மனசாட்சியின் குரல் பெரியதாக இருந்தால்...
எனக்குத் தமிழ் படிக்க தெரியும். எழுதத் தெரியாது. என் பெண்ணை விட்டு எழுதச் சொல்கிறேன்.

நான் லக்னௌவில் பிறந்து டெல்லியில் வளர்ந்து, முறையாகத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்று, பிறகு வாழ்க்கையில் சூடுபட்டவள். 18 வயதில் திருமணம். படிப்பறிவு அதிகம் இருக்கவில்லை. அதைப் பயன்படுத்தி, என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு, என்னை விவாகரத்து செய்துவிட்டு, வெளிநாட்டுக்குப் போய்விட்டார் என்னுடைய கணவர்.

அப்போது எனக்கு வயது 23. பையனுக்கு வயது 3, பெண்ணுக்கு 1. சென்னையில் வேலையிலிருந்த என் சகோதரன் அங்கே அழைத்துச் சென்றான். மறுபடியும் படிக்கத் தொடங்கி, கல்லூரிக்குச் சென்று எம்.ஏ. ஆங்கிலம் முடித்து ஆங்கில ஆசிரியராக மீண்டும் வாழ்க்கையை ஆரம்பித்தேன்.

அந்தக் காலகட்டத்தில் என் மகளின் நெருங்கிய சிநேகிதன் (தாயை இழந்தவன்) அடிக்கடி என் வீட்டுக்கு வருவான். எப்போது வந்தாலும் அவனை மிகவும் அன்பாக நடத்தி, சாப்பாடு போட்டு அனுப்புவேன். அவனும் என்னிடம் மிகவும் ஆசையாக இருப்பான். இதற்கிடையில் எங்கள் நண்பர் ஒருவரின் குடும்பமும் அந்தப் பையனை ஆதரித்து கவனித்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள்தான் அந்தப் பையனின் தந்தையையும், என்னையும் சந்திக்க வைத்து எங்கள் இரண்டாவது திருமணத்தை முடித்து வைத்தனர்.

முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இவருக்கு கோபம் வரும். இருந்தாலும் அனுசரித்துக் கொண்டு போய்விடுவேன். குழந்தைகள் ஒற்றுமையாக நல்லபடியாகத் தான் வளர்ந்தார்கள். ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் என் மகளைப் பாசமாகப் பார்ப்பது போல், என் மகனை அப்படி நடத்துவதில்லை என்ற உணர்வு பொறி தட்டிக்கொண்டே இருக்கும். பல சம்பவங்கள் இதை ஊர்ஜிதம் செய்வதுபோல இருந்தன. அவருக்கும், என் மகனுக்கும் இடைவெளி பெரிதாகப் போய், அவன் பள்ளிப்படிப்பை முடித்தவுடனே, வெளியூரில் படிப்பைத் தொடர்ந்து, அப்படியே இங்கே வந்து செட்டில் ஆகிவிட்டான்.

ஒரு தமிழ்ப் பெண்ணையும் (என் இரண்டாவது கணவர் தமிழர்) திருமணம் செய்து கொண்டு விட்டான். என் மகளும் என் கணவரின் விருப்பப்படி முறையாகத் திருமணம் செய்து கொண்டு இங்கே வந்துவிட்டாள்.

