உலகத் திரைப்பட விழாவில் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்று ரெமி விருது. முதன்முறையாக இந்தியாவுக்கு, அதுவும் ஒரு தமிழ்ப்பட இயக்குநருக்கு, இவ்விருது கிடைத்திருக்கிறது. தான் இயக்கிய 'கனவு வாரியம்' என்ற படத்திற்காக இதைப் பெற்றிருக்கிறார் அருண். எம்.எஸ். பட்டதாரியான இவர் ஒரு கவிஞரும்கூட. 'முயற்சியை மூச்சாக்கு' என்பது இவரது கவிதை நூல். அப்துல்கலாம் அவர்களால் சிலாகிக்கப்பட்ட கவிதை இவருடையது. சில ஆண்டுக்காலம் அமெரிக்காவில் நல்லபதவி வகித்த இவர், தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களின் விநியோகஸ்தரும் கூட. சினிமாக் காதலால் வேலையை உதறிவிட்டு 'கனவு வாரியம்' திரைப்படத்தை எடுத்தார். மின்வெட்டால் பாதிக்கப்படும் தமிழக கிராமவாசிகளின் வாழ்க்கை; அதை மீட்க உழைக்கும் இளைஞனின் கண்டுபிடிப்பு என இவரது கனவு வாரியம் விரிகிறது. உயர்ந்த இசை மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் தந்திருப்பதற்காக இந்த விருது கிடைத்திருக்கிறது.
ஹூஸ்டனில் ஏப்ரல் 8 முதல் 17 வரை நடைபெற்ற 49வது சர்வதேச (49th Annual WorldFest-Houston International Film & Video Festival) விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முன்னரே இப்படம், மும்பையில் நடைபெற்ற தேசிய அறிவியல் திரைப்பட விழாவில் சிறந்தபடத்துக்கான விருதைப் பெற்றது. படத்தில் இடம்பெறும் "கல்லா மண்ணா ஆடலாம்" என்ற பாடலில், தமிழ்ப் பாரம்பரியத்தில் இருந்து மறைந்து போன 54 கிராமிய விளையாட்டுக்களை வரிகளிலும், காட்சிகளிலும் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. படத்தின் இயக்கத்திற்காக பிளாட்டினம் ரெமி விருதும், பாடலுக்காக சில்வர் ரெமி விருதும் பெற்றுள்ளார் அருண் சிதம்பரம். இதுவரை இவ்விருதினை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லூகாஸ், ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா, ஆங் லீ போன்ற உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களே பெற்றுள்ளனர். அருண் சிதம்பரத்திற்கு வாழ்த்துக்கள்! |