மினசோட்டா தமிழ்ப்பள்ளி: இருமொழிமுத்திரை
தாய்மொழிக்கல்வியின் தேவையை உணராமல் ஆங்கிலச்சுழலில் சிக்கிகொண்டதின் விளைவை இன்று பல இனங்கள் உணரதொடங்கியுள்ளதின் எதிரொலியாகவே UNESCO போன்ற அமைப்புகள் தாய்மொழிக்கல்வியின் அவசியத்தைப் பரப்புரைசெய்யத் தொடங்கின.

புலம்பெயர்ந்தோர் நிரம்பிய அமெரிக்காவில் ஆங்கிலம் தவிர வேறோரு மொழியை முறையாகக் கற்பதற்கான சட்ட திட்டங்களை வகுத்து, அதற்கான சலுகைகளையும் 20 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதில் மிகமுக்கியமானது இருமொழி முத்திரை வழங்கும் திட்டம். நாட்டின் மொழித்திறன் கோட்பாடுகளை வகுக்கும் ACTFL (American Council for Teaching Foreign Language) கழகத்தின் மதிப்பீட்டு முறைகளை ஒட்டி, அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களின் மொழியறிவினைச் சோதித்துத் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் தான் 'இருமொழி முத்திரை' திட்டம்.

இதுவரை தமிழிற்கென இம்முத்திரையைப் பெறவில்லை என்ற குறையைப் போக்கியுள்ளனர் மினசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளி மாணவியர் இருவர். வைசாட்டாப் பள்ளியில் 11ம் வகுப்புப் படிக்கும் மாணவி ஜானிஸ் பெஞ்சமின் பள்ளியில் ஃபிரெஞ்சு மொழியும், தமிழ்ப்பள்ளியில் 8 ஆண்டுகளாகத் தமிழும் கற்கிறார்; ஈடன்ப்ரைரி மாவட்டப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் லக்ச்கன்யா பள்ளியில் ஃபிரெஞ்சு மொழியும் தமிழ்ப்பள்ளியில் ஏழு ஆண்டுகளாகத் தமிழும் படிக்கிறார். இருவரும் பென்சில்வேனியா பல்கலைகழகத்தின் பேரா. வாசு ரெங்கநாதன் அவர்களால் மதிப்பிடப்பட்டுத் தேர்ச்சியடைந்து இம்முத்திரையைப் பெற்றுள்ளனர்.

ஜூன் 11, 2016 அன்று மினசோட்டா தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளியின் ஆண்டுவிழாவில் மினசோட்டா கல்வித்துறையின் உலகமொழிக் கல்விக்கான சிறப்பு அதிகாரி உருசுலா லென்ட்ஸ் இவ்விரு மாணவர்க்கான இருமொழி முத்திரைபற்றி அறிவித்ததோடு, சிறப்புச் சான்றிதழும் முத்திரையும் இவர்களுக்கு வழங்கிக் கவுரவித்தார். இதன்மூலம் அம்மாநிலக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கூடுதல் தகுதியும், உலகமொழிக்கான மதிப்பீட்டுப் புள்ளிகளை (World language credits) மூன்றுமுதல் நான்கு பருவங்களுக்குப் பெறமுடிவதால் இவர்கள் கல்லூரிக் கட்டணத்தில் சேமிப்பும் இவர்களுக்குக் கிட்டுகிறது.

தமிழ்மொழிக் கல்வியென்பதை உணர்வுபூர்வமாக மட்டும் எண்ணாமல் நம் சிந்தனை மொழியான தமிழில் புலமை பெறுவதன்மூலம் வலிமையான அறிவார்ந்த அடுத்த தலைமுறையைக் கட்டமைக்க முடியும். இதற்கு முதற்படியாக 'இருமொழி முத்திரையை' தமிழ் இளையோரிடையே கொண்டுசேர்ப்பது நம் கடமையாகும். தாய்மொழி கொள்ளும் புலமை, சுயத்தை இழக்காமல் வாழவும் வழிவகுக்கிறது.

மினசோட்டா மாநிலத்தில் 2008ம் ஆண்டு 11 மாணவர்களோடு தொடங்கிய 'மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி' தமிழ்க்கல்வியை அறிவுபூர்வமாக ஆராய்ந்து பாடத்திட்டங்களைக் கட்டமைத்துள்ளது. இன்று 250க்கும் மேற்பட்ட மாணவர்களோடு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பள்ளி தமிழ்மொழிக் கல்விக்கான தரத்தினைத் தொடர்ந்து கூட்டி வருவதோடு, தமிழ்க் கல்விக்காக 2014ல் AdvancEd தரச்சான்றிதழும் பெற்றுள்ளது.

சௌந்தர் ஜெயபால்,
மினசோட்டா

© TamilOnline.com