்டமாயின.
காந்தி நினைவாலயம்
1948-ல் மகாத்மா காந்தியின் மறைவிற்குப் பின் அவருக்கு வட இந்தியாவில் சபர்மதி, சேவாகிராமம், டெல்லி மற்றும் தென் இந்தியாவில் ஒன்றும் என நான்கு நினைவாலயங்கள் அமைக்கத் தீர்மானம் நிறைவேறியது.
அரிசனங்களைக் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்ற காந்திஜியின் பிரசாரத்தை ஏற்றுத் தென்னிந்தியாவில் முதன்முதலில் அதைச் செயல்படுத்திய பெருமை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்பதை எடுத்துக்காட்டி, நினைவாலயம் மதுரையில் அமைக்கப்படவேண்டும் என்று எடுத்துக் கூறினார். முதல்வர் காமராஜர் மூலம் இராணி மங்கம்மாள் கோடைக்கால அரண்மனையை நினைவாலயத்திற்கான நன்கொடையாகப் பெற்று, 1959-ல் நினை வாலயம் இதில் திறக்கப்பட்டது.
மத்திய அரசின் கல்விஅமைச்சராக
1962-ல் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முறையிலேயே அமைச்சர் பதவியும் பெற்ற பெருமைக்குரியவர் இவர். கல்வி இலாகாவில் முதல் சாதனையாக, எல்லா மாநிலங்களிலும் ஆரம்பக்கல்வியை இலவசமாக்கினார். அடுத்து, மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் பள்ளிக்கூடங்கள் கட்டி, மத்திய அரசு அதிக நிதியை இவர்களுக்காக ஒதுக்கி இலவச உணவு, உடை, நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தாய் மொழி யிலேயே புத்தகங்கள் அச்சிட்டுத் தரப்பட வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வந்தார்.
இதேபோல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்தார். இந்தியாவில் 8 நகரங்களில் ஊனமுற்றவர் களுக்கெனத் தனி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. இந்தியா முழுவதிலுமுள்ள கல்லூரிகள் தொழில் நுட்பக்கல்லூரிகளில் ஒரே விதமான பாடதிட்டம் அமுல் செய்யப்படவேண்டும் என்றும் இங்கு திறமையான தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்க 'இந்தியக் கல்விப் பணிக்குழு' ஏற்படுத்தவேண்டும் என்றும் இவர் கூறிய பரிந்துரை எல்லா மாநிலங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர் உருவாக்கிய 'தேசிய நாட்டுநலப் பணித் திட்டம்' இன்றுவரை செயல்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் உயர்கல்வி பெற விரும்பும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்விச்சலுகை போன்ற திட்டங்களையும், சிறந்த கல்வியாளர்களை வெளிநாட்டுக் கருத்தரங்குகள், ஆய்வுக் கூட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான நிதியைப் பல்கலைக்கழக மானியக் குழு வழியே வழங்கவும் வகை செய்தார்.
இராணுவ வீரர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் அவர்களின் குழந்தை களின் கல்வி கெடாமல் இருக்க இந்தியா முழுவதிலும் 25 பள்ளிகளைத் தொடங்கினார்.
குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்க்கும் பங்கு உண்டு என்பதை மனதில் கொண்டு பெற்றோர்-ஆசிரியர் சங்கம் தொடங்குவதின் அவசியத்தை முதலில் வலியுறுத்தி, அரசு ஆணை பிறப்பிக்கச் செய்தவர் இவரே.
1984 அக்டோபர் 21-ம் நாள் இவ்வுலகை நீத்த சௌந்திரம் அவர்கள் காந்தி கிராமத்திலே பார்வை இழந்த ஒருவருக்குத் தன் கண்களைக் கொடுத்ததன் மூலம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
கட்டுரை:முனைவர் அலர்மேலு ரிஷி தகவல் உதவி:டாக்டர் சரோஜினி வரதப்பன் |