"நல்ல லட்சியம். கண்டிப்பா என்னோட, எங்க குழுவோட ஆதரவு உண்டு. தொடர்ந்து செய்யுங்க. உங்க நல்ல உள்ளமும், சிந்தனையும் போற்றத்தக்கது. வருகிற திருவிழாவுல இதுபத்தி நானே பேசறேன்" என்று சொல்லி அனுப்பினாலும், வராகமூர்த்தியின் நெஞ்சினுள் வக்கிரம் உயிர்த்தெழுந்தது. "நேத்து மொளச்ச பய… சமூகசேவையாம்ல சமூகசேவை! இத்தன வருசமா பண்ணுற எங்களயே இன்னும் யாருக்கும் தெரியல…" உக்கிரம் அடைந்தது வக்கிரம்.
"வைகாசி விசாகம் தேர் அன்னைக்கு ஊரக்கூட்டி சொல்றேனு சொல்லிட்டாரு… ஊர்ப்பெரிய மனுசன்னா இப்படித்தான் இருக்கணும்" மிகுந்த பெருமிதத்துடன், வந்தவர்களோடு திரும்பினான் மச்சக்காளை.
திருவிழாவுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், ஒருநாள்… "ஐயா, இந்த வருஷம் யாருக்கெல்லாம் விருது கொடுக்கணும்னு அறங்காவல்துறையில இருந்து கேட்டுருக்காக. பத்துப்பதினஞ்சு நாளுக்கு முன்னாடியே சொல்லிரணுமாம்" என்றார் வேலுத்தம்பி, வராகமூர்த்தியின் வலதுகை.
அம்மன்கோயில் மண்டபத்தில் அமர்ந்து, குளுகுளு காற்றை அனுபவித்தபடி, நனைந்த வெற்றிலையை தன்மடியில் இருபுறமும் துடைத்தெடுத்து, சுண்ணாம்பு, பாக்கு வைத்து அலங்கரித்து, வாயினுள் போட்டுக்கொண்டிருந்தார் வராகமூர்த்தி அப்போது. வேலுத்தம்பிக்கு பதிலளிக்க… கொழகொழ எனப் பேச்சுவரவே அடக்கிக்கொண்டு, கைகளால் 'சற்றுப்பொறு' எனச் சைகைசெய்தார். இந்த நேரத்தை, தான் சிந்திப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டார்.
'இப்படி வந்து இந்தப் பக்கமா உட்கார்' எனச் சைகையைத் தொடர்ந்தார். அவர் காட்டிய பக்கத்தில், பணிவாக அமர்ந்துகொண்டார் வேலுத்தம்பி. சுற்றிலும் பார்வையை ஓடவிட்டார் வராகமூர்த்தி. உணவுக்குப் பின்னான மதியவேளை ஆகையால், மண்டபத்தில் ஆங்காங்கே சிலர் தூண்களுக்கு வாகாக அமர்ந்து சயனத்தில் இருந்தனர். சாமியார் கோலத்தில் அமர்ந்திருப்பவரின் இடத்தில் திருவோடு மட்டும் இருந்தது. காலார நடை போயிருக்கலாம். இந்நேரம் வெற்றிலையை நன்கு மென்று வாயில் ஒருபுறம் வைத்துக்கொண்டு பேச ஆயத்தமானார். மெதுவாக வேலுத்தம்பியிடம் ஆரம்பித்தார் வராகமூர்த்தி. "இப்போதைக்கு ஊருக்குள்ள எவன்லாம் பிரச்சனை பண்றான்? என்னவெல்லாம் சொல்லிப் பிரச்சனை பண்றான்? என்ன செஞ்சா சும்மா இருப்பானாம்?" என்று அடுக்கினார் கேள்விகளை. அப்புறம், வராகமூர்த்தி சொல்லச்சொல்ல, காராம்பசுவின் கழுத்துமணிபோலத் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக்கொண்டார் வேலுத்தம்பி.
திருவிழா நாளும் வந்தது. மாக்கோலம், பூக்கோலம் எல்லாம் தெருவெங்கும் படர்ந்திருக்க களைகட்டியது ஊர். திருவிழாக் கோலாகலம் ஊரெங்கும் ஒலித்தது ஒலிபெருக்கிகளில். சர்பத் கடைகளும், பழக்கடைகளும், குடைராட்டினங்களும், முடைபொருட்களும், மண்பாண்டங்களும், வளையல் கடைகளுமாக நிரம்பியிருந்தது கடைத்தெரு. பலவித அலங்காரங்களில் அம்மன் பத்துநாளும் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
"இருபதாயிரமாம் இந்த வருசக் கூட்டம்" என்றும், "போன வருசத்தோட இந்த வருசம் ஏகப்பட்ட சனம்ப்பூ" என்றும் ஆளாளுக்கு வியந்து நகர்ந்திருந்தார்கள். பலாப்பழக் கடையிலிருந்து வந்த வாசனை பல ஊர்களை எட்டியிருக்கும். தேர் நிலை குத்தியிருந்தது. நீண்டு தரை பரவியிருந்த வடங்களைக் குனிந்து வணங்கிச் சென்றனர் அனைவரும். "கீங்…….." என காதுகிழிக்க எழுந்த ஒலியின் பின்னே, மண்டபத்து மேடையில் தனது பேச்சைத் துவங்கினார் வராகமூர்த்தி.
"மச்சக்காளையின் பொதுப்பணியைப் போற்றும் வகையில், மச்சக்காளைக்கு அம்மன் கோயில்ல மணியக்காரர் பதவியைத் தந்து, ஆயிரம் ரூபாய் சன்மானமும், இந்தப் பொன்னாடையையும் போர்த்த அறங்காவலர் பொன்னுசாமி ஐயாவை அன்போடு அழைக்கிறேன்" என்று முடித்துக் கொண்டார் வராகமூர்த்தி.
ஊர்கூடித் தன் பெயர் அழைத்துக் கௌரவித்ததில் அனைத்தையும் மறந்திருந்தான் மச்சக்காளை. மேடைக்குச் சென்றதும் சரி, பொன்னாடை போர்த்தப்பட்டதும் சரி, எதுவுமே அறியவில்லை அவன். மெய்மறந்திருந்தான். "என்னாச்சு" என்று மயக்கம் தெளிந்து எழுந்தவர் கேட்பது போலவே, தன் நண்பர்களிடம் கேட்டுக்கொண்டான் மேடையில் தன் நிலைப்பாட்டை.
இவனோடு சேர்ந்த சமூக ஆர்வலர்களில் சிலர், ஒரு நாள் மச்சக்காளையிடம், "ஏம்ப்பூ, மறந்தேபோயிட்டியா. சிவன் கோயில பாதுகாத்து பராமரிக்கற வேல அப்படியே நிக்குதே. யோசிச்சியா?" என்று வந்தனர்.
"இங்ஙன வேல ஜாஸ்த்தியா இருக்குப்பூ. நானும் யோசிச்சுப் யோசிச்சுப் பார்த்தேன், எனக்கென்னவோ சிவன் கோயிலப் பராமரிக்கறது இப்போதைக்கு வேணாமுனு தோணுது. எத்தனையோ வருசமா சும்மாதான கெடக்குது. கொஞ்சநாள் கழிச்சு அதப்பத்தி யோசிப்போம். நெறயா வேல கெடக்கு.." என்று பேச்சோடு பேச்சாக நடையைக் கட்டினான் மச்சக்காளை அங்கிருந்து.
சதங்கா, பென்டன்வில், அர்க்கான்சாஸ் |