அந்த மகனுக்கு அப்பாவைப் போல் பிசினஸ் ஆர்வம். ஆகவே, அவருடன் சேர்ந்து தொழிலைப் பெருக்க ஆரம்பித்தான். திருமணம் ஆகி, நான், என் கணவர் என்று எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். தொழில் பெருக்கம் காரணமாக டெல்லிக் குக் குடிபெயர்ந்தோம். அங்கே அவர் பார்க்கின்ஸன் நோயினால் அவதிப்பட ஆரம்பித்தார். எனக்கு ஏற்கெனவே டயபாடீஸ். ஆர்த்ரைடிஸ் வேறு சேர்ந்து கொண்டது. தன்னுடைய நோயினால், தொழிலைத் தொடர முடியாது வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினால் அவருடைய இயலாமை உறுத்த, கோபம் அதிகரித்துவிட்டது. நானும் எவ்வளவோ பொறுமையுடன் அவரை கவனித்து வந்தேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் ஏதோ செய்யத் தவறியதால், என் கைவிரல்களைப் பல்லால் கடித்து விட்டார். விரல் துண்டாகும் அளவுக்கு ரத்தம், சேதம். டாக்டரிடம் சென்ற போது ''உங்கள் பாதுகாப்பின் பொருட்டு நீங்கள் அவரைப் பிரிந்திருப்பது நல்லது" என்று சொல்லிவிட்டார். அவருடைய மகனும், மருமகளும் (இருவருமே நல்லவர்கள்) உடனே இங்கே என் சொந்த மகள், மகனிடம் இருக்க அனுப்பி வைத்தனர். நான் வந்து நான்கு மாதங்கள் ஆகிறது. கைவிரல் ரணம் ஆறிவிட்டது. மனதின் காயம் தான் ஆறவில்லை. 23 வருட தாம்பத்யம். இருந்தும் மனதில் ஒட்டவில்லை. திரும்பிப் போகப் பிடிக்கவில்லை. அவருடன் மறுபடியும் வாழ மனதிலும், உடம்பிலும் தெம்பில்லை. பாதுகாப்பு பயம் வேறு. இங்கேயோ மகன், மகள் இங்கேயே இருக்கும்படி நச்சரிக்கிறார்கள். ஆனால் மருமகள் பேசாமல் இருக்கிறாள். இங்கு நிரந்தரமாகத் தங்கவும் விருப்பம் இல்லை. பிறருக்கு பாரமாக என்றைக்கும், யாருக்கும் இருக்கக்கூடாது என்று நினைப்பவள் நான்.

என் கணவரின் மேல் வெறுப்பும் இல்லை. விருப்பமும் இல்லை. இருந்தும் ஒரு ஆசிரியையாக இருந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நான், கணவருடன் சேர்ந்து இருக்கப் பிடிக்காமல் என் கடமையிலிருந்து தவறுகிறேனோ என்று ஒரு மனசாட்சியின் குரல். என்ன செய்வ தென்றே புரியவில்லை. விசாவை மேலும் நீடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
----------

அன்பு சிநேகிதி

உங்கள் கடிதத்தின் மூலம் உங்களைப் பற்றி நிறைய, முழுதாக அறிய வாய்ப்பில்லை என்றாலும் உங்கள் பொறுமை, கடமை, அன்பு, குறிக்கோள் போன்றவை வெளிப்படுகின்றன.

உங்கள் கணவரைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வெறுப்புக் காட்டவில்லை. பாதுகாப்பு பயம் இருக்கிறது. மனதில் ஒட்டுதல் இல்லை. மனச்சாட்சி உறுத்து கிறது. இதற்கு எனக்குத் தெரிந்த மூன்று வழிகளைச் சொல்லிவிடுகிறேன்.

* உங்கள் பாதுகாப்பின் பொருட்டு விசாவை நீடிக்கச் செய்துகொண்டு மகன், மகள் என்று மாறி, மாறித் தங்கியிருக்கலாம். உங்கள் கணவரைப் பார்த்துக் கொள்ள அந்த மகன்தான் இருக்கிறானே.

* உங்கள் மனசாட்சியின் குரல் பெரியதாக இருந்தால் இந்தியா சென்று கொஞ்சம் தற்காப்பாக இருந்து கொண்டு உங்கள் கடமையைச் சேவையாக நினைத்து விருப்பு, வெறுப்பில்லாமல் தொடரலாம்.

* உங்கள் மனம் ஒட்டாமல் இருந்து, யாருக்கும் நீங்கள் பாரமாக இருக்க வேண்டாமென்றால் இந்தியா சென்று உங்கள் வாழ்க்கையைத் தனியாகத் தொடரலாம். உங்களுக்குச் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உண்டாக்கிக் கொண்டு உங்கள் கணவரையும் அடிக்கடி பார்த்துக் கொண்டு வரலாம். அவ்வப்போது இங்கேயும் வந்து போகலாம். தனியாக முதுமையில் வாழ்க்கையைத் தொடர, அதற்கென்று ஒரு மனத்திடம் வேண்டும். அது உங்களிடம் நிறைய இருக்கிறது.

எந்த முடிவு எடுத்தாலும் அதில் உங்களுக்கு மனஅமைதி கிடைக்குமா என்று பாருங்கள். அந்தச் சௌகரிய வட்டத்துக்குள் இருந்து கொண்டு மகிழ்ச்சியைத் தேடுங்கள். உங்கள் முடிவு உங்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தர என்னுடைய வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com